‘ஓணான்’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு ரக்ஷன் க்ருத்திக்
ஓணான்
“வெயில்ல சுத்தாம ஒழுங்கா வீட்டிலேயே இருக்கனும்” என்று என் அம்மா கண்டிப்புடன் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றிருந்தார். அதனால் வெளிய எங்கேயும் செல்லாமல் வீட்டிலயே இருந்தேன். எனது நண்பன் செந்தில் என்னை தேடிக்கொண்டு எனது வீட்டிற்கே வந்தான். அவனது தாத்தாவிற்கு ஓணான் வேண்டும் என்றும் ஓணான் பிடித்துக் கொடுத்தால் ஓணான் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் தருவதாகவும் சொன்னான். செந்திலின் தாத்தா ஒரு நாட்டு வைத்தியர் அவர் ஓணானை பிடித்து அதை கொன்று தோலை உரித்து இஞ்சி, பூண்டு சேர்த்து உரலில் போட்டு இடித்து சாறு பிழிந்து பச்சையாகவே கொடுப்பார். அது முதுகுத்தண்டு வலிக்கு மற்றும் கை, கால் உளைச்சலுக்கு சிறந்த மருந்து என்றும் சொல்லுவார். தினமும் வெளியூரில் இருந்து அவரை தேடிக்கொண்டு ஆட்கள் வந்த வண்ணமாக இருப்பார்கள். அவர் கையில் பணம் இருந்து விளையாடும். அடிக்கடி செந்தில் அவனது தாத்தாவின் பையில் இருந்து காசு திருடிக்கொண்டு வந்து கல்யாணிபுரம் சாங்கோ திரையரங்கத்துக்கு படம் பார்க்க கூட்டிட்டு போவான். ஒரு முறை வீட்டுக்கு தெரியாமல் படம் பார்க்க போயிட்டு வந்தது என் அம்மாவுக்கு தெரிந்து விட்டது. அன்று அம்மாவிடம் துடப்பத்தால அடி வாங்கினேன். காசு கிடைக்கும் என்ற ஆசையில் அம்மாவின் பேச்சை காற்றில் பறக்கவிட்டுட்டு சென்றேன். இருவரும் ஓணான் பிடிப்பதற்காக ஒரு நீண்ட குச்சியில் ஒரு சுருக்கு கயிற்றை கட்டி கொண்டு ஓணான் பிடிக்க கிளம்பினோம். இதற்கு முன் ஒரு நாள் செந்தில் ஓணான் மூலமாக காசு வருகிற வேறு ஒரு வழியையும் சொல்லியிருக்கிறான். ஓணானை பிடித்து கொன்று மண்ணுக்குள் புதைத்து வைத்துவிட்டு மூன்று நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் காசு இருக்கும் என்று சொன்னான். நான் எப்படி காசு வருமென்று கேட்டதற்கு அவன் “சீதையை இராவணன் துக்கிட்டு போனப்ப இராமன் சீதையை தேடி அலையும் போது ராமருக்கு தாகம் எடுத்திருக்கு. அப்ப இந்த ஓணான் இராமருக்கு மூத்திரம் பெய்து கொடுத்ததாம். அணில் ராமருக்கு இளநீர் கொடுத்ததாம். அதனால இராமர் அணிலோட முதுகு மேல வருடி கொடுத்துட்டு போனாராம். அதுதான் அணில் முதுகுல மூன்று கொடு இருக்குதாம். ஓணான கொன்று புதைத்துவிட்டு மூன்று நாள் கழித்து தோண்டிப் பார்த்தால் அந்த இடத்தில இராமரே காசு வைப்பாரு” என்று சொன்னான். இதை அவனுக்கு வெளி ஊரில் இருக்கின்ற அவனது அத்தை மகன் செய்து பார்த்த போது அவனுக்கு இருபது காசு கிடைத்ததாக சொன்னான்.
நானும் அவனும் சேர்ந்து ஒரு ஓணானை பிடித்து கொன்று புதைத்து வைத்துவிட்டு சென்றோம். மூன்று தினங்கள் கழித்து வந்து ஓணானை புதைத்த இடத்தை திறந்து பார்த்தோம். ஓணான் மட்டும் அழுகின நிலையில இருந்தது காசு ஏதுமில்லை. காசு இல்லையே என்று கேட்டதற்கு “நாம ஓணான கொன்ற விஷயத்த இராமருக்கு சித்திரக்குப்தன் கணக்கு சொல்லியிருக்க மாட்டார்னு நினைக்கிறேன்.” என்றான். எங்க போய் இதையெல்லாம் தெரிஞ்சிகிட்டு வருவான்னு தெரியாது. மாதத்திற்கு ஒரு முறை சிங்கார தோப்புங்கர ஊருல இருக்கற அவனுடைய அத்தை வீட்டுக்கு சென்று வருவான். சென்று வரும்போதெல்லாம் இப்படி ஏதாவது புதுசு புதுசா சொல்லுவான்.
ஓணானை கொன்று புதைத்த இடத்தில் காசு இல்லாமல் போனது. செந்தில் என்னை விட்டுட்டு தனியாக சென்று காசை எடுத்துவிட்டு என்னிடத்தில் நாடகம் ஆடுகிறானோ! என்று ஒரு சந்தேகம் எனக்குள் இருந்தது. செந்தில் தானே என்னிடத்தில் வந்து சொன்னான் ஓணானை கொன்று புதைத்தால் காசு இருக்குமென்று செந்திலின் அத்தை மகனுக்கு கிடைத்த காசு எங்களுக்கு மட்டும் எப்படி இல்லாமல் போனது. என்றதொரு கேள்வி எனக்குள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அந்தக் கேள்விக்கான யோசனை எனக்குள்ளே இப்படி ஒரு வஞ்சக எண்ணத்தை விதைத்து விட்டது.
