என்றும் இல்லாத திருநாளாய் அக்காவிடமிருந்து போன் வந்தது… பிரச்சனை எதுவும் இல்லாமல் அக்கா போன் செய்யமாட்டாளே என்ற பயத்தோடே போனை எடுத்து பேசினேன்…
“என்னக்கா…எப்படி இருக்க? பிரச்சனை எதுவுமில்லையே..மாமா உங்கிட்ட சண்டை எதுவும் போட்டாரா..” பதட்டத்தில் நான்பாட்டுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்க அக்காவின் கனீர் குரல் என்னை அடக்கியது…
“என்னடி எடுத்ததும் இப்படி கேட்கற..நான் போன் பண்ணாலே பிரச்சனையா தான் இருக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியாக்கும்…அதெல்லாம் ஒண்ணுமில்ல…நான் நல்லா தான் இருக்கேன்…சொல்ல போனா உங்க மாமா இப்போ தான் நல்ல விதமா நடந்துக்குறார்..”
அக்காவின் இந்த வார்த்தையை கேட்டதும் தான் மனம் நிம்மதியானது…
“என்னக்கா…புதுசா என்னென்னவோ சொல்ற…நிஜமா தான் சொல்றயா இல்ல எனக்காக சமாளிக்கறயா?”
“நிஜமாதாண்டி சொல்றேன்…உன் மாமா இப்போ தான் புத்தியோட நடந்துக்குறார்…கவிதாவுக்கு மாப்ள பாத்துருக்காரு….பையன் அவரு தங்கச்சி வீட்டுகாரரோட சொந்தம் தான்…நல்ல சம்மந்தம்…பையனுக்கும் எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லயாம்…எல்லாம் விசாரிச்சிட்டாங்க…வீட்ல எல்லாருக்கும் பையன பிடிச்சிருச்சு…அவங்க வீட்லயும் கவிதாவ பிடிச்சி போச்சி…அதான் நிச்சயம் பண்ணிருலாம்னு முடிவு பண்ணிருக்கோம்…நாளைக்கு மறுநாள் நிச்சயம்…நீ கண்டிப்பா வந்துடுடனும்…சரியா…அத சொல்ல தான் கூப்பிட்டேன்..”
அக்கா பாட்டுக்கு பேசிக்கொண்டே போக கவிக்கு நிச்சயம் என்ற இடத்திலேயே மனம் ரணமாகி நின்றது…
“என்னடி சத்ததையே காணோம்…அம்மு லைன்ல இருக்கியா…இல்லயா..”
அக்காவின் குரலில் சுதாரித்துக்கொண்டு இயல்பாக பேசினேன்…
“லைன்ல இல்லாம எங்க போக போறேன்…கேட்டுட்டு தான் இருக்கேன்..சொல்லு”
“என்னடி… இப்போ வந்து சொல்றேனு கோபமா…உன் மாமா பத்தி தான் உனக்கே தெரியுமே…எந்த நேரத்துல அவர் புத்தி எப்படி போகும்னு யாராலயும் கணிக்க முடியாது…எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி..”
“சரிக்கா புலம்பாத..இப்போ நான் என்ன செய்யனும்…அத மட்டும் சொல்லு”
“இவ்ளோ தூரம் சொல்லியும் உனக்கு கோபம் குறையலயா…இப்போ கூட பயந்துகிட்டே தான் அம்மாவ அழைக்கட்டுமானு அந்த மனுஷன்கிட்ட கேட்டேன்…என்ன நல்ல நேரமோ தெரில சரினு சொல்லிட்டாரு…நீ அம்மாவ கூட்டிட்டு நிச்சயத்துக்கு வந்துடறயா…”
“அம்மாக்கு உடம்பு சரி இல்லக்கா..அவ்ளோ தூரம் அம்மாவால ட்ராவல் பண்ண முடியாது..வர்ரதுனா நான் மட்டும் தான் வரனும்…”
“அப்படியா…என்ன ஆச்சி… எங்கிட்டகூட நீ எதுவும் சொல்லலயே…”
“பெருசா எதுவும் இல்லக்கா…ரெண்டு மாசம் முன்ன அம்மா கீழ விழுந்துடுச்சினு சொன்னேன்ல..அப்ப இருந்தே அப்பபோ உடம்பு முடியாம தான் போய்ட்டு இருக்கு…..உடம்பு சரியில்லாதப்போ சும்மா இருனு சொன்னா கேட்டா தானே..எதாவது ஒரு வேலை செஞ்சி இன்னும் உடம்ப கெடுத்துக்குது….அப்பறம் என்னால ஒண்ணும் முடியலனு புலம்பறது…எல்லாம் பழகி போன விஷயம் தான்க்கா…சரி இத பத்திலாம் நீ யோசிக்காத….நான் நிச்சயத்துக்கு வந்துடறேன்..நீ மனசுல எதுவும் போட்டு குழப்பிக்காத…சரியா..”
