‘கானல்’ என்ற சிறுகதையை எழுதியவர் கவிதா பிருத்வி
கானல்
என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க டி..
அப்படியா.. என்கிட்ட சொல்லவே இல்ல.. எந்த ஊரு மாப்பிள்ளை..
நீ காலேஜ் போயிருந்த.. திடீர்னு வந்தாங்கடி.. மாப்பிள்ளை சிவகாசி..
உனக்கு புடிச்சிருக்கா..
ம்..ம்.. அப்பா அம்மா நல்ல இடம்தான் நினைக்கிறாங்க. அவங்களுக்கு பிடிச்சிருந்தா சரி செய்ங்கன்னு சொல்லிட்டேன்…
நினைச்ச உடனே உன்ன பார்க்க முடியாதே.. இரண்டு மணி நேரம் பஸ்ல வரணுமே..
பரவாயில்லை டி..
நீ நல்லா இருந்தா போதும்னு, சொல்லிட்டு தன் விரலில் இருந்த ஒரு வெள்ளி மோதிரத்தை கழட்டி அபிநயா கையில் போட்டு விட்டாள் ஹேமா.
அபியும் ஹேமாவும் பக்கத்து பக்கத்து வீடு.. ஒரே வயது.. ஒரே பள்ளி.. ஒரே வகுப்பு.. என்று இருவரும் இணைபிரியா தோழியர் ஆகினர். அபிக்கு கண்படும் அளவிற்கு நீளமான முடி.. பாவாடை தாவணியில் இருவருமே அழகுடையவர்கள்..
வசதியில் ஹேமா உயர்ந்தவள் தான்.. அவள் அப்பா பலசரக்கு கடை வைத்திருந்தார். அம்மா இல்லை. அவள் எது கேட்டாலும் தட்டாமல் கிடைக்கும். எது வாங்கினாலும் அபியிடம் தான் முதலில் கொண்டுபோய் காட்டுவாள்.அவளுக்கு தராமல் எதையும் சாப்பிடக்கூட மாட்டாள்.
ஹேமாவிற்கு மேலே படிக்க ஆசை.. அப்பாவிடம் சொல்லி, காலேஜில் சேர்ந்தாள். தினமும் காலேஜிலிருந்து வந்ததும், அங்கு நடந்ததை அபியுடன் பேசி, சிரித்து அரட்டை அடிப்பாள்.
அபி அப்பா முத்தையாவிற்கு கூலி வேலைதான்.. இருந்தும் தன் மகளை 12 ம் வகுப்பு வரை படிக்க வைத்தான். தம் வசதிக்கு தகுந்த மாப்பிள்ளை பார்க்க தொடங்கினான். வேலை செய்யும் இடத்தில், தெரிந்தவர் மூலம்தான் அபிக்கு மாப்பிள்ளை அமைந்தது. மாப்பிள்ளைக்கு பட்டாசு ஆலையில் சூப்பர்வைசர் வேலை.. தன்னைவிட வருமானம் அதிகம்.. அப்பா அம்மா இல்லை.. பூர்வீக சொத்திலிருந்து, சின்னதா சொந்தமா வீடு இருக்குன்னு, முத்தையாவுக்கு ரொம்ப சந்தோஷம். ஏதோ நம்ம கஷ்டப்பட்டாலும், ஒன்னே ஒன்னு னு பெத்து வளர்த்த மக, நல்லா இருப்பான்னு நிம்மதி அடைந்தான் முத்தையா.
பலசரக்கு கடை அண்ணாச்சி கிட்ட கல்யாண செலவுக்கு கடனாக கொஞ்சம் பணம் கேட்கணும்னு,தன் மனைவி காத்தாயிகிட்ட சொல்லிட்டே தூங்கி போனான்.
மறுநாள் காலையிலேயே அண்ணாச்சிய பார்க்க முத்தையா, ஹேமா வீட்டுக்கு போனான்.
