அடைகாப்பான்

0
(0)

“ஏண்டி, இன்னும் என்ன பண்ற, நாம இப்போ கிளம்பினா தான் நேரத்துக்கு அங்க போய் சேர முடியும்”

 

“அட கொஞ்சம் இருங்க, சும்மா எப்போவும் மாட்டை விரட்ற கணக்கா விரட்டிட்டு இருப்பீங்களே, பசங்கள ரெடி பண்ண வேண்டாமா, இன்னும் பத்துநிமிஷத்துல கிளம்பிடலாம்”

 

“என்ன பிள்ளையை வளர்த்துருக்கிறியோ, ரெண்டும் ரெண்டு ரகம், ஒண்ணுங்களாச்சும் பொறுப்பா இருக்குதுங்களா, சரி சீக்கிரம் வா”

 

“அண்ணா, அண்ணி ரெடி பண்ணி கூட்டிட்டு வரட்டும், அதுக்குள்ள நாம லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வருவோம்”

 

ரெண்டு நாளைக்கு இதுங்கள எப்படி மேய்க்கபோறேனோ,ஆண்டவா நீ தான் என்ன காப்பாத்தணும் என்று புலம்பியபடி லக்கேஜ் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் மருதன்…

 

“அண்ணன் எப்பவும் இப்படி தாங்க..சதா புலம்பிக்கிட்டே இருக்கும், அண்ணிய ஒரு நாள்கூட குறைசொல்லாம இருக்காது, அதே நேரம் அண்ணிமேலே அண்ணன்க்கு எக்கச்சக்க காதல் இருக்கு, ஆனா அதையெல்லாம் வெளிய சொல்லிக்காது.. என்னண்ணா சரிதானே” என்று வம்பிழுத்த தங்கையை செல்லமாய் தலையில் கொட்டினான் ..

 

“ஏண்டி, வந்தியா இல்லையா, எவ்ளோ நேரமா காத்திருக்கிறது”

 

“அட வந்துட்டேன் இருங்க, எங்கயாவது வெளில கிளம்பிறதுனா உங்க வாய்க்குள்ள மைக் செட் போட்டு வச்சிக்கிட்டு கத்த ஆரம்பிச்சிடுவீங்களே, நாம வெளில போறோம்னு ஊருக்கே தண்டோரா போட்டு சொல்விங்களோ… வண்டிய எடுங்க கிளம்பலாம்….”

விநாயகர் சதுர்த்திக்காக மொத்த குடும்பமும் பிள்ளையார்பட்டிக்கு பிள்ளையாரை தரிசிக்க சென்றுகொண்டிருக்க மருதன் மனம் மட்டும் ரெண்டு நாள் இவர்களை சமாளித்து பத்திரமாக கூட்டி வர வேண்டும் என்ற சின்ன விசனத்தோடு வண்டி ஓட்டி கொண்டிருந்தான்…

“அண்ணா, எதுக்கு இப்படி உம்முன்னு வந்துகிட்டு இருக்க, ஏதாவது பேசிட்டே போகலாம்ல”

 

“அதான் அண்ணி இருக்கால்ல, அவளோட பேசிட்டு வாம்மா, நான் கார் ஓட்றதுல தான் கவனமா இருக்கணும், உங்களோட பேசிட்டு கவனம் குறைஞ்சதுனா எங்கயாவது காரை கொண்டு போய் முட்டிட்டு தான் நிற்கணும்”

மருதன் இப்படி தான்… குடும்பத்தோடு வெளியில் போனாலே இத்தனை கவனமாக தான் இருப்பான், அந்த கவனமெல்லாம் அவன் மனைவி, பிள்ளைகளிடம் கோபமாக காட்டுவான், அவன் தங்கச்சி என்றால் மட்டும் பாசம் தேனாய் வார்த்தையில் கசியும்..சின்ன வயதிலேயே தாய் இறந்துவிட தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள், மருதனின் திருமணம் முடிந்து ரெண்டு மாதத்தில் அவன் தந்தையும் மரணிக்க அவன் தங்கைக்கு தாய் தந்தையாக மருதனே மாறிப்போனான்…

 