“சரிடி..நாளைக்கே வரலாம்ல..விருந்தாளி மாதிரி நிச்சயதுக்கு வந்தோமா கிளம்பினோமானு அரக்க பரக்க வர போறயா”
“விருந்தாளிகணக்கா கடைசி நேரத்துல தான எங்கிட்ட சொல்லிருக்க..”
“ஏன்டி நீயும் என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற”
“சரி அழாத..ஆபிஸ்ல லீவ் கேட்க வேண்டாமா..நாளைக்கு போய் தான் லீவ் கேட்டுட்டு கிளம்பனும்…மத்தபடி உன்மேல கோவிச்சிட்டு நான் எங்க போக போறேன்…நிச்சயதுக்கு கண்டிப்பா வந்துடறேன்..ஆமா சீர் எதுவும் செய்யனுமா…அதுக்கு வேற தாம்தூம்னு குதிக்க போறாங்க…”
“அதெல்லாம் வேண்டாம்டி….நீ வந்தா மட்டும் போதும்….மீதி ஏற்பாட நான் பாத்துக்கறேன்…ஆமா அம்மாவ யார் பாத்துக்குவா”
“அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு தான்க்கா வருவேன்..நீ கவலைப்படாத..சரிக்கா நான் ஊருக்கு கிளம்பிட்டு கூப்டறேன்..போனை வைக்கட்டுமா..”
“சரிடி..ஜாக்கிரதையா வா..பஸ்ஸ்டாண்ட் வந்துட்டு சொல்லு..உன்ன கூட்டிட்டு வர ஆள் அனுப்பறேன்..”
சொல்லிவிட்டு அந்த பக்கம் அக்கா போனை துண்டித்ததும் எனக்குள்ளிருந்து அழுகை பொங்கி வந்தது…எவ்வளவு முயன்றும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் போகவே பாத்ரூம்க்குள் போய் கதவை தாழ் போட்டுவிட்டு சத்தம் வராமல் அழுகையை கொட்டி தீர்த்தேன்…
இந்த வாழ்க்கை என்னை எத்தனை தூரம் இரும்பு மனுஷியாய் ஆளாக்கியிருந்தாலும் நிர்கதியாய் நிற்கிறேனே என்ற எண்ணம் மட்டும் அவ்வபோது வந்து என்னை அசைத்து பார்த்து அழவைக்கிறதே..
அழுது கலைத்து சோர்ந்து போன நேரத்தில் அம்மாவின் சன்னமான குரல் என்னை நிதானத்திற்க்கு கொண்டு வந்தது…அழுத சுவடே இல்லாமல் முகத்தை சோப் போட்டு கழுவி துடைத்துவிட்டு எதுவும் என்னை பாதிக்கவில்லை என்ற விதத்தில் அம்மாவிடம் போனேன்…
“என்னம்மா…கூப்டியா?”
“ஏதோ போன் வந்துச்சின்னு போனை தூக்கிட்டு பின்னாடி போனயே…இவ்ளோ நேரம் ஆகியும் ஆளை காணோமேனு தான் கூப்ட்டேன்…யாரு போன் பண்ணது….”
“வேற யாரு..உன் மூத்த மக செல்வி தான்”
“என்னவாம்..எதுவும் சண்டசச்சரவா புள்ள”
“அட நீ வேறம்மா..கவி குட்டிக்கு வர்ர புதன்கிழமை நிச்சயமாம்…அத சொல்ல தான் அக்கா கூப்டுச்சி”
“நான் பொழைக்கற பொழைப்ப பாத்தியா…உன்ன கட்டிகுடுக்கவும் வக்கில்ல…கட்டி குடுத்தவ வீட்லயும் ஒரு மரியாத எழவும் இல்ல…உங்கப்பங்காரன் ஒழுங்கா இருந்திருந்தா இந்த நிலமை வந்துருக்குமா…என் வயிறு பத்தி எரியுது…இன்னும் எதுக்கு இந்த உயிரை வச்சிட்டு இருக்கணும்…உங்கப்பன் போன இடத்துக்கே போய் தொலஞ்சிற மாட்டேனானு இருக்கு..ஏதோ உன்ன கரைசேர்க்கற வரை இருக்கனுமேனு தான் இந்த மூச்ச பிடிச்சி வச்சிட்டு இருக்கேன் ”
“ஆரம்பிச்சிட்டியாம்மா…இப்போ எனக்கென்ன அறுபது வயசா ஆச்சி..சொல்லப்போனா இன்னும் முப்பது கூட ஆகல..அதுக்குள்ள இந்த புலம்பு புலம்பற…எல்லா வீட்லயும் பேத்திக்கு கல்யாணம்னா பாட்டிங்க சந்தோசத்துல வானுக்கும் தரைக்குமா குதிக்கிறாங்க…நீ என்னன்னா ஒப்பாரி வைக்கற”
