‘அடுத்த பிறவி ‘ என்ற சிறுகதையை எழுதியவர் திரு பாலசாண்டில்யன்.
அடுத்த பிறவி
ரமாவிற்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழிந்து போனது. ரமாவின் தாத்தா சீதாராமன் ரமாவையும் கோகுலையும் பார்க்கும் போதெல்லாம் “சீக்கிரம் ஒரு சிங்கத்தைப் பெற்றுக் கொடு, அவனைப் பார்த்து விட்டுத் தான் கண் மூடுவேன்” என்பார். கொள்ளுப்பேரன் கனவில் தாத்தா என்பதால் அவர்கள் அழகானதொரு புன்னகையை அவருக்கு பதிலாகத் தந்து விட்டு நகருவது வழக்கம். அவரும் அந்த பல்செட் புன்னகையை பரிசாகத் திருப்பித் தருவார்.
குழந்தை பாக்கியம் என்பது ‘அவன்’ அளிப்பது. நாம் நினைத்த பொழுது கிடைக்காது. தலைகீழ் நின்று முயற்ச்சித்தாலும் ஒன்றும் நடக்காது. இதனை கண் கூடாகப் பார்த்தனர் ரமாவும் கோகுலும். அவர்கள் போகாத டாக்டர் இல்லை. எடுக்காத முயற்சி இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. அதனால் வேலைக்குப் போகும் இருவருக்கும் எப்போதும் மனக்கவலை தான். சில நேரம் ஒருவர் மீதே ஒருவருக்கு சந்தேகம் வரும். வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் மனதுக்குள் இருந்தது அந்த புழுக்கம். அதையும் தாண்டியதொரு நம்பிக்கை இருவரிடமும் இருந்தது.
ரமாவின் பெற்றோரும் போக வர இது பற்றி சுற்றி வளைத்துக் கேட்பர். எந்த குடும்ப விழாவிலும் இந்த கேள்வி நிச்சயம் இருக்கும். அதனால் ரமா கோகுல் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தனர். தவிர, இருவருக்கும் அலுவலக அழுத்தம் வேறு. தவிர இந்த பிரச்சனையும் சேர்ந்து கொண்டது.
அந்த நாளும் வந்தது. எல்லோர் முகத்திலும் ஆனந்தம். ரமா தான் தாயார் ஆகப் போகிற அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தாள். அவள் கர்ப்பம் தரித்த சமயமே இந்த பாழாய்ப் போன கொரோனா முதல் அலையின் ஊரடங்கின் போது தான். குறைவான எண்ணிக்கையோடு சீமந்தம் வளைகாப்பு எல்லாம் செய்து கொண்டாள் ரமா. டெலிவரிக்கு டாக்டர் குறித்துக் கொடுத்த தேதி நெருங்கிக் கொண்டிருந்த சமயம், கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடியது. நாடே ஆஸ்பத்திரி அட்மிஷன், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி என்று அமர்க்களப்பட்டது.
ரமா கோகுல் இருவரின் பெற்றோரும் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டனர். சீதாராமன் தாத்தாவுக்கு வயது 85 ஐத் தாண்டி இருந்தது மட்டுமன்றி அவரால் நடக்க முடியவில்லை. எல்லோரும் சேர்ந்து அவருக்கு தடுப்பூசி போட வேண்டாம் என்று முடிவு செய்தனர். கோகுல் 45 வயதுக்கு கீழே என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. ரமா கர்ப்பமாக இருந்ததால் அவளும் போட்டுக் கொள்ளவில்லை.
அன்று காலை ஆறு கூட ஆகி இருக்காது. சென்னையே திமிலோகப் பட்டது. புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நாள். தவிர, புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு வேறு உத்தரவாகி இருந்தது. ரமாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. போன் மேல் போட்டாலும் ஊபர், ஓலா கார் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் வண்டியும் கிடைக்கவில்லை. குடும்ப டாக்டர் அமிஞ்சிக்கரையில் உள்ள தனது பிரசவ ஆஸ்பத்திரிக்கு கூட்டி வாருங்கள் என்று சொல்லி விட்டார். எப்படியோ பக்கத்து வீட்டு ரமேஷை கெஞ்சிக் கூத்தாடி அவனுடைய காரில் ரமாவை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தாகி விட்டது.
வெளியே கோகுல் குட்டி போடாத பூனையாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான். கைவிரல் நகங்களை கடித்து துப்பி முடித்து விட்டான். இரண்டு காபி குடித்தாகி விட்டது. கையில் வைத்திருந்த நியூஸ் பேப்பரை இரண்டுக்கு மூன்று முறை படிக்கவில்லை என்றாலும் புரட்டி விட்டான்.
அப்போது தான் ‘ரமாவின் தாத்தாவிற்கு நெஞ்சு வலி உடனே உதவிக்கு வா’ என்ற செய்தி ரமாவின் அப்பாவிடம் இருந்து வந்தது. உடனே கீழே படியிறங்கி மெயின் ரோட் போய் மெதுவாக போய்க் கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி பறந்தான் கோகுல்.