இதே கவனத்தோடு கோவில் போய் கும்பிட்டு கண்ணும்கருத்துமாய் நால்வரையும் சாமி தரிசனம் செய்ய வைத்தவன், கிளம்பும் நேரத்தில் மருதனின் இரண்டு பிள்ளைகளும் பொம்மை கேட்டு அடம்பிடிக்க கோவில் அருகில் இருந்த கடைக்கு அழைத்து சென்றான்…

 

“எந்த பொம்பை வேணுமோ வாங்கிக்கோங்க”

 

“அப்பா எனக்கு இந்த பொம்மை தான் வேணும், இந்த ஓடற ட்ரெயின் பொம்மை”

 

“சரிடா இரு வாங்கி தரேன், என்னப்பா தம்பி, இந்த பொம்மை எவ்ளோ”

 

“250 “

 

“என்னங்க, போன திருவிழாவுல நம்ம ஊருலயே இத 150க்கு தான் பவளம் அவ பிள்ளைக்கு வாங்கிக்கொடுத்தா, விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்குங்க”

 

” 150 க்கு தரியா”

 

“இல்லையா, கட்டாகாது…அசலே வராதுயா…வேணும்னா நீங்க கேட்கறதாலே 200க்கு தரேன்”

 

“இல்லப்பா, 150க்குனா தா…”

 

“இல்லைங்கையா.. அவ்வளவு குறைச்சி தந்தா அண்ணாச்சி என்ன வெளுத்துடுவாரு…”

 

கொஞ்ச நேரம் அலசலுக்கு பின் வேறொரு பொம்மையை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்ப அடுத்த கடைக்கு போய் இரண்டு பெண்களும் தோடு, வளையல் என தேர்ந்தெடுப்பதில் அடுத்த அரைமணிநேரம் ஓடிப்போனது…

 

அங்கு நடந்த பேரத்திலும் அண்ணாச்சி என்ற வார்த்தை அடிப்பட மருதனின் மனம் குறுகுறுக்க ஆரம்பித்தது…

அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் பைரவர் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து அமர நாவற்பழத்தை பார்த்து மருதனின் இளைய பையன் வருண் அடம்பிடிக்க ஆரம்பித்தான்…

 

“இருடா, நான் வாங்கியாறேன், பத்மா பாத்துக்கோ, நான் வாங்கிட்டு வரேன்”

 

“தம்பி நாவல்பழம் எவ்ளோப்பா”

 

“ஒரு க்ளாஸ் பத்து ரூபா”

 

“அப்போ அஞ்சு பொட்டலாமா குடு, அப்படியே உப்பு தூவி குடு”

 

“சரிங்கண்ணா”

 

அந்த நடு உச்சி வெயிலில் கோவிலுக்கு பக்கவாட்டில் நிழல் இருக்க, வியாபரத்துக்காக கோவிலுக்கு முன்பக்கம் வெயிலில் வேர்வை வடிய கருத்துப்போய் இருந்த அந்த சின்ன பிள்ளைகளை பார்க்க மருதனுக்கு பாவமாக இருந்தது…

 

“ஏண்டா, அந்த பக்கமா போய் உட்காரலாம்ல, இங்க இவ்ளோ வெயில் சுருக்குனு உறைக்குது…இங்கயே உட்காந்திருக்கிங்களே”

 

” அந்த பக்கம் போனா அவ்ளோதான் அண்ணாச்சி எங்களை அடிச்சிடுவாரு, அதான் இங்கயே இருக்கோம், இன்னும் கொஞ்சம் உப்பு போடட்டுமா” என்று பேச்சை மாற்றினான் அந்த பையன்…

 

மீண்டும் மீண்டும் சிறுவர்கள் வாயில் இருந்து அண்ணாச்சி என்ற சொல் அடிப்பட மருதனின் மனம் என்னவோ போல் ஆனது… கொஞ்சம் மனகுறுகுறுப்போடு அடுத்த கோவிலுக்கு போக தயாரானான்…

 

