பேச வார்த்தையும் இல்லை
காரணமும் இல்லை
ஆனால் பேசி தீர்க்கவே
ஆசைபடுகிறது உள்ளம்…
உன்னை நெஞ்சில் சுமக்கும்
சுகம் தாளாமலே உன்னோடு
பேசி தீர்கவே ஆசைபடுகிறது….
(முன்கதை சுருக்கம்- பிரச்சனையை முடிந்து அனைவரும் சமாதானம் ஆக, ப்ரீத்தி ரவியின் நல்ல குணங்களை பற்றி பிரியாவிடம் புகழ்ந்து தள்ளிவிட்டாள்…. ரவியை எப்பொழுதும் தவறாகவே பார்த்து கொண்டிருந்த பிரியாவின் மனதில் ரவி புது தோரணையோடு காதல் தேவனாய் வேரூன்றி அமர்ந்துவிட்டான்…ஆனால் இப்பொழுது பிரச்சனையே அவனிடம் எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என்பது தான்)
மனதில் பயம், பதட்டம், நடுக்கம் , காதல் என்று மொத்த உணர்வுகளையும் சுமந்து கொண்டு பிரியா ரவியை தேடி சென்றாள்…
ரவியோ எதை பற்றியும் கவலை இல்லாமல் தன் நண்பர்களோடு சிரித்து பேசியபடி பார்டியை என்ஜாய் செய்து கொண்டிருந்தான்…
ரவியிடம் கூற பயமாக, தயக்கமாக இருந்தாலும் சொல்லி தானே ஆக வேண்டும் என்று மனதை பலப்படுத்தி கொண்டு ரவியின் அருகில் சென்றாள் பிரியா…
ரவி…………தான் வளர்த்துக்கொண்ட காதலோடு ரவியை அவள் அழைக்க ரவி இது பற்றி எதுவும் தெரியாமல் பிரியாவை பார்த்தான்…
உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்று பிரியா கூற “இருங்கடா வந்துடறேன்” என்று தன் நண்பர்களிடம் கூறிவிட்டு பிரியாவோடு வந்தான்…
என்ன பிரியா, அப்படி என்ன தனியா பேசணும்…
அது வந்து ரவி, வந்து….என்று வேறு வார்த்தை கிடைக்காமல் தடுமாறி நின்றவளை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தான்…
என்ன ஆச்சு பிரியா, என்னனு சொல்லு…எதுக்கு இப்படி தடுமாற்றம்…சொல்ல வந்தத மறந்து போய்டியா? சரி விடு யோசிச்சு வை நான் அப்புறமா கேட்டுக்கறேன் என்று கிளம்ப சென்றவனை… நில்லு ரவி, நான் சொல்றேன்…போய்டாத என்று மறுபடியும் தயங்கியபடியே எங்கு அவன் போய்விடுவானோ என்ற பயத்தோடே ரவி நான், நான் உன்ன விரும்பறேன்..தட்ஸ் மீன் உன்ன லவ் பண்றேன் என்று கூறி முடித்த பிரியாவை சிறிது நேரம் உற்று நோக்கியபடி நின்றுவிட்டான் ரவி…
சில நொடிகளுக்கு பிறகு வாய் விட்டு சத்தமாக சிறிது நேரம் சிரித்து விட்டு எதுக்கு இப்படி விளையாடற, உன்ன நான் கஷ்டபடுத்துனதுக்கு நீ இப்போ என்கிட்டே விளையாடறயா…ஆனா இந்த விளையாட்டு வேணாமே…இப்போ தான் ஒரு பெரிய பிரச்சன முடிஞ்சிருக்கு…சரி வா பிரியா அங்க போகலாம், அவங்க எல்லாரும் எதோ பேசிட்டு இருக்காங்க…நாமும் போய் அவங்க பேச்சில கலந்துப்போம் என்று பிரியாவின் காதலை அவள் உணர்வுகளை விளையாட்டாக கூறிவிட்டு சென்று விட்டான் நம் ஹீரோ ரவி…பாவம் அவனின் இந்த புரிதலின்மையே அவன் வாழ்கையில் மிக பெரிய சோதனையாக மாறிபோகும் என்று அவனுக்கு தெரிய வாய்ப்பில்லையே….
