சிறுவாட்டு காசு – போட்டி கதை எண் -17

4.9
(22)

‘சிறுவாட்டு காசு’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு M.அருண்குமார்

                                          சிறுவாட்டு காசு

மயிலாம்பட்டி எனும் கிராமம் பொட்டல் காடும், கருவேல மரமும், உடலைக் கருக்கும் கடும் வெயிலும், புழுதிக்காற்றும் நிறைந்த கரிசக்காட்டு பூமி. இங்கு மயிலம்மாள் எனும் பெண், ‘விறகு வெட்டியான, வெட்டியானான’ மருதனுக்கு வாக்கப்பட்டு வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தாள். துன்பம் எனும் சொல்லிற்கு ஒரு உருவம் உண்டென்றால், அது இவள்தான் எனும் அளவிற்கு, ‘நாளும் துன்பம், பொழுதும் துன்பம்’. திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் ஒரு குழந்தை இல்லை. ஆனால், அந்தக் கவலை கொஞ்சமும் இல்லை, கொஞ்சம் காசு கிடைத்தாலும் குடித்துவிடும் மருதனுக்கு. அப்பா கண்ணையன் கட்டிய ஒரு ஓட்டு வீட்டையும் விற்று, குடி குடி என குடித்து, சேவல் சண்டை, சூதாட்டம் என இருந்ததை எல்லாம் அழித்த பெருமை இவனுடையது. பாவம் மயிலம்மாள், அப்பா இறப்பதற்கு முன் இவனை திருமணம் செய்து கொள்ள வற்புத்தியதால் கழுத்தை நீட்டிவிட்டாள். அப்போது மருதனின் அப்பாவும், அம்மாவும் இருந்தனர். வீடும் விற்கப்படவில்லை. அவர்கள் இறந்த பின்புதான், இவன் இப்படி மாறிவிட்டான். மயிலம்மாவாள் இவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கேட்டால் அடி உதைதான் மிஞ்சும். அப்பா இறந்த பின் இவளுக்கு உறவென்று ஒருவரும் இல்லை. தூரத்து மாமா ஒருவர் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் அவரையும் உதாசினப்படுத்தி மருதன் பேசியதால்,வருவதில்லை. ஆனால் சோடாக்கடை மணி தொலைபேசிக்கு அழைத்து வாரம் ஒரு முறை பேசுவார். அது மருதனுக்குத் தெரிந்திருந்தும் ஏதும் சொல்லவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் மாமா வீட்டுக்கு வரக்கூடாது அவ்வளவுதான். படிப்பறிவு இல்லையென்றாலும், உழைக்க நன்றாக கற்றுக்கொண்டாள் மயிலம்மாள். இவளுக்கு காட்டில் தெரியாத வேலைகளே இல்லை, எல்லா வேலையையும் சிறப்பாக செய்வாள். அதனால் இவளை காட்டு வேலைக்கு போட்டி போட்டு அழைப்பார்கள். தினமும் வேலைக்குச் சென்று கூலி இருநூறு ரூபா வாங்கறதுகுள்ள போதும் போதும்னு ஆகிரும். அதுல தினமும் மருதனுக்கு ஐம்பது ரூபா பங்கு தரனும். இல்லையினா இருக்கற காசும் போயி, அப்புறம் ஒருவேளை சாப்பாட்டுக்கும் வேட்டுதான். வீட்டில் எது இல்லாமல் இருந்தாலும் இருக்கலாம், நிம்மதி இல்லாம இருக்க கூடாது. ஆனா இவளோட வாழ்க்கையில நிம்மதி மறந்து கூட வாசல் வராது. இத்தனை துன்பத்திலயும், ஒரு வேளை அரிசி பொங்கி சாப்பிடுற பாக்கியம் இவளுக்கு கிடச்சது. ஆனா, அதையும் அந்த மருதன் விட்டுவைக்கல. ஒருசில நாள் நாய்க்கு சோறு வைக்கற, பறவைக்கு சோறு வைக்கறனு இருக்கற சாப்பாட்ட வெளிய கொட்டிருவான். அவன் இருக்கும் வரை