அங்கும் கோவிலுக்கு முன் விளக்கு, கற்பூரம் விற்றுக்கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து மருதன் எதோ நினைத்தவனாக அருகில் சென்றான்…விளக்கு வாங்கியபடியே அண்ணாச்சியை பற்றி விசாரித்தான்…அவர்களும் அண்ணாச்சிக்காக வேலை செய்பவர்கள் என்பதையும், அண்ணாச்சி இருக்கும் இடம் அருகில் தான் என்பதும் தெரிய கோவிலுக்குள் சென்றான்…

“என்னங்க, ரஞ்சிதக்கா வந்திருக்காங்க போல, அவங்க பொண்ணு அங்க நிக்குது”

 

“வா அங்க போய் பாப்போம்”

 

சாமிகும்பிட்டுவிட்டு ரஞ்சித்ததோடு பேசிக்கொண்டு அமர்ந்திருந்தவன் மனதில் ஒரு யோசனை தோன்ற ரஞ்சித்ததோடு நால்வரையும் விட்டுவிட்டு அருகில் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினான்…

யாரந்த அண்ணாச்சி, இப்படி பச்சபுள்ளைகள பாடாப்படுத்தற பய யாருனு பார்த்தே ஆகணும்…குழந்தைங்க தெய்வம் மாதிரி, அதுகளை வேல வாங்கி வயித்த கழுவற பொழப்பு ஒரு பொழப்பா, நேர்ல பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டா தான் மனசு அடங்கும்..என்று எதோ ஒரு கோபத்திலும் வெறியிலும் அண்ணாச்சியை தேடி போனவன் அண்ணாச்சி இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்…

 

மாளிகை மாதிரி எவ்ளோ பெருசா இருக்கு, இப்படி வாழத்தான் அந்த பிஞ்சு குழந்தைகளை அடிச்சி வதைக்கறானோ…ஒரு ஆதங்கத்தோடு உள்ளே போனான்…

 

“ஐயா, யாரை பார்க்கணும்.” வாசலிலே ஒரு பெரியவர் கேட்க அவன் மேல் உள்ள கோபத்தை இவர்மேல் காட்ட கூடாதென்று நினைத்துவிட்டு அண்ணாச்சியிடம் பேச வேண்டும் என்பதை மட்டும் சொல்ல அந்த பெரியவர் உள்ளே அழைத்து சென்றார்…

 

“ஐயா குழந்தைகளை குளிப்பாட்டிட்டு இருக்காருங்க, வந்துடுவார், உங்களுக்கு குடிக்க தண்ணி கொண்டுவரேன்”

 

இத்தனை குழந்தைகளை வாட்டிவதக்கி விட்டு தன்பிள்ளையை மட்டும் குளிக்கவைத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறான் என்று உள்ளுக்குள் பொருமி கொண்டிருந்தான் மருதன்…இருந்தாலும் மருதனுக்கு தான் செய்து கொண்டிருப்பதே பிரமிப்பாக இருந்தது, இப்படி கும்பிட வந்த ஊருக்குள் எவனோ ஒரு அண்ணாச்சியை தேடி நாலுவார்த்தை கேட்கபோவதாக வந்திருக்கிறோமே…அவன் எப்போதுமே இப்படி பஞ்சாயத்துக்கு போவது வழக்கம் தான், குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் மல்லுக்கட்டி கொண்டு போகும் ஆள் தான், அந்த தைரியத்தில் இங்கும் வந்துவிட்டான், இருந்தாலும் குடும்பத்தோடு வந்த சமயத்தில் இப்படி அவசரப்பட்டு வந்திருக்க வேண்டாம் என்றே தோன்றியது…

 

“இந்தாங்க தம்பி, இந்த தண்ணிய குடிங்க…கொஞ்ச நேரத்துல வந்திடுவார்.,.அண்ணாச்சி எப்பவுமே இப்படி தான்,பிள்ளைங்களை பாத்துக்கிட்டா நேரம் போறதே தெரியாது, சாப்பிடாம கூட குளிப்பாட்டிட்டு இருக்காரு, இன்னைக்கு பொன்னியம்மா வரல..அதான் சொல்ல சொல்ல கேட்காம அண்ணாச்சியே குளிப்பாட்டறாரு.”

