ரஷ்யாவின் வாசுகி

4.5
(2)

வாழ்க்கைத் துணைநலம் கோருவது பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும். பெரும்பான்மையான உயர்  ஆளுமையின் பலம் யாவும் வீட்டிலிருந்தே வளர்கிறது இன்னும் குறிப்பிட்டு கூறவேணுமாயின் மனைவியர்கள் கணவன்மார்களின்  வெற்றிக்கு உறுதுணையாக திகழ்கிறார்கள். அப்படியாக, லியோ டால்ஸ்டாய் தன் வாழ் வழியெங்கும் பூக்கள் விரித்து முற்களைச் சுமந்தவர் தான் சோபியா ஆன்ரேவேய்னா டால்ஸ்டாய்.

அன்னா கரீனினா நாவலில் ஓர் அழுத்தமான வரிகளுண்டு,  “எல்லா மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒன்று போலவே இருக்கிறது,  மகிழ்ச்சியற்ற குடும்பத்திற்கு ஒவ்வொருவிதமான காரணிகள்  உண்டு”, இதில் சோபியாவின் திருமண வாழ்வு இரண்டாவது கட்டத்தில் அடங்கும். 1862 ஆம் ஆண்டு டால்ஸ்டாய் க்கும் சோபியாவிற்கும் திருமணம் நடந்தேறியது ; அப்பொழுது சோபியாவிற்கு 18 வயது,  டால்ஸ்டாய் 16 வயது மூத்தவர். திருமணத்திற்கு முன்னர் டால்ஸ்டாய் தன்னைப் பற்றிய நல்லதும் கெட்டதும் அடங்கிய நாட் குறிப்பேடுகளை சோபியாவிடம் கொடுத்தார். அதை வாசித்து புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தார். டால்ஸ்டாய் தம்பதியினர் பெரும்பாலும் உரையாடியது நாட்குறிப்பின் வழியே. இவர்களது வாழ்வில் 13 குழந்தைகளை ஈன்றனர்,இதில் 8 குழந்தைகள் பிழைத்து நோயின் பிடியிலிருந்து தப்பித்தன . 13 முறை மறுபிறவி எடுத்தவர் திருமண வாழ்வில் அவ்வப்போது செத்து பிழைத்திருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகே மகத்தான மூன்று நாவலைகளை  (1.போரும் அமைதியும் -1869 , 2.அன்னா கரினீனா –  1877  3.புத்துயிர்ப்பு – 1899) எழுதினார் டால்ஸ்டாய்,  “போரும் அமைதியும்” மற்றும் “அன்னா கரினீனா” நாவல் உருவாவதற்கு சோபியாவின் பங்கு அளப்பரியது. இன்னும் குறிப்பாக சொல்லுவோமேயானால் டால்ஸ்டாயின் கையெழுத்து தெளிவாக இருக்காது, அவரது எழுத்துக்களில் மிகுந்த இலக்கண பிழைகள் அடங்கியிருக்கும், பிழைகள் அனைத்தையும் நீக்கி சோபியாவே கைப்பட தெளிவாக எழுதுவார். இறுதியாக அச்சிற்கு அனுப்பிவிடுவார். அச்சிற்கு ஏறி வெளிவந்தப் பின்னரும் மாற்றங்களை உரைத்துக்கொண்டே இருப்பார் டால்ஸ்டாய் , சில நேரங்களில் மாற்று சொற்களையும் தேடித் தேடி மாற்ற முற்படுவார். இவற்றைத்  தொகுப்பதென்பது எளிமையான காரியம் அல்ல, சோபியா டால்ஸ்டாயின் எழுத்துக்களைச் செப்பனிடுதலில் வல்லவர். டால்ஸ்டாயின் வெற்றியில் பாதி அவரது மனைவிக்கும் சேர வேண்டியவொன்று.”போரும் அமைதியும்” என்ற நாவலை மட்டுமே 7 முறை திருத்தி எழுதி பிரதி எடுத்திருக்கிறார் சோபியா. டால்ஸ்டாய் சோபியாவின் அறிவையும் திறமையையும் பாராட்டி மெச்சியதுண்டு ஆனால் அது பலருக்கும் அறியப்படாமலே போயிற்று.