அந்தச் சோற்றை பசியோடு பார்த்து கொண்டிருந்து, அவன் சென்ற பிறகு, அதை சாப்பிடும் அளவிற்கு கொடுமையை அனுபவித்தாள் மயிலம்மாள். இவள் சமைப்பது தினமும் இரவுதான். அடுத்த நாள் காலை அந்த சாப்பாட்டையே சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வாள். தினமும், காரக்குழம்பு, வத்தக்குழம்பு, கம்மஞ்சோறு, இதைத்தான் திரும்ப திரும்ப சமைப்பாள். காய்கறி எல்லாம் வாரம் ஒருமுறைதான். வேறு சாப்பாட்டுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏதோ அரசாங்கத்து ரேசன் அரிசியால இந்த சோறாவது இவளுக்கு கிடைச்சுகிட்டு இருந்தது. ஆனால் மருதன்,விறகு வெட்டிய காசை வைத்து, மாரி கடைக்குப் போய், சாப்பாடு சாம்பார், பொறியல்னு மதியம் சாப்பிடுவான். ராத்திரியில புரோட்டா, கோழி, முட்டைனு நல்லா தின்னுவான். இவன் சம்பாதிப்பதை எல்லாம் இப்படியே தின்னவும், குடிக்கவும் செலவழித்துவிடுவான். ஒரு ரூபாய் சேமிப்பு இல்லை. ஆனா மயிலம்மாள், அரை வயிறு கஞ்சி குடுச்சுகிட்டு, குடும்பத்து செலவையும் பாத்துகிட்டு, மாசத்துக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய சிறுவாரூர் வங்கியில போட்டு வைப்பாள். மயிலம்பட்டியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ளது சிறுவாரூர். மயிலம்மா இந்த ஊர்ல இருக்கற, சோமனந்தன் காட்டுக்கு வேலைக்கு வரும்போதுதான் வங்கியில காசு போட்டு வைக்கனும்கிற எண்ணம் வந்தது. அது நடந்து ஐந்து வருடம் ஆகிருச்சு. முதலில் ஐநூறு போட ஆரம்பிச்சு, இப்ப ஆயிரத்துல வந்து நிக்குது. சோமனந்தன் தான் இவள் வங்கியில் கணக்கு தொடங்க உதவி செய்தார். இது இத்தனை ஆண்டாய் மருதனுக்கு தெரியவில்லை. மருதனும் விறகு வெட்ட சோமனந்தன் காட்டுக்கு ஒரு சில நாட்கள் போவான். சோமனந்தன், மருதனைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், அவனிடம் வங்கிக் கணக்கைப் பற்றி எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டார். மயிலாம்மாள், வங்கிப்புத்தகத்தை சோமனந்தனிடமே கொடுத்து வைத்திருந்தாள். தேவைப்படும்போது மருதனுக்கு தெரியாமல், வங்கியில் வரவு செலவுகளை வைத்துக்கொண்டாள். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை அனாதைக் குழந்தைகள் காப்பகத்திற்கு கொடுத்தாள். தற்போது இரண்டு ஆண்டாக இதை செய்து வருகிறாள். குழந்தை இல்லாத ஏக்கத்தைப் போக்க இதைச் செய்தாள்.  இப்படியே மயிலம்மாவின் வாழ்க்கை தினமும் சுற்றும் கடிகாரத்தைப் போல ஒரு வட்டத்துக்குள்ள சுத்திகிட்டு இருந்துச்சு. சோமனந்தன் காட்டில் வேலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவரது கிணற்றில் தான் தண்ணீர் ஊற்று அதிகம் இருக்கும். அதனால் “ஏதோ தண்ணீர் உண்டு கிணற்றிலே, அதனால் வேளையும் உண்டு காட்டிலே” என்று வேலைக்கு வருவோர் அடிக்கடி சொல்லிக்கொள்வர். இவரிடம் நாற்பது ஏக்கர் உள்ளது. அறுபதுக்கும் மேற்பட்ட தென்னைமரம், மாமரம் எல்லாம் உண்டு.