வாங்க வாங்கனு கூப்பிட்ட படியே, அபிக்கு கல்யாணம் முடிவாயிடுச்சுன்னு ஹேமா சொன்னா.. ரொம்ப மகிழ்ச்சி முத்தையா.. என்ன உதவினாலும் தயங்காம கேளுங்க, என்னால முடிந்ததை செய்கிறேன் என்றார் அண்ணாச்சி.
அன்றாடம் மிச்சம் பிடிச்சு, அவ அம்மா மூணு பவுனுக்கு செயினும், தோடும் எடுத்து வச்சிருக்கா.. கல்யாண செலவுக்கு தான் கொஞ்சம் பணம் தேவைப்படுது அண்ணாச்சி..
தயங்காம கேளுங்க முத்தையா..
ஒரு லட்சம் இருந்தா, இழுத்து புடிச்சு முடிச்சிருவேங்க அண்ணாச்சி..
சரி முத்தையா, இன்னைக்கு வசூல் முடிச்சிட்டு வந்து தரேன்..
எப்படி சமாளிக்க போறோம் னு மலைத்து போய் இருந்தேன். இப்பதான், எப்படியும் நல்லா செஞ்சிடலாம் நம்பிக்கை வருது.. சாயங்காலம் வரேன் அண்ணாச்சி..
சரி முத்தையா போயிட்டு வாங்க..
வீட்டுக்கு வந்து காத்தாயி கிட்ட,, அண்ணாச்சி பணம் தரேன்னு சொல்லிட்டாங்க புள்ள.. நம்ம அபி கல்யாணத்த ஜமாய்சிடலாம் என்றான்.
காத்தாயி இடைமறித்தாள்.. பணம் கிடைக்குதேனு, தடபுடலா ஏதும் இழுத்து விட்றக்கூடாது யா.. எதுவும் சிக்கனமா செய்யணும். இனி தான் நாம பொறுப்பா இருக்கனும். சீக்கிரம் கடனை அடைக்கனும் யா..
நீ சொல்றதும் சரிதான் புள்ள.. நீ எப்படி சொல்றியோ அப்படியே செய்வோம் என்றபடியே வேலைக்கு கிளம்பினான் முத்தையா.
மாலை வீடு திரும்பியதும், அண்ணாச்சி கடைக்கு போனான் முத்தையா..
வாங்க முத்தையா.. நானும் இப்பதான் கடைக்கு வந்தேன். ஒரு சின்ன சங்கடம்.. நீங்க கேட்ட அளவு பணம் வசூல் ஆகல.. 70,000 இருக்கு, வச்சிகோங்க..
கல்யாணத்துக்கு தேவையான பலசரக்கு சாமான் நம்ம கடையிலிருந்து போட்ருவோம்..
சரி அண்ணாச்சி..
இந்த அளவுக்கு எங்களுக்காக முயற்சி செய்து தந்திருக்கீங்க.. கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைச்சிருவோம்..
ரொம்ப நன்றி அண்ணாச்சி..
சரி முத்தையா.. பார்த்து செலவு பண்ணுங்க..
சரி அண்ணாச்சி..
வீட்டுக்கு வந்ததும், காத்தாயிடம் பணத்தை கொடுத்து, அப்பன் ஆத்தா படத்துகிட்டே வை புள்ள.. நாளைக்கு ஒரு அம்பது பத்திரிக்கை அடிக்க கொடுத்திடுவோம். இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு என்றான் முந்தையா.. விறுவிறுவென்று வேலைகள் நடந்தன.
அபி.. உன்னோட பட்டு சேலை சட்டையை கொடு.. பிளவுஸ் தச்சு வாங்கி தரேன்னு ஹேமா வாங்கிட்டு போனா. அப்படியே அவளுக்கு மருதாணி போடுவதிலிருந்து, சடை பின்னி, அலங்காரம் செய்து, மணமேடையிலும் அவள் அருகிலேயே இருந்தாள் ஹேமா.
மறு வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது.. பெரியவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய அபி, ஹேமாவை, மாப்பிள்ளை முத்துவிடம் அறிமுகப்படுத்தினாள்.