தன் காதலை மறுத்திருந்தால் நொடிந்து போயிருப்பாள், ஆனால் அதை நம்பாமல் விளையாட்டாய் எடுத்து கொண்டவனை பார்த்து என்ன செய்ய, அழ கூட தெம்பில்லாமல் அதிர்ச்சியின் வழியில் அசையாமல் நின்றுவிட்டாள்…
என்ன பிரியா, என் இங்க நிக்கற…ரவிகிட்ட பேசிட்டா இல்லையா என்று பிரியாவின் தோளில் கைவைத்து தன் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நின்றிருந்த கீதுவுக்கு பிரியாவின் அழுகையே விடையாய் மாறிப்போனது..
நடந்தவற்றை தேம்பளோடு பிரியா கூற…என்னடி சொல்ற, அவனுக்கு நீ புரியற மாதிரி சொல்லிருக்க மாட்ட, இரு நான் அவன்கிட்ட போய் பேசி பாக்கறேன் என்று தன் தோழிக்காய் காதல் விடு தூதுக்கு செல்ல இருந்தவளை கை பிடித்து நிறுத்தினாள் பிரியா…
ரவி மனசுல நான் இல்ல, அப்படி நான் இருந்திருந்தா அவன் நான் சொன்னத விளையாட்டா எடுத்துருக்க மாட்டான்…அவன் என்ன சொன்னான் தெரியுமா, இப்போ தான் ஒரு பிரச்சன என்ன விட்ருக்கு, இதுக்கு மேல இப்படி என்கிட்டே விளையாடாதனு சிரிச்சிக்கிட்டே சொன்னான்..ஆனா அது தான் உண்மை, திரும்ப அவனுக்கு நான் பிரச்சனையா இருக்க விரும்பல…இத பத்தி இனி நானும் அவன்கிட்ட பேசமாட்டேன், நீயும் அவன்கிட்ட பேச கூடாது என்று உறுதியான முடிவோடு கண்களை துடைத்து கொண்டு சென்ற பிரியாவை இந்நிலைமைக்கு ஆளாக்கின ரவி மீது கோவம் வந்தது கீதுவுக்கு…
எல்லாம் முடிந்து எல்லாரும் கிளம்பும் தருணம் வந்தது, ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொண்டு சிரித்த முகத்தோடு கிளம்பு ரெடி ஆக ரவி பிரியாவின் அருகில் வந்தான்…பிரியா ரொம்ப தேங்க்ஸ் அண்ட் சாரி, இனி இந்த மாதிரி எப்பவும் உன் வாழ்க்கைல உனக்கு பிரச்சன தர மாட்டேன்…அப்படி சொல்றத விட இனி உன்ன பாக்கவே போறது இல்லன்னு சொல்றது தான் சரியா இருக்கும்…சரி பிரியா பெஸ்ட் ஆப் லக், நீ எப்பவும் நல்ல இருக்கணும், நான் உனக்காக கடவுள வேண்டிக்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பிய ரவிக்கு தெரியாது அவளது சந்தோஷத்தை அவன் எடுத்து செல்வது மட்டும் அல்லாது அவனது சந்தோஷத்தையும் அல்லவா அவளிடம் விட்டு செல்கிறான்…ஆனால் அது புரியும்போது அவன் வாழ்க்கையில் பிரியா காணாமல் போயிருப்பாளே….