சொட்டுநீர் பாசனமே இவருக்கு கை கொடுத்தது.  நாற்பது ஏக்கரில், பத்து ஏக்கருக்கு வேப்பமரம் உள்ளது. அதிலிருந்து வேப்பங்கொட்டைடையை பொறுக்கவே நிறைய ஆட்கள் வேலைக்கு வருவர். அதுமட்டுமல்லாது தேங்காயை காயவைத்து, எண்ணெய் ஆட்டி விற்கும் வியாபாரத்தையும் பார்த்தார். வேப்ப எண்ணெய், வேப்பம்புண்ணாக்கு என அந்த வியாபாமும் ஒருபுறம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வேலை செய்வோருக்கு பத்தாயிரம் பணமும், இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற மளிகைப் பொருட்களையும் இவர் வழங்குவார். மயிலாம்மாவுக்கு பணம் மறைமுகமாக வழங்கப்படும். அதை அவள் வங்கி கணக்கில் போட்டு விடுவாள். ஆனால் இந்தமுறை, மருதன் சுதாரித்துக் கொண்டான். ஒவ்வொரு முறையும், ஏன் மயிலம்மாவுக்கு பணம் கிடைப்பதில்லை. மற்ற எல்லோரையும் விட இவள்தானே சிறப்பாக வேலை செய்வாள். ஆனால் ஏன் இவள் பெயர் எப்போதும் இதில் வருவதில்லை என்று சிந்தித்தான். மயிலம்மாவிடம் இதைப் பற்றி கேட்டான். அதற்கு அவள், நான் என்ன செய்ய முடியும். அவர், யார் சரியாக, சிறப்பாக வேலை செய்வதாக நினைக்கிறாரோ அவர்களுக்குத்தான் கொடுப்பார் என்றாள். உடனே மருதன், இது என்ன நியாயம், “விதைப்பது ஒருவன் அறுவடை செய்பவன் வேறு ஒருவனா” என்று கோவப்பட்டான். அதற்கு மயிலம்மாள், இத்தன வருசம் எங்க போன? இப்ப வந்து பெருசா அக்கறை இருக்க மாறி பேசற. போய் வேற வேலையப் பாரு என்றாள். மருதனுக்கு சந்தேகம் துளிர் விட்டது. நியாயமாகப் பார்த்தால் இவள் தான் கோவப்பட வேண்டும். சோமனந்தனிடம் கேட்க வேண்டும். ஆனால் இவள், தனக்கென்னங்கிற மாறில இருக்கா! ஏதோ இருக்கு என்று யோசித்தபடி, வழக்கம்போல் குடித்துவிட்டு மரத்தடியில் உறங்கினான். அடுத்த நாள் வழக்கம்போல் மயிலம்மா வேலைக்குச் சென்றாள். அங்கு வந்த சொமனந்தன்! மயிலம்மாவிடம், நான் இரண்டு வாரம் கொஞ்சம் வெளியே செல்ல வேண்டியுள்ளது. உன்னோட வங்கிப்புத்தகத்தை கொடுத்துவிட்டு செல்லலாம் என வந்தேன் என்றார். அவ்வப்போது இப்படி வெளியே செல்லும்போது வங்கிப் புத்தகத்தை கொடுத்துவிடுவார். மயிலம்மா அதை வாங்கி பத்திரமாக வீட்டில் வைத்தாள். புத்தகத்தை கையோடு எடுத்து வராமல் மறுநாள் வேலைக்கு வந்துவிட்டாள். எதிர்பாராத விதமாக மருதன் கண்ணில் அது பட்டுவிட்டது. அதைப் பார்த்ததும் அவனுக்கு கோவம் பீறிட்டு வந்தது. உடனே அதை எடுத்துக்கொண்டு வங்கிக்கு போனான். வங்கி அதிகாரியிடம், இது என்னோட மனைவி கணக்குதா, கொஞ்சம் எவ்வளவு பணம் இருக்குனு சொல்லுங்க என்றான். மனைவி எங்கே என்று கேட்டார் வங்கிஅதிகாரி. அதற்கு மருதன், அவளுக்கு உடம்புக்கு முடியல, அதா எவ்வளவு பணம் இருக்குனு பாத்துகிட்டா வயித்தியம் பாக்க உதவும்னு என்ன பாத்துட்டு வர சொன்னா! என்றான் மருதன். பார்த்த அதிகாரி, நாற்பதாயிரத்து எழுநூறு சொச்சம் இருக்குனு சொன்னார். மருதனுக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்லை. வங்கிய