‘எப்போதும் பெண் ‘ என்ற சிறுகதையை எழுதியவர் திரு ராம்பிரசாத்.
எப்போதும் பெண்
“நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண்ணுடன் அந்தரங்க உறவில் இருந்த எண்ணமே இல்லை இப்போது எனக்கு” என்றபடியே கலைந்து கிடந்த ஆடைகளை அணிந்தபடி சலித்தான் செல்வம்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் திணறி, அவன் அறையை விட்டு வெளியேறிவிட்ட பிறகு எழுந்து நிலைக்கண்ணாடி முன் நிர்வாணமாய் நின்று தன் மென்னுடலை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை அவதானித்தாள் அஞ்சலி.
வட்ட முகம். கூர்மையான நாசி. பெரிய கண்கள். அகண்ட தோள்கள். விம்மிய மார்புகள். சிருத்த இடை.
‘இப்படித்தானே ஆண்கள் பெண்களை எதிர்பார்ப்பார்கள்? அப்படித்தானே நாமும் இருக்கிறோம். பிறகு ஏன் செல்வம் அப்படிச் சொன்னான்?’ அஞ்சலி யோசனையாக எழுந்தாள். தலை சுற்றி வந்தது. லேசாகக் குமட்டியது. சட்டென எல்லாமும் மந்தமாகிவிட்ட ஒரு உணர்வு. சற்றைக்கெல்லாம் ஞாபக மறதி போல் அதுகாறும் செல்வத்துடன் கழித்த நொடிகளில் பல மறந்து போயின. கொஞ்சமே நினைவிருந்தது. பெரும்பகுதி மறந்துபோயிருந்தது.
‘இந்த உடல் உபாதைகளுக்கெல்லாம் என்ன காரணம்?’
யாரிடமாவது கேட்கலாமென்று தோன்றியது. செல்வத்துடன் இன்னும் முறையான உறவு உருவாகவில்லை என்பதால் எவரிடம் பகிர்ந்தாலும் பிரச்சனையாகும் என்று தோன்றியது. புதிய உலகில் எவரும் எவருடனும் உறவுகொள்ளலாகாது என்று விதி இருந்தது. அதிலும் வயதில் மூத்தவர்களுடன் கூடவே கூடாது. செல்வத்துக்கு அஞ்சலியை விட பத்து வயது அதிகம். ஆனால் , விதிகளை மீறுவதில் தானே சபலமும், சாகசமும், இன்பமும்.
அபியின் நினைவு வந்தது. அபி ஒரு மன நல மருத்துவர் , ஆராய்ச்சியாளர் என்பதையெல்லாம் தாண்டி, அஞ்சலிக்குத் தாய். அவளிடம் பகிர்ந்துகொள்வது பாதுகாப்பானதாக இருக்குமென்று தோன்றியது. அபியை அவளின் அறையில் சந்தித்தாள் அஞ்சலி. அன்றைய தினத்தில் செல்வத்துடன் நடந்தது குறித்து பகிர்ந்து கொண்டாள்.
“முதலாவதாக நீ விதிகளை மீறியிருக்கிறாய். உன் வயதொத்த ஒரு ஆண் கூடவா உனக்குப் பிடிக்கவில்லை?” என்றாள் அபி.
“செல்வத்தை இன்று காலையில் தான் முதன் முதலாகப் பார்த்தேன், அம்மா. பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அப்போது விதிகள் குறித்து யோசிக்கவில்லை. நான் அவனை அணுகினேன். அது படுக்கை வரை வந்துவிட்டது” என்றாள் அஞ்சலி.
“சரி. நான் உன்னைப் பிறகு சந்திக்கிறேன். எனக்கு மரியம் உடன் ஒரு அவசர சந்திப்பு இருக்கிறது. செல்வத்துடனான உன் உறவு குறித்து நீ யாரிடமும் சொல்லிவிடாதே” என்றாள் அபி.
சரி என்பதாய் தலையை ஆட்டிவிட்டு அரை மனதுடன் எழுந்து போனாள் அஞ்சலி.