அர்ப்பணிப்பும் அன்பும் நிறைந்த சோபியாவிற்கு கலை மற்றும் புகைப்படங்கள் மீது தீரா காதல் இருந்தது ஆனால் அதில் பெரிதும் ஈடுபாடு செலுத்த முடியாமல் போனதற்கு காரணம் டால்ஸ்டாயின் எழுத்து சீரமைப்பு , பதிப்பு ரீதியான வேலைகளுமே. சோபியாவிடம் 16 வயது முதல் அவர் இறக்கும் வரை நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது, இன்றைய நாளில் தாமி (SELFIE) போல , டால்ஸ்டாய் இறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் சுய உருவப்படங்கள் (SELF PORTRAIT) எடுக்க ஆரம்பித்தார். அவரின் நாட்குறிப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது “Song without words :The photographs and Diaries of Countless Sophia Tolstoy”. சோபியாவின் படங்களைப் பார்க்கையில் அவரின் தனிமையின் நிழலில் வெப்பத்தோடு நிற்பது புலப்படுகிறது. டால்ஸ்டாயின் 48 ஆண்டு கால இல்வாழக்கையில் அன்பும் வெறுப்பும் அடர்ந்து இருப்பதை சோபியாவின் நாட்குறிப்பிலும்  புகைப்படங்களிலும்  உணரலாம்.

வீடுகளில் சுடர்மிகு அணையா விளக்காய் ஆண்கள் இருந்தாலும் பெண்களுக்கு போதிய வெளிச்சம் படர்வதில்லை , இது எல்லா காலக்கட்டத்திலும் அவ்வண்ணமே இயங்குகிறது. டால்ஸ்டாய் தர்ம மனப்பான்மை அதிகம் பெற்றவர், ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் அடக்குமுறையால் டுக்கோபோர்ஸ்() என்ற இனத்தை காப்பாற்றியதற்காக எழுதப்பட்ட நாவல் “புத்துயிர்ப்பு”. அந்நாவல் எழுதும் முன்பே அவர் பதிப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்று டுகோபோர்ஸ் இனத்தை காப்பாற்றினார், 3000 லிருந்து 4000 மக்களை தனது மகன் செர்கெய் டால்ஸ்டாய் மூலமாக கப்பல் ஏற்றி கனடா அனுப்பினார், இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தவர் சோபியா.

பல குடும்பங்களில் பெண்ணின் தியாகமென்பது எட்டா வண்ணாமகவே உருபெறுகிறது. டால்ஸ்டாயின் இறுதி நாட்களில் அன்பாக ஒரு வார்த்தை கூட தன் மனைவியிடம் பேசியதில்லை, மிகுந்த துன்பத்திற்கு உட்பட்டவளாய் இருக்க நேரிட்டது.இவற்றை அனைத்தும் புறந்தள்ளி மிகவும் நேர்த்தியாக டால்ஸ்டாயைப்  பார்த்துக்கொண்டார்.1910 ஆம் ஆண்டு ஒரு வெண்பனி இரவில் யாருக்கும் சொல்லாமல் தனது 82 வயதில் வெளியே சென்றார் டால்ஸ்டாய், ரயில் நிலையத்தில் கவலைக்கிடமாக இருந்தவரை வீட்டிற்கு கொண்டு வந்த பின்னர் உயிர் பிரிந்தது. அவரின் பெயரில் அளப்பரியா அன்பும் மாண்பும் கொண்ட சோபியா அவரை ஒரு போதும் அவதிக்குள்ளாக்கியதில்லை. 8 குழந்தைகளையும் வளர்த்து , டால்ஸ்டாயின் இலக்கிய துணையாக விளங்கி தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் ஒதுக்கி வாழ்ந்த சோபியா , உண்மையில் வாசுகியின் மறு வடிவம்.

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

1 comment

  1. vorbelutrioperbir - Reply

    I got what you intend, regards for posting.Woh I am lucky to find this website through google. “Being intelligent is not a felony, but most societies evaluate it as at least a misdemeanor.” by Lazarus Long.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!