மிகப்பெரிய சவால் காத்திருந்தது கோகுலுக்கு . தாத்தாவை எங்கே கொண்டு சேர்ப்பது, எப்படிக் கூட்டிக் கொண்டு போவது என்பதே அது. ஒருவழியாக ஊபர் கார் ஒன்று பிடித்து அவர் வீட்டுக்கு அருகே உள்ள மருத்துவமனைக்கு போன பொழுது அடுத்த சவால். முதலில் தாத்தாவுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே சிகிச்சை தொடங்குவோம் என்றனர் மருத்துவமனை அட்மிஷன் கவுண்டரில். அவன் மண்டையே வெடித்து விடும் போல ஆனது. கோகுல் மிகுந்த பணிவுடன், “முதலில் அவருக்கு முதலுதவி செய்யுங்கள், பிறகு உங்கள் முறைப்படி செய்யுங்கள்” என்று கெஞ்சினான்.
உள்ளே போன தாத்தா ஒரு புறம், அங்கே வலியுடன் போராடிக் கொண்டிருக்கும் ரமா மறுபுறம். அதற்குள் அடுத்த போன் அவனுடைய தந்தையிடம் இருந்து, “கண்ணா கோகுல், எங்கே இருக்கிறாய்? எனக்கும் அம்மாவிற்கும் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கிறது. என்ன செய்வது?” கோகுலுக்கு ஒரே சமயத்தில் இத்தனை சிக்கல்களா ? தலை சுற்றியது கோகுலுக்கு . “அப்பா, நான் சற்று நேரத்தில் வருகிறேன், நீங்கள் வழக்கமாக டெஸ்ட் எடுக்கும் லேபுக்கு போய் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பிரச்சனையை அவர் பக்கமே திருப்பி விட்டான்.
“சீதாராம் அட்டெண்டர் யாரு?” என்று குரல் கேட்கத் திரும்பிப் பார்த்தான். அவர் தனது பங்குக்கு போட்டார் பெரிய ஒரு குண்டை. உங்கள் தாத்தா சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இறந்து விட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் உடல் இன்னும் சிறிது நேரத்தில் பிணவறைக்கு எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். ஹெல்த் இன்ஸ்பெக்டர் வந்து சான்று தந்த பிறகு கார்ப்பரேஷன் தேர்வு செய்யும் இடத்திற்கு அவர் உடலை எடுத்துச் செல்லுவார்கள். அதிக பட்சம் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி என்றனர்.
இப்போது ரமாவின் பெற்றோருக்கு இந்த செய்தியைச் சொல்ல வேண்டும். ஏற்கனவே அவர்கள் இருவரும் கொரோனா மைல்டு சிம்ப்டம் என்று வீட்டுத் தனிமையில் இருப்பது இவனுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லித் தானே ஆக வேண்டும்?
அவன் முந்தைய போன் பேசிக் கொண்டே இருக்கும் போதே ரமாவை காலையில் சேர்த்த அமிஞ்சிக்கரை ஆஸ்பத்திரியில் இருந்து போன். இந்த தொலைபேசி அழைப்பை அவசரமாகத் துண்டித்து அந்த போனை ஏற்றுப் பேசினான் ஆவலாக. மறுபுறம் “சார் எங்கே இருக்கிறீர்கள் ? உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து அரை மணி நேரம் ஆகிறது. தாயும் சேயும் நலம். வாழ்த்துக்கள் சார்” என்ற செய்தி காதில் விழுந்த போது அவனுக்கு சந்தோஷமும் துக்கமும் ஒன்றாக சேர்ந்த ஓர் உணர்வு. இதுவரை அவன் தனது வாழ்வில் அனுபவித்தது இல்லை இப்படியான சவால்களை.
பல வருடங்கள் கழித்துப் பிறந்திருக்கும் குழந்தை, யாருக்குத் தான் இருக்காது டென்க்ஷன் ? அவன் அப்பா ஆகி விட்டான். இப்படி ஓர் உணர்வை பகிர்ந்து கொள்ள அருகில் யாரும் இல்லை. அவனை அறியாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அது துக்கமும் சந்தோஷமும் கலந்த ஒன்று. இந்த நேரத்தில் நான் அங்கு இருக்க வேண்டாமா? துடித்தது பாழும் மனது.
உடனே அமிஞ்சிக்கரை போகலாம் என்று யோசித்த பொழுது அவன் கால்கள் தானாகவே பின் வாங்கியது. தாத்தாவை நான் தானே கொண்டு வந்து சேர்த்தேன். தாத்தாவுக்கு கொரோனா என்றால் “எனக்கும் இருக்குமே!!”. இத்தனை நாள் ஏங்கிய ஒன்று கையில் கிடைத்துள்ளது. மனம் துடித்தது. குழந்தை எப்படி இருக்கும் ? ரமாவை நான் உடனே பார்க்க வேண்டுமே …ஆனால் அது முடியாதே ! என்ன செய்வது? மனம் படபடவென்று அடித்துக் கொண்டது பல மடங்காய்.