பின்னாலேயே மரியம் அபியின் அறைக்குள் நுழைந்தாள்.
“எதிர்கால சந்ததிகளை எதிர்கொள்ள ஒரு திட்டம் இருப்பதாகச் சொன்னாயே? என்ன அது?” என்றாள் மரியம்.
“ஒரு போரைப் போல் நடந்து முடிந்திருக்கிறது சூரியனின் வெஞ்சினம். பூமி மொத்தமும் அடுப்பில் வைக்கப்பட்டது போல் பொறித்தெடுக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கில் உயிர் பலிகள். இதை ஒரு வகையில் பூமி மீண்டிருக்கிறது என்று கொள்ள வேண்டும். உயிருடன் எஞ்சியுள்ளவர்களைக் கணக்கெடுத்ததில் சற்றேரக்குறைய மூன்றாயிரம் பேர் எஞ்சினார்கள். சரிக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள். ஆனால், மருத்துவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் பெண்களே எஞ்சியிருப்பது நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு. புதிய உலகின் விதிகளைத் தீர்மானிக்கும் கட்டத்தில் இருக்கிறோம்.” என்றாள் அபி.
“ஒரு மருந்தை பெண்களுக்கு மட்டுமென நீ கடந்த ஒரு மாதமாய்ப் பரிந்துரைத்திருப்பதைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன் அபி. அது என்ன மருந்து? பெண்களில் சிலர் இந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு லேசாக தலை சுற்றல் வருவதாகப் புகார் செய்திருக்கிறார்கள். பலருக்கு பெண்களின் பிரத்தியேக குணாதிசயங்கள் காணாமல் போய்விட்ட பிரஞை இருக்கிறது. கூடிக் கூடிப் பேசுபவர்கள் எதையும் பேசுவதில்லை. அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்” என்றாள் மரியம்.
“பெண்ணினப் பண்புகளை நீக்குதல்” என்றாள் அபி.
“அப்படியானால்?”
“எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், பெண்களுக்கே உரித்தான மென் உணர்வுகளுக்குக் காரணமான ஜீன்களை மட்டுப்படுத்துவது.”
“என்ன சொல்கிறாய்?”
“மரியம், பெண் ஏன் அடிமையானாள் என்று நினைக்கிறாய்? பெண் மொழித்திறன் வாய்ந்தவளாக இருந்தாள். ஆனால், ஆண் அப்படி அல்ல. அவன் உலகில் பேச்சுக்கே இடம் இல்லை. தன்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து அவனுக்கு எவ்வித அக்கறையும் இருக்கவில்லை. முயக்கத்திற்கு பெண் தயார் செய்யப்பட வேண்டி இருந்தது. சமூகமென்னும் கட்டமைப்பில் பல் வேறு நாடகங்களால் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஆண் பல்வேறு வழிகளில் அவளை அடைய முயல்வதை அவளின் மொழித்திறன் வாய்ந்த மனம் கண்டும் காணாதது போல் ரசிக்கும். அதைக் காதல் என்று கொண்டாள். ஆனால், ஆணுக்கு அப்படி இல்லை. காதல், அவனைப்பொறுத்தவரை கலவிக்கான ஒரு ஏற்பாடு மட்டுமே. ஆதலால் அவன் பெண்ணை தயார் செய்ய, அவளைத் தனக்கே தனக்கென்று இருத்தி வைக்க பல வித கட்டமைப்புகளை உருவாக்கி வைத்தான். பிற்பாடு அந்தக் கட்டமைப்புகள் அரசியல், பொருளாதாரம் என்று விரிவடைந்தது.”
“ஆக, பெண்களின் இந்த மொழித்திறன் தான் அவளை அடிமையாக்கியது. அதை நான் பலவீனப்படுத்த நினைக்கிறேன். அதைச் செய்யும் மருந்து அது. ஆண் போல் அது சட்டென தயாராகி, தேவை முடிந்தவுடன் அடுத்த கட்டம் சென்றுவிடும், இதனால், ஆண்களால் பெண்களை இனி ஏமாற்றவே முடியாது.” என்றாள் அபி.
