அம்மோய் இன்னைக்கு
ஸ்கூல்ல விழா எடுக்கறாங்க
நீயும் வரியா
ஆர்வமாக கேட்டுவிட்டு விழிவிரிய நின்றாள்…
அடி போடி இங்கன கிடக்கற
வேலைய செய்யவே ஆளைக்காணோம்
விழா காண தான் கண்ணுக்கிடக்குதோ
அங்கன குருவிகிட்டுகிடக்கற
கிழவியை கூட்டிட்டு போ…
விழா காண கேட்டதற்கே வைய துவங்கியவளிடம்
அந்த விழாவிலே ஆடப்போவதை சொன்னால்
சீவகட்டை முதுகில் ஏற விளாசுவாள்..
படிக்க அனுப்பினா ஆடிட்டு திரியறயோ
எங்கயும் போகவேனா மீறிப்போனா
கால உடைச்சிப்பிடுவேன் என்பாள்…
ஆடுவதைப்பத்தி மூச்சி கூட விடாமல் ஆயாவை
கிளப்பிக்கொண்டு போனாள்…
ஏம்புள்ள, இன்னும் எவ்வளவு நேரம்
காத்துகிட்டு கிடக்க…
செத்த நேரத்துல ஆரம்பிச்சிருவாங்கயா
இங்கயே உக்காரு தோ வாரேன்..
அலங்காரத்தோடு வந்தவள்
ஆயாவிடம் கெஞ்சினாள் …
என்னபுள்ள துணி இது…
டீச்சரு ஆட சொல்லி வாங்கிக்குடுத்துருக்காங்க
அம்மாகிட்ட சொல்லிப்புடாதயா…
சரிப்புள்ள சொல்லல…எப்போ நீ ஆடுவ…
இன்னும் நேரமாகும்யா
அந்தா நிக்குராறுல அவரு தான்
விருந்தாளியா வந்துருக்காறாம்
அவர் பேசி முடிச்சதும்
ஆடலாம்னு சொன்னாங்க..
மனுஷன் விடாம பேசிக்கிட்டே கிடக்கான்
மணி ஒன்னு ஆச்சி
பச்ச புள்ளைங்க பசிதாங்குமா
காலைல கஞ்சி ஊத்திட்டு வந்த வயிறு
காஞ்சி கருவாடா போய்டாது
இந்தாபுள்ள இந்த கிழங்கையாவது
கொஞ்சம் தின்னு…
ஆயா அத குடு
கையில் அள்ளிக்கொண்டு போனவள்
வெறுங்கையோடு வந்தாள்….
எங்க புள்ள கிழங்க காணோம்
எங்கூட படிக்குற புள்ளைகளும்
ஒன்னும் திங்கலை
அதான் குடுத்துப்புட்டேன்…
சரி இந்தா இந்த கருதையாவது தின்னு…
கருதை வாயில் வைத்தவள்
ஆசிரியர் அழைத்ததும் ஓடிப்போனாள்..
நீ தான் இப்போ ஆடனும்
தயாரா நில்லு….
அச்சமில்லை அச்சமில்லையென்ற
பாரதியின் வரிகளுக்கு நடனமிட்டு
ஆடிய களிப்பில் ஆயாவிடம் போனாள்…
என்னபுள்ள எப்போ தான் ஆடுவ?
ஆயா ஆடி முடிச்சிட்டேன் நீ பாக்கலயா..
செத்த கண்ணு அசந்துருச்சிபுள்ள
கிளம்பலாமா அவ வேற ஒத்தையில கிடப்பா..
இருய்யா மதிய சோறு தருவாங்க
வாங்கிட்டு போவோம்…
ஏ புள்ள, இன்னொரு பொட்டலம் வாங்கு
உன் அம்மாக்கு ஆகும்ல…
பைக்குள்ள பதுவிசா வை
வீட்டுக்கு போய் தின்னுக்கலாம்…
நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குதுய்யா…
பெரிய வண்டி இந்நேரத்துக்கு வராது
இன்னும் செத்த தூரம் தான…
ஆயா அங்கன பாரு…
ஐயோ யார் பெத்த புள்ளையோ
மயங்கி கிடக்குதே…
மயக்கம் தெளியவைத்து பொட்டலத்தை
கையில் திணித்துவிட்டு நடந்தாள்….
எங்க ஆயாவும் பேத்தியுமா
போய்ட்டு வாரிக…
பள்ளிக்கூட விழாவாம்
சின்னது அடம்பிடுச்சிச்சி அதான்
ஒரு எட்டு போய்ட்டு வாறேன்..
இப்போ எத்தனையாவது மாசம்…
எட்டாவது மாசம்யா…
புள்ளைய பெத்துப்போட்டு உட்டுறாத தாயீ
பெருசா படிக்க வை ..
சொல்லிவிட்டு நகர்ந்த கிழவி
தூரத்தில் தெரிந்த முனியப்பஞ்சாமியை பார்த்தாள்…
எப்பாடுபட்டாவது பேச்சியை படிக்கவைக்கணும்…
கையெடுத்து கும்புடு போட்டு நகர்ந்தாள்…
பள்ளிக்கூடத்தில் விழாக்கண்ட பாரதி
நிம்மதியாக பெருமூச்சு விட்டார்…
முனிப்பன்சாமி பரபரப்பானார்…
1 comment