 

“அவருக்கு எத்தனை குழந்தைங்க”

 

“அவருக்கா, மொத்தம் 35 குழந்தைங்க தம்பி”

 

“——–“

 

“என்ன தம்பி அப்படி பார்க்கறீங்க, இங்க வளர்ற குழந்தைங்க எல்லாம் அவர் குழந்தைங்க மாதிரி தான்”

 

“அப்போ அவர்க்கு குழந்தைங்க இல்லையா”

 

“அத ஏன் தம்பி கேட்கறீங்க, பொறக்கும்போதே முடமா பொறந்துச்சி, மூளை காய்ச்சல்ல இறந்து போச்சி, எத்தனையோ வைத்தியம் பண்ணியும் பொழைக்க வைக்க முடியல,அந்த துக்கத்துலயே அந்தம்மாவும் போயிடுச்சி…பிள்ளை பாசம் விடல, ரோட்டுல கிடந்த பிள்ளையை தூக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்ச மனுஷன் முழு நேரமா பிள்ளைங்களை வளர்க்கிற பொறுப்பை எடுத்துக்கிட்டாரு”

 

“டிரஸ்ட் பணம் வருமே, எதுக்கு இப்படி படிக்கற வயசுல வேலைக்கு அனுப்பனும்”

 

“டிரஸ்ட் பணமா, அதெல்லாம் பத்தாது தம்பி, அண்ணாச்சி பணத்துல தான் பிள்ளைங்க வாழ்க்கை ஓடுது, பிள்ளைங்கலளாம் படிக்க அனுப்பறாரு தான், லீவ் நாள்ல மாட்டும் ஆளுக்கொரு வேலை பார்க்கும்,அப்டிலாம் சம்பாரிச்சா தானே இத்தனை பிள்ளைங்க வயிறு நிறையும், என்ன ஒண்ணு, அண்ணாச்சியோட கோவம் தான் அவரு குறையே..இவ்ளோ செய்ற மனுஷன் பிள்ளைங்கள்ட கண்டிப்பா இருப்பாரு, அதுகளுக்கும் பாசம் எது கோவம் எதுன்னு புரியாது.. அண்ணாச்சி பேரை சொன்னா பயந்து நடுங்கும்…”ஏன் அண்ணாச்சி எல்லாமே செஞ்சிட்டு பிள்ளைங்களை இப்படி பயப்படற அளவுக்கு கண்டிக்கிறீங்கன்னு? கேட்டா.. ‘பயம் இருக்கற இடம் தான் வளர்ப்பு சரியா இருக்கும்’ னு சிரிச்சிட்டே போய்டுவாரு…

 

மருதனுக்கு சுருக்கென்று இருந்தது, இத்தனை செய்யும் நாமும் பிள்ளைகளிடம் கோவத்தை தானே காட்டி கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது…

 

“இருங்க நான் போய் அண்ணாச்சியை கூட்டிட்டு வரேன், நீங்க வந்து ரொம்ப நேரம் ஆகுதுல்ல”

 

“இல்லங்க வேண்டாம், எனக்கு நேரம் ஆச்சி, கோவில்ல பொண்டாட்டி பிள்ளையை நிற்க வச்சிட்டு வந்திருக்கேன், நான் இன்னொரு நாள் வரேன், இத மட்டும் அண்ணாச்சி கைல கொடுத்துருங்க”

 

“என்னது தம்பி இது”

 

“இதுல ரெண்டாயிரம் ரூபா இருக்கு, ஏதோ என்னால முடிஞ்சது”

 

“யார் குடுத்தாதுனு கேட்டா, என்ன சொல்ல”

 

“அவர் போல ஒரு தகப்பன் கொடுத்ததுனு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகநடை போட்டு கிளம்பினான்…

கடைசிவரை அந்த அண்ணாச்சி முகம் பார்க்கவில்லை என்றாலும் அவரின் உண்மை முகம் புரிந்த திருப்தி இருந்தது..

 

கோவிலுக்கு சென்றவன் பிள்ளைகள் அருகில் போகவும், “டேய் உங்கப்பா வந்துட்டாருடா, அ டம் பிடிக்காம இரு இல்ல அடிச்சிப்புடுவாரு” என்று பத்மா எச்சரிக்கை செய்ய மருதனுக்கு பயந்த பிள்ளைகள் அமைதியாகிவிட்டது….

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!