அபிக்கு அஞ்சலியின் நினைவு வந்தது.
“கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது சரியாக வருமா?” என்றாள் மரியம்.
“முதற்கட்டமாக சோதனை முயற்சியாக பெண்களுக்கு இந்த மருந்தைத் தர ஆரம்பித்திருக்கிறேன். அதன் பின் விளைவுகள் வரவேற்கப்படவேண்டியவை” என்றாள் அபி.
“எல்லாம் சரியாகச் சென்றால் சரி தான். ஆனால், எதிர்பாராத விதமாக உயிர்ச்சேதம் ஆகிவிட்டால்? நம்மிடம் மொத்தமே மூன்றாயிரம் உயிர்கள் தான் இருக்கிறார்கள். இவர்களை வைத்துத்தான் எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டி இருக்கிறது” என்றாள் மரியம்.
“அதுவும் சரிதான்” என்ற அபி சிந்தனையில் ஆழ்ந்தாள்.
“அதற்கு நான் ஒன்று சொல்கிறேன். நம்மிடம் சிமுலேஷன் மென்பொருள்கள் இருக்கின்றன. மருந்துகளை மனிதர்கள் மீது பயன்படுத்தாமலேயே அவர்களின் உடற்கூடு அந்த மருந்துகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்” என்றாள் மரியம்.
“அப்படியானால், அதையே செய்யலாம்… எனக்கு சில கணிணிகளையும், உதவிக்கு சில தொழில் நுட்ப வல்லுனர்களையும் தந்தால், இந்தக் காரியத்தை செவ்வனே முடிக்க உதவும்”
“உடனே செய்கிறேன்.. ஆனால், ஒரு கேள்வி. ஏன் எப்போதும் பெண்ணிடமே தீர்வைத் திணிக்க வேண்டும்? இந்த முறை ஆணை, பெண்ணுக்கு ஏற்றாற்போல் கட்டமைத்தால் என்ன?”
“அதை நானும் யோசித்தேன்.. அதையும் முயற்சித்துப் பார்க்கலாம்” என்றாள் அபி.
மரியம் ஆணைகள் பிறப்பிக்க, அபிக்கு கணிப்பொறிகளும், உதவிக்கு தொழில் நுட்ப வல்லுனர்களும் தரப்பட்டது. மரியம் அபியின் சோதனைக்கூடத்திலேயே பெரும்பான்மை நேரங்களைக் கழிக்கத்துவங்கினாள்.
“முதற்கட்டமாக, ஆண்களுக்கு பெண்களை பலாத்காரம் செய்தல், ஆசிட் வீசுதல், கொலை செய்தல் போன்றவைகளை செய்யத்தூண்டும் மரபணுச் சேர்க்கைகளைக் கண்டறிந்து நீக்கி சோதனை செய்யலாம்” என்றாள் மரியம்.
மரியமின் விருப்பத்திற்கிணங்க, கணிப்பொறியில் அபி உள்ளீடு செய்ய சிமுலேஷன் மென்பொருள் அந்த மரபணுச் சேர்க்கையின் பல்வேறு வரிசை மாற்ற சேர்க்கைகளை (Permutation and combination) மதிப்பிட்டு விளைவுகளைத் தரவாகத் தந்தது. திரையில் எண்ணிக்கை ஒன்று தோன்றி 1, 2, 3… என்று வரிசையாகக் காட்டியது.
“இதென்ன எண்கள்?” என்றாள் மரியம்.
“இது சிமுலேஷனின் விளைவால் உருவான அடுத்த தலைமுறை. ஆயிரத்து ஐந்நூறு ஆண்கள், பெண்கள். இவர்களால் விளையக்கூடிய அடுத்த தலைமுறை. ஒரு ஆண்-பெண் இணை ஒரு பிள்ளை பெற்றாலும் சுமார் ஆயிரத்து ஐந்நூறு மகவுகள் கிடைக்கும். சிமுலேஷன் அந்த ஆயிரத்து ஐந்நூறு மகவுகளின் மரபணுக்களையும் வைத்து இரண்டாம் தலைமுறையைச் சோதிக்கிறது. இதில் ஏதேனும் பிரச்சனை என்றால், சிமுலேஷன் மென்பொருள் நம்மை இடைமறிக்கும். தேவைப்பட்டால் சிமுலேஷனை தற்காலிகமாக நிறுத்திவிடவும் செய்யும்.” என்று விளக்கினாள் அபி.
