அப்பா என்ற ஆகாசம் (போட்டி கதை எண்- 01)

5
(1)

அப்பா என்ற ஆகாசம் சிறு கதை எழுதியவர் திருமதி ராணிபாலகிருஷ்ணன்.

அப்பா என்ற ஆகாசம்

காரில் பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள் அனுராதா . அவள் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது .அவள் அருகில் ஏழு வயது  தனுஜா உட்கார்ந்து கலங்கி அழும் அம்மாவின் கண்ணீரைத் தன் பிஞ்சு கரத்தினால் துடைத்தாள் .

முன் சீட்டில் டிரைவர்  மாணிக்கத்தின் அருகில் பூவராகன் உட்கார்ந்து இருந்தான் . அவன் மடியில் நான்கு வயது தர்ஷனா அமர்ந்து கொண்டாள் . காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி கார் புறப்பட்டது .

சென்னையில் வடபழனியில் அனுராதாவின் பிறந்த வீடு . அனுராதாவின் அப்பா ராஜாமணி இறந்து போனார் . ஃபோன் வந்ததில் இருந்து அழுது கொண்டு இருந்தாள் அனுராதா .

அந்த காலை நேர பிரயாண சந்தோஷங்கள் அவள் மனதில் பதியவில்லை . விளையாட்டு திடல்களில் இளம் பிராயத்தினர் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தனர் . வயது முதிர்ந்த வர்கள் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தனர் . எங்கோ ஒரு கோயிலில் இருந்து திருப்பாவை ஒலித்துக் கொண்டிருந்தது .

அனுராதா வுக்கு அப்பாவின் நினைவுகளே மனதில் நிறைந்து இருந்தது . ஏழு வயது தனுஜா தூங்கி விடவே மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள் .

ராஜாமணி  ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார் . அனுராதா  பல தலைமுறைகளாகப்  பெண்  குழந்தைகள் இல்லாத வீட்டில் பிறந்ததும் மிகுந்த செல்லமாக வளர்க்கப் பட்டாள் . அவளுக்கு ஐந்து வருஷத்திற்குப்  பிறகு தம்பி ஸ்ரீ ராம் பிறந்தான் . இரு குழந்தைகளும் செல்லமாக வளர்த்து ஆளாக்க ப் பட்டாலும் அனுராதா மீது அப்பாவுக்கு அதிக பிரியம் .

செல்லமாக வளர்க்கப் பட்ட அனுராதா  கல்லூரியில்  பிகாம் படிப்பைத் தேர்ந்தெடுத்தாள் . படிக்கும் போது முத்தரசனுடன் பழக்கம் ஏற்பட்டது . அவன் அனுராதா வின்  வீட்டருகே  ஃபோன் கடை வைத்து இருந்தான் .

அனுராதாவை அவள் அம்மா விமலா கண்டித்தாள் . அன்று இரவு முத்தரசனோடு உடன் போனாள் அனுராதா .

விவரம் அறிந்து அவளை பல இடங்களிலும் தேடி தவித்தனர் பெற்றோர்கள் . ஐந்து மாதங்கள் கழித்து குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள் அனுராதா . ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருந்தாள் . முத்தரசன் அவளை ஏமாற்றி வஞ்சித்தது அறிந்து வீடு வந்து சேர்ந்தாள் .

மகள் மீது அதீதப் பிரியம் ராஜாமணிக்கு . அவள் ஓடிப் போய் அவருக்கு அவமானம் தேடி தந்ததும் உண்மையே . இப்போது வயிற்றில் ஐந்து மாத குழந்தை வேறு . என்ன செய்வது ?இவளின் எதிர்காலம் என்ன ? ஒன்றும் தெரியவில்லை திகைத்துப் போனார் .

நிராதவாக மகளை விட விருப்பமாக இல்லை . ஆனால் மனதிற்குள் மருகி ,  மருகி அமைதியாக இருந்தார் .அம்மா விமலாவிற்கு மகள் மீது கோபம் வருத்தம் இருந்தது என்றாலும் அவளை நன்றாக கவனித்துக் கொண்டாள் . கணவர் ராஜாமணி யிடம் குழந்தையைக் கலைத்து விடலாம் என்று கூறினாள் . ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது இருந்தார் . அது அனுராதா வின் உயிர் விளையாட்டு அன்றோ ?

