இது தான் என் முடிவு

0
(0)

எப்படியும் அவன் வர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும்.. அவன் எப்போதுமே இதே போல தான், சொன்ன நேரத்தை தாண்டி ஒருமணி நேரமாவது காக்க வைத்துவிடுவான்.. ஏற்கனவே அரைமணி நேரத்தை எனக்கு அடுத்த டேபிளில் கொஞ்சிக்கொண்டிருந்த காதலர்களின் வசனத்தை கேட்பதில் கடத்தி விட்டேன்.. சுற்றி உள்ள ஹோட்டலின் ஒவ்வொரு மூளையையும் இங்கு உள்ளவர்களின் முகத்தையும் பார்த்து பார்த்து அலுத்துவிட்டது, டேபிளின் மேல் சிந்திக்கிடந்த ஓரிரு துளி நீரில் கோலம் போட்டு அந்த நீரும் கூட அடிக்கிற வெயிலில் ஆவியாகிவிட்டது.. இனி இங்கு வேடிக்கை பார்க்க ஒன்றுமே இல்லை.

எனக்கு அடுத்து இரண்டு டேபிள் தள்ளி முகம் கையெல்லாம் அப்பிக்கொண்டு ருசித்து ரசித்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்த கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தையின் முகத்தை பார்த்ததும் எனக்கென்னவோ இத்தனை நாளாய் உள்ளுக்குள் போட்டு புதைத்து வைத்திருந்த கடந்த கால நிகழ்வுகளெல்லாம் நினைவுக்கு வர ஆரம்பித்து விட்டது.

இதே போல தான் இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் வைத்து அவன் என்னை சந்தித்தான், அவன் என்னை பார்த்த முதல் பார்வையிலேயே அவனுக்குள் என் மீது காதல் வந்துவிட்டது என சிலாகித்து பல முறை இதை பற்றி என்னிடம் பேசியிருக்கிறான். என் தோழியோடு ஐஸ்க்ரீம் பார்லரில் என்ஜாய் செய்து கொண்டிருந்தபோது எதார்தமாய் அங்கு வந்த அவனோடு என் தோழியின் அண்ணனின் நண்பன் என்கிற முறையில் நானும் அந்த சில நிமிடங்களை கடத்த வேண்டியிருந்தது. இத்தனைக்கும் அன்று சின்ன புன்னகையை தாண்டி நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை..

ஆனால் அவனுக்கோ என் கண்களும்,அழகும் அவனுக்குள் புகுந்து ஏதோ செய்துவிட்டதாம்.. அன்று என் மேல் பிடித்த பித்து அவன் வாழ்க்கையையே வேறொரு கோணத்தில் மாற்றிவிட்டதென அவன் கோபமாய் இருக்கும் நேரத்தில் குத்திக்காட்டுவதும் அவ்வப்போது நடக்கும்..

செல்ல சண்டைகள், ஊடல் கூடலேன அவனோடு அழகான காதல் வாழ்க்கையை ஒரு வருடம் வாழ்ந்து பார்த்துவிட்டேன்.. எப்படி அவன் என்னிடம் காதலை தெரிவித்தபோது எதுவும் யோசிக்காமல் ஏற்று கொண்டேன் என இன்றுவரை எனக்கு புரியவில்லை.

அவனாகவே தான் வந்து காதலை சொன்னான், நானும் சம்மதித்தபோது தலையில் தூக்கிவைத்துக்கொண்டு என்மேல் காதலை பொழிந்தான், என் மீது அளவுக்கதிகமாக உரிமை எடுத்துக்கொண்டான். கல்யாணத்துக்கு முன்னாடி தொடக்கூடாது என்ற என் வார்த்தையை மதித்தாலும் அடம்பிடித்தாவது அவ்வப்போது என் இதழ் முத்தங்களை வாங்கிக்கொள்வான்.

ஒன்றாக பைக்கில் ஊர் சுத்தியது, கோவிலில் அவன் பேரிலும் என் பேரிலும் அர்ச்சனை செய்தது, இவன் என் நண்பன் என எங்களை பார்த்த என் நட்புக்களிடம் பொய்யுரைத்தது, சில நெருங்கிய தோழிகளிடம் இவன் மட்டும் தான் என் வாழ்க்கையென உண்மையை போட்டுடைத்தது என அத்தனையும் நேற்று நடந்தது போல தான் தோன்றுகிறது.

எந்த இடத்தில் எனக்கும் அவனுக்கும் விரிசல் விழுந்திருக்கும், அந்த காயத்ரி மட்டும் இடையில் வரவில்லையெனில் அவனோடு என் பயணம் தொடர்ந்திருக்கலாம், அவனுக்கும் எனக்கும் திருமணம் இந்நேரம் முடிந்திருக்கலாம் .

ஓஹ் அரை மணி நேரம் முடிந்தாகிவிட்டது, தூரத்தில் அவன் வருவது போல தெரிகிறது. பழையபடி அதே மாதிரியான டிரஸ் ஸ்டைல், ஹேர் ஸ்டைல்….துறுதுறுவென்றிருக்கும் நடை. இதோ என் அருகில் வந்துவிட்டான்.

அவனை காதலித்த புதிதில் நான் பரிசாக கொடுத்த அதே வாட்சை தான் தூசி தட்டி கட்டி கொண்டு வந்திருக்கிறான் ..

ஹை மீனு, எப்படி இருக்க??

ம்ம்ம், நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க??