விட்டு வெளிய வந்தவன், “இன்னைக்கு இருக்கு அவளுக்கு! சிறுவாட்டு காசா சேக்கறா..! இன்னைக்கு ஒன்னு அவ இருக்கனும் இல்ல நா இருக்கனும்னு வேகமா வீட்டுக்குப் போனான். அவ எப்ப வருவானு கோவத்தோட காத்திருந்தான். மதிய நேரத்தில் வங்கி அதிகாரி சோமனந்தனின் தாயார் வல்லியம்மாவைப் பார்க்க காட்டுக்கு வந்தார். அப்போது வேலை செய்துகொண்டிருந்த மயிலம்மாவைப் பார்த்து, என்னம்மா உன்னோட புருசன்னு ஒருத்த வந்து, உனக்கு உடம்பு சரியில்ல, உன்னோட கணக்குல எவ்வளவு ரூபாய் இருக்குனு கேட்டுட்டு போறான். நீ இங்க வேலை பாத்துகிட்டு இருக்க என்றார். அதைக் கேட்டதும் மயிலம்மாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. இன்னைக்கு என்ன ஆகப் போகுதோ தெரியலியே என்று பயந்தாள். இப்படி வாழ்வதற்கு, இறப்பது மேல். நடப்பது நடக்கட்டும் என்று துணிந்தாள். வங்கி அதிகாரியிடம், என்னுடைய பணம் முழுவதையும் காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாள். உடனே வங்கிக்குச் சென்று பணத்தை அனுப்பிவிட்டாள். பின் வீட்டிற்குச் சென்றாள். அவள் வீட்டுக்குள்ளே வந்ததும், மருதன் கோவமாக கதவைப் பூட்டி, கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கு கயிற்றில் தொங்கவிட்டான். ஒரு துளி சத்தம் கூட போடாமல், முதன் முதலாக என் வாழ்க்கையில் நான் நினைத்தது நடந்துவிட்டது என்று, மகிழ்ச்சியாக மரணத்தை எதிர்கொண்டாள் மயிலம்மாள். மயிலம்மாள் இறந்த பின், மருதன் சத்தமாக அழுதான். அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள எல்லோரும்  வந்தனர். அவளது தூரத்து மாமாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மயிலம்மாவின் மாமா சந்தேகம் இருப்பதாக எண்ணி போலிசிடம் புகாரளித்தார். காவல் ஆய்வாளர், மருதனை சந்தேகத்தில்  கைது செய்தார். காவல் நிலையத்திற்குச் சென்ற வங்கி அதிகாரி, மருதனைப் பார்த்து, உன்னோட மனைவி வங்கிப் பணம் முழுவதையும் வழக்கமாக பணத்தை அனுப்பும் அனாதை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பிவிட்டாள். இவள் சேர்த்து வச்ச பணமெல்லா அந்தப்  பிஞ்சு குழந்தைங்களோட ஒருவேளை உணவுக்குத்தானோ தவிர, அவளுக்காக இல்ல. அந்தப் பணத்த மயிலம்மா உங்கிட்ட இருந்து பொத்தி பாதுகாக்காமல் இருந்திருந்தால், இன்று இத்தனைக் குழந்தைகளுக்கு இவள் அன்னையாக மாறி இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். உண்மையை அறிந்த பின் அவனை, அவனே வெறுத்தான். செய்த கொலையை ஏற்று தண்டனையை அனுபவித்தான். அவள் சேமிப்பும், செய்த பயனும் மருதனை மனிதனாக்கியது..

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 4.9 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

22 comments

  1. Rajasekar - Reply

    சிறந்த கதை நயம். மன உணர்ச்சி நிறைந்த படைப்பு

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!