இரவு தூக்கம் வரவில்லை . முகநூலில் மூழ்கி இருந்தார் . அப்போது ஒரு சமுகசேவகியின் பேட்டியைக் காண நேர்ந்தது . அவர் பார்வையாளர்களுக்கு தங்கள் பிள்ளைகள் என்ன தவறு செய்து இருந்தாலும் மன்னித்து அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் . நாமே நம் குழந்தைகளை கைவிட்டால் வேறு யார் அவர்கள் மீது அக்கறை கொள்வார்கள் . நம் பிள்ளைகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை நல்வழிப் படுத்த நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார் .

சமூக சேவகியின் பேச்சு அவருக்கு நல்ல வழி காட்டியது . “ ஆம் அனு என்னுடைய மகள் . நான் உயிரோடு இருக்கும் வரை கண்ணுக்குள் வைத்துப் பாதுகாப்பேன் . உலகத்தில் கோடானு கோடி பெண்கள் இருந்தாலும் என் மகளுக்கு ஈடாக யாரும் கிடையாது “ என்று தீர்மானித்தார் .

இரவு தூங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் போய் அமர்ந்தார் . அவள் அழுத கண்ணீரக் கோடுகள் கன்னத்தில் தெரிந்தது . தலையை மென்மையாக கோதி எப்போதும் அவர் “அனும்மா “ என்று அன்புடன் கூப்பிடுவது போல கூப்பிட்டார் .

கண்விழித்த அனுராதா அப்பாவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து அவர் தோளில் சாய்ந்து “அப்பா !அப்பா ! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கதறி அழ ஆரம்பித்தாள் . அவளை மார்போடு அணைத்துக் தட்டிக் கொடுத்தார் . ஓன்றுமே பேசவில்லை .

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் முகநூல் பார்த்த போது மின்சார ரயிலில் அடிபட்டு முத்தரசன் இறந்து போனான் என்ற விவரத்தை அறிந்தார் . ஆனால் இது குறித்து தன் குடும்பத்தினருடன் ஒன்றும் பேசவில்லை .

மகளை இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு செக்கப் பிற்கு  அழைத்துச் சென்றார் . கணவர் பெயர் லேட் முத்தரசன் என்று கொடுத்தார் . மகளை தனக்கு தெரிந்தவர்களிடம் ஓடிப்போன பெண் என்று காட்டாமல் கணவனை இழந்த பெண்  என்று கௌரவமாக காட்டினார் .

அழகான ஆண் குழந்தை பிறந்தது . தாத்தா ராஜாமணி போலவே மாநிறத்தில் நீண்ட பெரிய மூக்கு , தீட்சண்யமான கண்கள் , நீண்ட கைகள்  என்று ஒரு குட்டி ராஜாமணி போல இருந்தது .

குழந்தை  நந்தகோபாலனைத்  தன்னுடனேயே  வைத்துக்  கொண்டனர் ராஜாமணியும் விமலாவும் . அவர்களையே அப்பாவும் அம்மாவும் என்று பாவித்தது குழந்தை . அனுவை ராஜாமணி அழைப்பது போல அனும்மா என்று அழைத்தான் . மாமா ஸ்ரீ ராமும் இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு பெரிய கார் கம்பெனியில் சென்னையில் வேலைக்கு சேர்ந்தான் .

அனுவின் படிப்பைத் தொடரச் செய்தார் .தொடர்ந்து  பிகாம் முடித்து எம் காம் படிக்கலானாள் .

ஸ்ரீ ராமுக்கு திருமணம் அமைந்தது . அவன் மனைவி  இந்திராணி குடும்பத்தினருடன்  நன்றாக அனுசரித்துப் போனாள் . நந்த கோபாலன் மீது தனது மூத்த மகன் இவன் தான் என்று  மிகவும்  அன்பு காட்டினாள் . அனுவிற்கும் தங்கள் தூரத்து உறவினரான பூவராகனுக்கு மணம் முடித்துக் கொடுக்க  பேர் உதவியாக இருந்தாள் .

பூவராகன் ஒரு காலேஜில் லெக்சரராக இருந்தான் . அனுராதா விற்கும் அதே காலேஜில் ஆபீசில் வேலையும் கிடைத்தது . தனுஜா தர்ஷனா என்று இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தனர் .