இதென்ன வாங்க போங்கன்னு புதுசா பேசற, எப்பவும் போல டா போட்டே பேசு…

நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்…

உன்ன மட்டும் திருத்தவே முடியாது, பாத்தா தெரியல, நான் சூப்பரா இருக்கேன்….சரி எதாவது சாப்பிடலாமே, நீ என்ன ஆர்டர் பண்ணிருக்க??

நான் உங்களுக்காக தான் ஒருமணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ….

சாரி டியர், சரி இப்போ ஆர்டர் பண்ணலாம், ஹலோ பேரர், டூ ஆரஞ் ஜூஸ்..ஒன்னும் அவசரமில்லை, மெதுவாவே எடுத்துட்டு வாங்க….ம்ம்……இப்போ சொல்லு டியர்….

என்னை நீங்க தானே வர சொன்னிங்க, என்ன விஷயம்னு நீங்க தான் சொல்லணும்…

ஆமா, நான் தான் வர சொன்னேன் மீனு, உன்ன விட்டு நான் பிரிஞ்சி போயிருக்க கூடாது, நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லனு இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன்…..பழசையெல்லாம் மறந்திடலாம், புதுசா நாம வாழ ஆரம்பிக்கலாம், என்ன மன்னிச்சி ஏத்துக்குவியா மீனு…..

அவனின் கேள்விக்கு பதிலாய் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை,

அப்போதைக்கு மெலிதாக புன்னகைக்க மட்டும் தான் முடிந்தது….

ஆரஞ் ஜூஸ் வந்துடுச்சு, முதல ஜூஸ குடிக்கலாமே…

ம்ம்ம்…..குடிக்கலாம்….

ஜூஸை முழுதாக குடித்து முடித்துவிட்டு எனக்கும் அவனுக்கு சேர்த்து பில்லுக்கான பணத்தை வைத்துவிட்டு எழுந்தேன்…

சரி, நான் கிளம்பறேன்…….

மீனு நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே??

வீட்ல எனக்கு மாப்ள பார்த்து உறுதி பண்ணிட்டாங்க, இன்னும் பத்து நாள்ல இன்விடேஷன் அடிச்சிருவாங்க, உங்களுக்கும் குடுக்கணுமேன்னு நினைச்சிட்டு இருந்தேன், உங்க வீட்டுக்கே வந்து பத்திரிக்கை வைக்கணுமா, இல்ல வாட்சப்பில அனுப்பினா போதுமா…..

மீனு…..

ஏற்கனவே யூஸ் பண்ண நம்பர் தான இன்னமும் யூஸ் பண்றிங்க, இல்ல என்ன மாத்தின மாதிரி நம்பரையும் மாத்திட்டீங்களா??? கடைசி நேரத்துல ராங்க் நம்பருக்கு இன்விடேஷன் அனுப்பிட்டேன்னு வையுங்க அப்புறம் அது எனக்கும் அசிங்கம், உங்களுக்கும் அசிங்கம்ல அதான் கேட்டேன்..ஓகே நான் கிளம்பறேன், எனக்கு நேரம் ஆச்சு….என் உட்பிய பார்க்க வர்றதா சொல்லிருக்கேன், லேட் ஆச்சுன்னா அவரு கோவிச்சுப்பாரு, நான் கிளம்பறேன்….டேக் கேர்….

சொல்லிவிட்டு வேகநடைபோட்டு ஐஸ்க்ரீம் பாரிலிருந்து வெளிவந்தபின் ஒரு ஆட்டோவை பிடித்து போகும் இடத்தை சொல்லிவிட்டு உட்கார்ந்தபின் தான் மெதுமெதுவாக அடக்கி வைத்த கண்ணீர் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது….

ஏண்டீ, இத்தனை நாளா அவனுக்காக தானே வந்த வரன் எல்லாம் வேண்டாம்னு தள்ளிப்போட்ட…போன வாரத்துல கூட துக்கம் தாங்காம கைய அறுத்துகிட்டயே, எல்லாமே அவனுக்காக தானே , இன்னைக்கு அவனே உன்ன தேடி வந்திருக்கான்…நீ ஏன் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டதா பொய் சொல்லிட்டு அவனை வேண்டாம்னு சொல்லிட்டு வர….எதுக்காக இப்படி பண்ணின…..

என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டு உலுக்கியது…பதில் சொல்லி தானே ஆக வேண்டும்…….

அவன் என் மேல் உள்ள காதலால் திரும்பி வரல, அந்த காயத்ரி மேல உள்ள வெறுப்பால் திரும்பி வந்திருக்கான்….இதுக்கு பேரு காதல் இல்ல…..என்னைக்கு அவன் திரும்பி வந்து என்ன மன்னிச்சி ஏத்துக்கோனு என் முன்னாடி நின்னானோ அன்னைக்கே நான் ஜெயிச்சிட்டேன், இனி எனக்கு அவன் வேண்டாம், எனக்கு நான் அவன் மேல வச்சிருந்த உண்மையான காதல் மட்டும் போதும்…..

அப்போ நீ வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க போறயா??

அது தெரியல, ஆனா இந்த வாழ்க்கையில இனி அவனை நான் பார்க்க போறதில்லன்னு மட்டும் எனக்கு தெரியும்…

நீ இன்னொருமுறை யோசிச்சி பாரு….

வேண்டாம், இதுக்குமேல இதப்பத்தி பேச வேண்டாம்… என் இறுதி முடிவு இதுதான்…

நான் என் முடிவை கூறிமுடிக்கவும், என் வீடு வரவும் சரியாக இருந்தது….இனி அழவோ, கையை அறுத்துக்கொள்ள போவதோ நடக்காது என்ற தீர்மானத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன்……

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!