“அபியை நல்லா பார்த்துக்கோங்க அண்ணே’.. சொல்லும் போது அழுகை வந்தது ஹேமாவிற்கு..
இதுவரை பிரிவை சந்தித்திராத தோழிகள், பிரிவை சந்திக்கும் நேரம் வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி அழுது தீர்த்தனர்.
இந்தாடி உன் மோதிரம்..
போடி இவளே.. இது எப்போதும் உன் கையிலேயே இருக்கனும்.. என் ஞாபகமா.. சரியா என்றாள்.
சரி என்றாள் அபி அழுதபடி..
கந்தக பூமி.. சிவகாசி.. குட்டி ஜப்பான்.. வெள்ளந்தியான மனிதர்கள்.. சுறுசுறுப்பான உழைப்பாளிகள்..
திருமணம் ஆகி ஓரிரு மாதத்திலேயே, ஊரையும் சுற்றத்தாரையும், அதற்கும் மேலாக அவளிடம் அன்பாக இருக்கும் கணவனையும் அபிக்கு மிகவும் பிடித்துப் போனது.
அன்று காலை எழும்போதே லேசான மயக்கம்.. குமட்டல் ஆக இருந்தது அபிக்கு… காலண்டரை பார்த்தாள். நாள் தள்ளிப் போய் இருக்கு..
என்னம்மா ஒரு மாதிரி இருக்க, மேலுக்கு ஏதும் சொகமில்லையா ன்னு, ஆதரவா கேட்ட முத்துவை, பூரிப்பாய் பார்த்து விஷயத்தைச் சொன்னாள்.. மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அம்மாவுக்கு போன் போட்டு பேசினாள் அபி..எவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு..
நாளை கவனிக்காம இருந்திருக்கு இந்தப் புள்ள.. மூணு மாச கணக்காச்சி.. போய் பார்த்துட்டு வந்துடலாம் என முத்தையாவை நச்சரிக்கத் தொடங்கினாள் காத்தாயி. ஹேமா, எனக்கும் லீவுதான் நானும் வரேன்னு கிளம்ப,
சரி சரி எல்லோரும் சேர்ந்து நம்ம வண்டியிலேயே போயிட்டு வந்திருங்க.. நாளைக்கு மதியமா டிரைவர் சொல்றேன் என்றார் அண்ணாச்சி.
காத்தாயி, அபிக்கு பிடித்த பலகாரத்தை செய்து வைத்தாள். ஹேமா, அபிக்கு பிடித்த ஜாதி பூவை உதிரியாக வாங்கி நெருக்க கட்டி எடுத்து வைத்துக் கொண்டாள். அபிய பார்க்கப்போகும் மகிழ்ச்சியில் உறங்கி போனார்கள்.
என்ன அபி காலையிலேயே பரபரப்பா இருக்க..
ஆமா மாமா.. இன்னிக்கு மதியத்துக்கு ஊர்ல இருந்து, அம்மா, அப்பா, ஹேமா வராங்க இல்ல.. அதான் என்ன செய்யனே புரியல மாமா..
ஒன்றரைக் கிலோ கறி வாங்கியாரேன், குழம்பு வச்சிர்றியாம்மா,.
சரி மாமா.. நீங்களும் சாப்பிட வந்துருங்க மாமா என்றாள் ஆசையாய்..
இல்லம்மா தீபாவளி நேரம் நெருங்குது, வேல நிறைய கிடக்குது என்ற அவனை ஆசையாய் கட்டிக்கொண்டாள்.
சமைத்து முடித்து மணியை பார்த்தாள்.. 12 30. அவங்க ஊர்ல இருந்து வர இரண்டரை மூணு ஆகும். அதுக்குள்ள மாமாவுக்கு போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தா என்ன? என்று தோன்றிய உடனேயே கிளம்ப ஆயத்தமானாள். மாமாவுக்கு கறி குழம்புனா ரொம்ப பிடிக்கும். சாப்பாடு எடுத்துட்டு போனா, எவ்வளவு சந்தோஷப்படுவாங்க என்று எண்ணியபடியே, பக்கத்து வீட்டு ஆட்டோக்கார அண்ணனின் ஆட்டோவில் கிளம்பினாள் அபி..