“ஏப்புள்ள…நீ ஒத்தயில நிக்கும்போது உன் அக்கா புள்ளைக்கு கல்யாணம்னா பெத்த வயிறு எப்படிபுள்ள குளிரும்…உனக்குனு நல்லத எடுத்துக்கட்டி செய்ய எந்த சாதிசனமும் இல்லனு நினைக்கையில நெஞ்சு பதறுது…எந்த சாமிக்கும் கண்ணில்லையா..எம்புள்ளைய இப்படி பார்க்கவா என்ன வச்சிருக்க”
“இப்படியே புலம்பிட்டு இரு…எதயாவது குடிச்சிட்டு நான் சாகறேன்…அப்போ உன் கவலை தீரும்ல..அப்பறம் சும்மா இருப்பல்ல”
“என்னபுள்ள இப்படி பேசற”
“பின்ன என்னம்மா…இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நான் அழுதேனா..செல்விக்கு பதினாறு வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சீங்க…அப்போ எனக்கு ஆறு வயசு தான்…அடுத்த வருசமே கவி பொறந்துட்டா….கவியும் நானும் அக்கா தங்கச்சி மாதிரி தானே இருந்தோம்…இப்போ அவளுக்கு கல்யாணம்…எனக்கு எப்போ நடக்கனும்னு இருக்கோ அப்போ நடக்கட்டும்…இப்படி நீ அழுது புலம்பினா உன் உடம்பு தான் கெட்டு போகும்…”
“ஆமா நான் நல்லா இருந்து மட்டும் என்ன சாதிக்க போறேன்”
“போதும்மா…புலம்பாம சொல்றத கேளு…நீ பண்ண ஆர்பாட்டத்துல சொல்ல வந்ததே மறந்துட்டேன் பாரு…வர்ர புதன் கிழமை நிச்சயம்…நாளைக்கு ஆபிஸ்க்கு போய் லீவ் சொல்லிட்டு அடுத்த நாள் காலைல நிச்சயத்துக்கு நேரமா கிளம்பணும்..பாப்பக்காக்கிட்ட சொல்லி உன்ன பாத்துக்க சொல்றேன்..எப்படியும் நைட்டுகுள்ள வந்துடுவேன்னு நினைக்கிறென்…அதுக்கு மேல அங்க எனக்கென்ன வேலை இருக்க போகுது…நீ பத்ரமா இருந்துக்கோ சரியாம்மா”
“நிச்சயத்துக்கு போக போறயா?”
“இவ்ளோ நேரம் என்னம்மா சொல்லிட்டு இருந்தேன்”
“நீ ஒன்னும் அங்க தனியா போக வேண்டாம்…உன்ன எதாவது நொட்டு சொல்லு சொல்லியே கலங்கடிப்பாங்க…பேசாம விடு புள்ள”
“அம்மா நம்ப வீட்டுபக்கம் இருந்து யாரும் போகலனா தப்பாயிடும்…உன் மருமகன் தான் வேற கூப்பிட சொன்னாராம்…போகாம விட்டாலும் பிரச்சனை தான்…அதுக்கு அங்க போனா கூட அக்காவுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்ல..”
“என்னவோ போ புள்ள.அவளுக்காக இன்னும் எவ்வளவு தான் பொறுத்து போவயோ…”
“என்னம்மா பண்றது… இப்போ கூடபொறந்தவனு சொல்லிக்க அவ ஒருத்தி தானே இருக்கா…கோகிலா அக்கா தான் எங்க இருக்குனே தெரிலயே..”
“ஏய்..வாய மூடு..அவ பேரை கூட சொல்லாத…நம்மள சீரழிச்சவ எங்க இருந்தாலும் நல்லாவா இருந்துட போறா…”
“சரி சரி நான் பேசல..திரும்பவும் ஆரம்பிச்சிராத…மாத்திரை போட்டுட்டியா..”
“ம்…போட்டுட்டேன்…”
“சரி படுத்து தூங்கு…நான் துணி துவைச்சி போட்டுட்டு வந்துடறேன்…”
எப்படியோ அம்மாவை சமாதானம் செய்தாயிற்று…என் மனதை எப்படி யாரை வைத்து சமாதானம் செய்வது? எப்படியும் அங்கு போனால் அவமானப்படுத்தி தான் திருப்பி அனுப்ப போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.. அதை நினைத்தால் தான் மனம் கலங்கி தவித்தது…எந்த கடவுளை துணைக்கு அழைத்து செல்வது என்ற கேள்வியோடே துணிகளை துவைக்க ஆரம்பித்தேன்…
தொடரும்…
1 comment