திரையில், 192, 193…… என்று தோன்றி பின் 194ல் நின்றது. சில மணித்துளிகளுக்குப் பின்னர்,
“194ல் மட்டுமே குற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் வெளிப்பட்டன. பெண்ணை மிக மோசமாக நடத்தக்கூடிய இந்திரிய சேர்க்கை கொண்டவனாகவும் தெரிகிறான் ” என்று இறுதி அறிக்கை வெளியிட்டது சிமுலேஷன்.
“ஆயிரத்து ஐந்நூறில் ஒன்றே ஒன்றில் தானே? பேசாமல் அந்த ஒன்றைப் புறக்கணித்துவிடலாமா?” என்றாள் அபி.
“இல்லை. பிரச்சனை இப்போது அது அல்ல. கொஞ்சம் யோசித்துப் பார். இப்போது இந்த ஒட்டுமொத்த சிமுலேஷனை உருவாக்கியது யார்? பெண்கள். சிமுலேஷனுக்குள் இப்போதிருக்கும் ஆணை உருவாக்கியதும் நாம் தான். ஆக, இப்போது இந்த ஆண்களுக்கு இறைவன், பெண்களாகிய நாம் தான். நீ ஒரு பொருளை ஒரு நோக்கத்திற்கென உருவாக்குகிறாய். ஆனால், அந்தப் பொருள் வேறு விதமாய் இயங்கி நோக்கத்தைச் சிதைக்கிறது. இதன் பொருள் என்ன? ஒரு கலைஞனாக நீ உன் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்பதுதானே? அதேபோல், பெண்களாகிய நாம் உருவாக்கிய இந்த மருந்து பயன்படுத்தப்பட்ட சிருஷ்டியில் இனி ஆண்-பெண் இடையிலான எந்த பிரச்சனையாக இருப்பினும், அது இந்த ஒட்டுமொத்தத்தையும் உருவாக்கிய நம் பிழையாகவே கருதப்படும் அல்லவா?. ஆணை நாம் குறை சொல்லும் பட்சத்தில் நம் தயாரிப்பு, நம் முயற்சி, நம் சிமுலேஷன் தவறென்றாகிவிடலாம். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நம் திறமை மீதே சந்தேகம் எழும். நம் மருத்துவ மற்றும் ஆராய்ச்சிக் கல்வி மற்றும் அனுபவம் செல்லாக்காசாகும் நிலையும் ஏற்படலாம்.
இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதெனில், அந்த 194வது கேஸில், தவறு ஆணுடையதாக இருப்பினும், அதைப் பெண்ணுடையது என்று சொல்வதில் தான் நமது பிழைப்பின் தொடர்ச்சியும் இருக்க முடியும் . அல்லது நம் தோல்வியை நாமே ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இப்போது என் கவலை அது அல்ல” என்றாள் மரியம்.
அபி, “பிறகு?” என்றுவிட்டு மரியத்தைக் கேள்வியாய்ப் பார்க்க,
“கொஞ்சம் யோசித்துப் பார் அபி. நாம் பூமியில் தோன்றிய மனித இனம். நம்மை உருவாக்கிய சிருஷ்டியை கடவுள் என்கிறோம். அந்தக் கடவுளைப் பெண் வடிவமாகப் பார்க்கிறோம். பூமியில் மனித இனத்தை உருவாக்கியது ஒரு பெண் தான் என்றால், பூமியில் முதன் முதலில் தோன்றியது ஒரு பெண் இனம் தான் என்றால், நாம் தற்போது நடத்தித் தோல்வி கண்ட இந்த சிமுலேஷனுக்கும், நாம் இருக்கும் இவ்வுலகுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதை கவனிக்கிறாயா? ” என்றாள் மரியம்.
– முற்றும்.
5 comments