அரை மணி நேர பயணம்.. பொட்டல் காடாக இருந்தது.. பட்டாசு தொழிற்சாலை தனியே உள்ளே தள்ளி இருந்தது. இறங்கி நடந்தாள்.. அபியை எதிர்பாராமல் கண்டதும், முத்துவுக்கு தலைகால் புரியவில்லை. இந்த புள்ளைக்கு தான் என் மேல எம்புட்டு பாசம்.. எனக்கு அம்மா இல்லாத குறையே தெரியாம பண்ணிட்டாளே ன்னு, சந்தோசபட்டு கிட்டு, என்ன புள்ள நீ.. உன் உடம்பு பத்தி நினைக்காம, இப்படி வெயில்ல வர்றியே.. நைட்டு வந்து சாப்பிட்டுக்க மாட்டேனா என்று செல்லமாக கடிந்து கொண்டான் முத்து.. அவளின் நெற்றி வியர்வையைத் துடைத்து விட்டான். உள்ள உட்காரு புள்ள.. இதோ கைய கழுவிட்டு வரேன் என்று வெளியே போய், கை கழுவும் போது..
பயங்கரமான வெடிச்சத்தம் உள்ளிருந்து..
எம்மாடி… எம் புள்ள அபிஈஈ…
காற்றில் குரல் தேய்ந்தபடி., உள்ளிருந்து வெளியே ஓடி வருபவர்களை தள்ளிவிட்டு, அபியைத் தேடி உள்ளே ஓடினான் முத்து..
கும்மாளமாய் காரில் சிவகாசியை வந்தடைந்தனர். வீடு பூட்டி இருக்கவே, அருகில் இருப்பவர்களை கேட்க, அவங்க மாமாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போச்சும்மா, இன்னும் காணோம் என்றனர்.
சரி நம்மளும் அங்க போவோம். மாப்பிள்ளையும் பார்த்த மாதிரி இருக்கும். அபிய நம்ம கூட்டிட்டு வந்துடலாம்னு முத்தையா சொல்ல, கிளம்பினார்கள்.
கார் அங்கே நிற்கும்போது.. கந்தக பூமி நெருப்பு பிழம்பாக, ஓலங்களுடன் காட்சியளித்தது. அனைவரும் சுதாரிக்கும் முன் என்னவோ ஏதோ என்று அழத் துவங்கினர் காத்தாயியும் ஹேமாவும்..
சும்மா இருங்க ரெண்டு பேரும்.. நம்ம பிள்ளைக்கும் மாப்பிள்ளைக்கும் ஒன்னும் ஆகிருக்காது.. அவ கிளம்பி இருப்பா இங்கிருந்து.. என்று முத்தையா சொல்லியபடியே, பக்கத்தில் இருந்த ஆம்புலன்ஸ் அருகில் செல்ல,மொட்டையாய் ஒரு உருவம்,இன்னொருவரின் கரியான கையை பிடித்தபடி இருந்தது…
நான் ஏன் இதைப் பார்க்கிறேன்..
என் பிள்ளைக்கு எவ்வளவு நீளமுடி.. இது நம்ம பிள்ளைகளா இருக்காதுன்னு மனசு சொன்னாலும்,
முத்தையா பதட்டமானான்
ஹேமா இறங்கி முத்தையாவை விலக்கி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடிவர, ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த அந்த மொட்டை உருவத்தின் இன்னொரு கை வயிற்றின் மேல் இருந்தது.. அதில் ஜொலித்தது, அவள் போட்ட வெள்ளி மோதிரம்.
அபிஈஈஈஈ.,…
ஹேமாவின் அலறலில் கந்தக பூமி அதிர்ந்தது..
இது போன்ற நிகழ்வுகள் தொடர்கிறது. இதில் அரசு தலையிட்டு முன்தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மீடியாவிற்கு ஒரு சாமானியன் பேட்டி கொடுத்து கொண்டிருந்தான்.
நிறைவு பெற்றது.
7 comments