தனது பெற்றோரை போகச் சொன்ன லேபிற்கு இவனும் போனான். அங்கே டெஸ்ட் எடுத்துக் கொண்டான். அவர்கள் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள். போன் செய்து முகத்தில் சிரிப்புடன் நல்ல செய்தியை முதலில் சொன்னான். ஆனந்தத்தில் அவன் பெற்றோர்கள் அவனை நெகிழ்ந்து வாழ்த்தினார்கள். “டேய் கோகுல், எப்படி நாங்கள் எங்கள் பேரனைப் பார்க்க முடியும்? என்னடா கொடுமை என்று ஒப்பாரி வைத்தாள் அவன் அம்மா பாகீரதி.
இவன் சீதாராம் தாத்தா விஷயத்தையும், அவர்கள் ரமாவின் பெற்றோர் வீட்டுத் தனிமையில் இருக்கும் விவரத்தையும் சொன்னான். கோகுலின் தந்தை மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார். “அப்பா கொஞ்சம் அமைதியாக இருங்கள், நீங்கள் பத்திரமாக வீட்டில் இருங்கள் , நான் வருகிறேன்” என்றான் நிதானமாக.
தானும் பிறந்த குழந்தையைக் காண முடியாது என்கிற சோகமான செய்தியை தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டான்.
இதற்கு நடுவே கோகுல், அவனது நண்பன் முரளி என்று இரண்டு பேர் மட்டும் சென்று சீதாராம் தாத்தாவை வழி அனுப்பி வைத்தனர் எந்த சடங்கும் இன்றி.
‘ஜுனியர் சீதாராம்’ பிறந்து விட்டார்… எத்தனை களேபரம் இவன் பிறக்கும் வேளையில் ..! இறைவனடி போய்ச் சேர்ந்து விட்ட சீதாராமுக்கும் சடங்குகள் இல்லை. புதிதாகப் பிறந்து இருக்கும் ஜூனியருக்கும் எந்த சடங்கும் நடக்கவில்லை முறைப்படி…!!
ரமாவிற்கு நடந்த விவரங்களை சுருக்கமாகச் சொன்னான் போனில். அங்கே ரமாவின் அழுகையை எப்படி நிறுத்துவது…அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது? “நான் டிஸ்சார்ஜ் ஆகி எங்கே செல்வேன் கோகுல் ? எனக்கு இந்த தனிமை கொஞ்சமும் சகிக்க முடியவில்லை.” “குட்டிமா, நமக்கு ஜூனியர் சீதாராம் பிறந்து இருக்கிறார், பத்திரமா பார்த்துக்கோ…மனசைத் தளர விடாதே ! நீயும் பத்திரமாக இரு. உனக்குத் துணைக்கு என்னோட சித்தி பெண் வசுமதியை அனுப்பி வைக்கிறேன்” என்று போனை துண்டித்தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு.
ரமா அந்தக் குழந்தையை ராதாகிருஷ்ணன் என்று சொல்லிச் சொல்லி கொஞ்சினாள். போன ஜென்மத்தில் சீதாராம் என்றால் இந்த ஜென்மத்தில் அது ராதாகிருஷ்ணனாகத் தானே இருக்க வேண்டும் என்று கோகுலிடம் சொல்லிச் சிரித்து தனக்குத் தானே ஆறுதல் செய்து கொண்டாள். அவளுக்கு தாத்தா என்றால் கொள்ளை இஷ்டம்.
ரமா குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகி வசுமதி வீட்டிற்குப் போனாள். ஆனால் அவளையும் ஜூனியர் சீதாராமையும் பார்க்க கோகுல், அவளது பெற்றோர் மற்றும் கோகுலின் பெற்றோர் என்று யாருமே வரவில்லை அடுத்த பத்து நாட்களுக்கு. அதற்குள் முழு ஊரடங்கு அமல் ஆகி இருந்தது.
குழந்தையை எல்லோருமே வீடியோ கால் போட்டு பார்த்து மகிழ்ந்தனர். வேறென்ன செய்ய ? கோகுல் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை வீடியோ கால் செய்து குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தான்.
ரமாவின் போன் அடித்தால் அது “என்ஜாய் எஞ்சாமி” என்று பாடும். அந்தப் பாட்டுக்குப் பழகி விட்டது போல அவள் போன் ரிங் அடித்தாலே குழந்தை ராதாகிருஷ்ணன் கண்ணை உருட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.
தவமிருந்து பிறந்த குழந்தை தன்னைப் பெற்றவர்கள், பெரியவர்கள் வந்து பார்க்கத் தவமாய் தவம் கிடந்தது.
நிறைவு பெற்றது.
9 comments