ராஜா மணியும் நிம்மதியானார் . நந்தகோபாலனும்  அனும்மா , பூவராகன் அப்பா என்று அழைத்து அன்பு காட்டினான் . தங்கைகள் மீதும் பாசமாக இருப்பான் .  தாத்தா பாட்டி வீட்டில் மாமா அத்தை அவர்களின் இரு மகன்களுடன் சந்தோஷமாக இருந்தான் . மிகவும் புத்திசாலி . பத்தாவது வகுப்பு வந்து விட்டான்.

ராஜாமணி வேலையில் எவ்வளவோ சாதித்து இருந்தார் . என்றாலும் தனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததைத் தான் தனது நிறைவான சாதனையாக கருதினார் . நந்த கோபாலனையும் தனது மகளின் குழந்தையாக மட்டுமே கருதி பாசத்தை அபரிமிதமாகப் பொழிந்தார் . மிகவும் மனம் நிறைந்து வாழ்ந்தார் .

நேற்று தன் குடும்பத்தினருடன் குல தெய்வம் வழிபாடு செய்து திரும்பி  வந்து இருந்தனர் . குலதெய்வம் கோயிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையை மிகவும் சந்தோஷமாக அளித்து வந்தார் .

இன்று அதிகாலையில் இறைவனடி சேர்ந்து விட்டார் .

அனுராதாவின்  கார் வீடு வந்து சேர்ந்தது . வீடு முழுவதும் ஜனங்கள் நிறைந்து இருந்தனர் . அப்பா என்று அலறியபடி  ஓடிச் சென்று   ஹாலில் நடுவாக படுக்க  வைக்க ப் பட்டு இருந்த  அவர் மார்பில் சாய்ந்தாள் . ஆற்றாது அலறினாள் . யாரோ அவளை வலுக்கட்டாயமாக ராஜாமணி யின் மார்பில் இருந்து பிரித்து தூக்கினார்கள் .

தன்னைத்தூக்கியது யார் என்று தலை நிமிர்ந்து பார்த்த போது அது அப்பாவாகத் தெரிந்தது . மிக இளம் வயதில் அப்பா எப்படி இருந்திருப்பாரோ அப்படி ! அப்பா என்றபடியே கழுத்தைச் சுற்றி கைகளால் அணைத்தாள் . அப்படியே மயக்கம் வந்தது. .

டேய் நந்து !  அனும்மாவை உள்ளே கட்டிலில் படுக்க வை . இந்து குடிக்க சூடாகப் பால் கொண்டு வா “ என்று கத்தினான் ஸ்ரீ ராம்  . மெல்ல மெல்ல  மயக்கத்தில் ஆழ்ந்து கொண்டு இருந்த அனுவுக்கு  அப்பாவாக அவளுக்கு தெரிந்தது நந்த கோபாலன் என்று உணரமுடிந்தது . முற்றிலும் மயக்கம் ஆனாள் .

கண்விழித்த போது அவளைச் சுற்றி அவள் குடும்பத்தினர் அனைவரும் இருந்தாலும் அவள் கண்கள் நந்துவைத் தேடின . பத்தாவது படிக்கும் நந்து அப்பாவைப் போலவே ஒங்கி வளர்ந்து அதே கருணைப் பொங்கும் கண்களுடன் அனும்மா என்றபடி நின்றிருந்தான் .

ஆகாசம் எப்போதும் இருக்கும் . அப்பா எப்போதும் நம்முடனேயேத் தான் இருப்பார்கள் என்று நம்பிக்கை வந்தது அனுராதாவுக்கு  . அப்பா இறந்த கவலை மறைந்தது  . திடீரென ஏற்பட்ட ஒரு மன நிறைவில் அமைதி ஆனாள் . இதுவும் அப்பா மறைந்தாலும் அனுவை சமாதானம் செய்த லீலையே .

நிறைவு பெற்றது .

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

5 comments

  1. Syamala venkataraman - Reply

    கதை தெளிந்த நீரோட்டம் போல் செல்கிறது

  2. S. V. Rangarajan - Reply

    வாழ்த்துக்கள்.மகள் தான் விரும்பிய படி வாழ ஆரம்பித்த பிறகு கணவனா ல் கைவிட தந்தை வளர்த்த விதம் அருமை அருமை

  3. Rani Balakrishnan - Reply

    மிகவும் நன்றி ஷ்யாமளா மேடம்

  4. Rani Balakrishnan - Reply

    மிகவும் நன்றி நண்பர் ரங்கராஜன்

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!