பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே !!

0
(0)

உதடுக்கும் தேநீர் கோப்பைக்கும் இருக்கும் சாவதானம் பொதிந்த மாலை நேரத்தில் ஒலிக்கும் நா.முத்துக்குமார் அவரக்ளின் வரிகளால் மனம் இயல்பை விட இலகுவாகிவிடுகிறது ;  “பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே”, இவ்வரிகளுக்கேற்ப நம் நினைவில் வருவது “விவியன் மேயர்”.
விவியன் டோரோதி மேயர் (1926 – 2009 ) , அமெரிக்க புகைப்பட கலைஞர். இவர் புகைப்படக் கலைஞர் என்று அறியப்பட்டதென்பது  இவரின் மரணத்திற்கு பிறகே, புகைப்படங்களின் வகைமைகளில் மிக முக்கியமான வகைமை, “தெருப்  புகைப்படயியல்” (Street photography), வீதியில் நிகழும் நிகழ்வுகளை ரசனையுடன் கட்டமைத்து அதில் பல கூற்றுகளைக் கொண்டது தெருப்  புகைப்படங்களின் தன்மை. விவியன் மேயர் எடுத்த புகைப்படங்கள் யாவும் அவரின் மறைவிற்கு பின்னரே உலக  புகழ் பெற்றன. சுமார் 40 ஆண்டு காலம் குழந்தைக் காப்பாளராக சிகாகோவில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரதிற்கு மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்துள்ளார். விவியன் மேயர் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகைக் கொடுக்க இயலாத சூழலில், அவரை வீட்டை விட்டு காலி செய்ய வைத்து வீட்டிலுள்ள நெகட்டிவ் பிரதிகளையெல்லாம் ஏலத்திற்கு கொடுத்துவிட்டனர்.
2007 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக எல்லா நெகடிவ்களை ஏலத்திலிருந்து ஜான் மலூப் (JHON MALOOF) என்பவர் எடுத்தார், அதன் பின்னர் அவற்றை  புகைப்படங்களாக உருவாக்கி பார்க்கையில் அப்படங்கள் யாவும் வித்தியாசமாக இருந்தன. அதில் சிலவற்றை கணினியில் பதிவேற்றி புகைப்படத்திற்கு ப்ரத்தியேகமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில்  இணைத்தார், வெறும் சொற்ப காலச்சூழலில் அப்படங்கள் புகழின் உச்சிக்கே சென்றன. மேற்கண்ட விவியன் மேயர் யார் ? என்று தேடும் படலம் பெரிதாகிறது. விவியனின் மறைவிற்கு பின்னரே அவர் தான் இந்த புகைப்படங்களின் கண்கள் என தெரியவந்தது. (FINDING VIVIAN MAIER) 2013 ஆம் ஆண்டில் வெளியான ஆவணப்படம் மிகவும்   முக்கியமானது, ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இன்று புகைப்படங்கள் மீது தீரா காதல் கொண்டிருந்தால் அவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய முக்கிய ஆவணப்படம் இது.
விவியன் மேயர் புகைப்பட நெகடிவ்கள் மட்டுமின்றி சில காணொளிகளையும் எடுத்திருக்கிறார், அவர் பணிபுரியும் வீட்டிலுள்ள குழந்தைகளின் குறும்பு தனத்தை அவர்களின் வாழ்வியலைப்  பதிவு செய்திருந்தார். இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமேயானால், அவரின் சுய உருவப்படம் (SELF POTRAIT) அதி  நேர்த்தியாக இருக்கும். அப்படங்களில்  அவரின் தனிமையின் பீடிக்கையை பார்க்க இயலும். இன்னும் குறிப்பாக சொல்வோமேயானால் (DOUBLE EXPOSURE) பாணியில் எடுத்து சுயப்படங்கள் பல நூறு கதைகள் கொண்டிருக்கும்.அவரின் தொடக்க காலக்கட்டத்தில் பெரும்பான்மையாக ரோல்லிபிளேஸ் (ROLLIFLEX) 8mm பிலிம் ரோல்களால் படம் பிடிக்கப்பட்டவை. விவியன் எடுத்த ஒவ்வொரு படத்திலும் பேருணர்வு கலந்திருக்கும். விவியனின் புகைப்படமெடுக்கும் நுட்பம் மெச்சும்படியானது, அவர் புகைப்படம் எடுக்கப்படுவோரை (SUBJECT) எவ்வளவு அருகாமையில் செல்ல முடியுமோ செல்வார் மற்றும் ரோல்லிபிளேஸ் கேமரா குனிந்து பார்த்து எடுப்பதாக இருக்கும் ஆகையால் பெரும்பாலும் கருப்பொருளாக இருக்கப்படுவோர் இயல்பாகவே இருப்பர். இதனால், புகைப்படங்களின் ஆயுள் இலக்கற்றது.மேயரின் புகைப்படங்கள் இணையத்தில் இருக்கிறது, அப்படங்களை அவதானிக்கையில் 50 களில் நியூ யார்க் நகரத்தின் வாழ்வை கால மாற்றத்தை எளிதில் உணரமுடிகிறது.
அங்கீகாரத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏங்காத அகவயத் தன்மை கொண்ட பெண்மணி தனது வாழ்வு முழுவதும் புகைப்படங்களுடன் உரையாடியதில் அவர் கண்டடைந்த உணர்வின் குவியல் ஏராளமே.  ஒருவர் சுயத்  திறமையை வெளிக்   கொணர விருப்பமில்லையென்ற போதிலும் அத்திறமை அவரை உலகரியவைக்கும், விவியன் வாழ்ந்த நாட்களில் பாட்டியாக , குழந்தை பராமரிப்பாளராக திகழ்ந்தாலும் , அவர் மறைவிற்கு பிறகு புகைப்பட ஆளுமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

“பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே”..

 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!