ரவியும் கிளம்பிவிட்டான், பிரியாவும் அவனை மறக்கும் முயற்சியை ஆரம்பித்துவிட்டாள்…என்ன செய்தும் அவன் போட்ட மோதிரத்தை கூட பிரியாவால் கழட்ட முடியவில்லை…அவள் தோழிகள் கூறிய ஆறுதல் வார்த்தைகள் காற்றில் கரைந்ததே தவிர அவள் கவலையை கரைக்கவில்லை…இப்படியே நாட்கள் சென்றது…
பிரியா தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டால், மேற்கொண்டு படிக்க அவளுக்கு அவள் வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை…அவளுக்காக வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்..எத்தனையோ வரன் வந்தும் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளிபோட்டுகொண்டே வந்தவளை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர், அவள் அண்ணனோ கேட்டே விட்டான்…
எல்லா வரனையும் எதுக்கு வேண்டாம்னே சொல்லிட்டு இருக்க…நீ லவ் பண்றியா, யாரையாவது மனசுல நினச்சிட்டு இருக்கா என்று வெளிப்படையாக கேட்ட அண்ணனுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்….
வேறு என்ன சொல்வாள், இனி உன் வாழ்கையில் நான் இல்லை, எப்பொழுதும் வர மாட்டேன் என்று வாய்விட்டு சொல்லிபோன அவனை தன் காதலன் என்று தன் வீட்டு ஆள்களுக்கு அறிமுகபடுத்த முடியுமா, அது சாத்தியம் தான் ஆகுமா…இனியும் சமாளிக்க முடியாது என்று புரிந்துகொண்டவளாய் திருமணத்துக்கு சம்மதித்து விட்டாள்…
தேடி பிடித்து அவளுக்கு பொருத்தமான வரன் ஒன்றை நிச்சயமும் செய்து விட்டார்கள்…திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலின் பேரில் குடும்பத்தோடு திருப்பதிக்கு வரும் சந்தர்ப்பத்தில் தான் பிரியா தன் கடந்த காலத்தை சந்திக்க நேர்ந்தது…
திருப்பதிக்கு வந்தால் திருப்பம் கிட்டும் என்பார்கள்…ஆனால் பிரியாவின் வாழ்வில் ஒரு சூறாவளியை அல்லவா புரட்டி போட்டிருக்கிறது இந்த சந்திப்பு…
தரிசனம் முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு பயண களைப்பு வாட்டியது என்றால், பிரியாவுக்கோ மனக்குழப்பம் தான் அவளை சிறிது சிறிதாய் கொன்று கொண்டிருந்தது…
ஒரே நிமிட தரிசனம் தான், அவள் தரிசனம் செய்தது பெருமாளை அல்ல அவள் மனத்தால் கொண்டவனை அல்லவா…அந்த ஒரு நிமிட தரிசனத்தில் அவள் மனம் இந்த நிமிடம் வரை விடாது போராடி கொண்டிருக்கிறது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் நின்று கொண்டு…
அவன் தன்னை மறந்திருப்பான், அவன் தான் தன் இலட்சிய பாதையில் வெற்றி கண்டு மிடுக்காக நின்றானே…அப்படி இருக்கையில் இவளை எங்கு நினைக்க போகிறான், மறந்திருப்பான் என்று தன்னை தானே சமாதனம் செய்து கொண்டாள்…
வேறு என்ன செய்ய முடியும்…எத்தனையோ முறை சம்மதமா,சம்மதமா என்று கூடி கூடி பல பேர் இவளிடம் கேட்டல்லவா இந்த திருமணத்தை நிட்சயத்திருக்கிறார்கள்….
இந்த நேரத்தில் என்ன சொல்வாள், தன் கடந்த கால காதலனை அதுவும் தன் காதலை ஏற்று கொள்ளாத காதலனை சந்தித்தேன், அதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்வாளா, இதை சொல்ல அவளுக்கே நாக்கு கூச தான் செய்தது…இப்படிப்பட்ட ஒரு காரணத்தை சொல்ல எந்த நியாயமும் அவளிடம் இல்லை, இப்படி இருக்க அவள் எதுவும் செய்ய முடியாமல் நடைபிணமாய் தன் திருமணத்துக்கான முகூர்த்தத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தாள்….
அப்படி பட்ட சூழ்நிலையில் வந்த மற்றுமொரு புயலின் அடையாளத்தை அவள் அறியவில்லை…