மறுநாள் காலையில் நான் கருவை காட்டுக்குள் மலம் கழிக்க சென்றேன். கழித்து முடித்துவிட்டு பூனை மலம் கழித்துவிட்டு அதை மண்ணால் மூடி விட்டு செல்வதை போல நானும் எனது மலத்தை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்ப நினைத்த போது எனக்குள் ஒரு எண்ணம் உதித்தது அதை செயல்படுத்த வேண்டி அதே போல பொய்யாக ஏழு மணல் மேடுகளை வரிசையாகவும் சமமான முறையிலும் உருவாக்கினேன். ஆக மொத்தம் எட்டு மணல்மேடுகள் உருவானது. அதேபோல் முற்றிலும் போலியாக இன்னும் ஒரு வரிசை மணல் மேடுகளை அதே போல் சமமான முறையில் உருவாக்கினேன். பின்னர் வீட்டிற்கு சென்று கால் அலம்பி விட்டு செந்திலை தேடி அவனது வீட்டிற்கு சென்றேன். கந்தசாமி தோட்டத்தில் கடலை எடுக்கிறார்கள். அங்கே சென்றால் கடலை சாப்பிடலாம் என்று சொல்லி அவனுக்குள் கடலை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அழைத்து சென்றேன். தந்திரமாக நான் மலம் கழித்து மூடி வைத்துவிட்டு வந்திருந்த பாதை வழியே எதுவும் அறியாதவனைப்போல அவனை அழைத்து சென்றேன். அவன் நடக்கப்போகிற விபரீதம் எதையும் அறியாமல் என்னோடு வந்து கொண்டிருந்தான். சம்பவ இடம் வந்ததும் நான் உருவாக்கி வைத்திருந்த மண் மேடுகளை காட்டி “யாரோ மண் மேடுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அவற்றை நாம் களைத்துவிடுவோமா?” என்றேன். அவன் மிகுந்த ஆர்வமுடன் “சரி” என்றான். நான் எனது பாதி எண்ணம் நிறைவேறிய சந்தோசத்தில் போலியான மண்மேடை காட்டி “நான் இந்த பக்கம் இருக்கற மண் மேடை களைக்கிறேன். நீ அந்தப் பக்கம் இருக்கிற மண் மேடை களைத்து விடு. ” என்றேன். செந்தில் எனது சூழ்ச்சி தெரியாததால் மறுப்பேதும் சொல்லாமல் அந்த மண் மேட்டின் அருகே சென்று அவன் முதலில் ஒவ்வொன்றாக களைக்க ஆரம்பித்தான். நானும் மண்மேடை ஒவ்வொன்றாக களைத்தேன். அவன் மண் மேடை வேக வேகமாக களைத்துக்கொண்டிருந்தான். அந்த கடைசி மண் மேட்டை அழிப்பதற்காக அதை நோக்கி பயங்கர ஆக்ரோசமாக துள்ளி குதித்தான். நான் நடக்க போகிற விபரீதத்தை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கால் வைத்த அதே வேகத்தில் வழுக்கி கீழே விழுந்தான். அவன் உடலெங்கும் மலம் பரவியிருந்தது. அதைப்பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அவன் அழுது கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.
என் அம்மா கையில் துடைப்பத்துடன் ஊரெங்கும் தேடிக்கொண்டு அழைந்ததை கொக்கலி மண்டையன் வந்து என்னிடம் சொன்னான்.
நான் மாலை நேரத்தில் என் வீட்டிற்கு பதுங்கி பதுங்கி சென்றேன். என் அம்மா, அப்பாவிடன் நான் செய்த சேட்டையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்
அப்பா “ சிறு சின்ன வயசுல நான் அவன் அப்பன மலத்தில் போட்டு உருட்டினேன். இப்ப என் மகன் அவனோட மகன மலத்துல உருட்டியிருக்கான். இது அந்த பயலோட அப்பனுக்கு புரிஞ்சிருக்கும். நீ என் பிள்ளைய அடிக்க ஊரெல்லாம் தேடி அலைஞ்சிருக்க காலையில வீட்டை விட்டுப் போனவன் இன்னும் சாப்பிட வரலன்னு சொல்ற?” இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நான் வீட்டுக்குள் நுழைந்தேன். அம்மா என்னிடத்தில் எதுவும் பேசாமல் சாப்பாடு போட்டார். சாப்பிட்டு முடித்ததும் படுக்கைக்கு சென்றேன். பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு என் அருகில் வந்து படுத்த அம்மா “நீ அந்தப் பையன் மேல் மலத்தை வீசவில்லை, என்மேலதான் வீசிட்ட. அவங்க அம்மா என்னைப் பார்த்து என்ன புள்ள வளர்த்திருக்கன்னு சொல்லி பேசும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? நானே அந்த மலத்துல உருண்டதை போல இருந்தது.” என்றார். என்னால் என் அம்மாவிடம் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
அதன்பிறகு செந்தில் ஒருவாரமாக என்னோடு பேசவில்லை. இன்றுதான் என்னை தேடி வந்திருக்கிறான். அதனால்தான் அம்மாவின் பேச்சை காற்றில் பறக்க விட்டுட்டு அவனோடு சென்றேன்.
நிறைவு பெற்றது.
2 comments