பிரம்மதேவரின் மூக்குத்தி

0
(0)

இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகை,  திருடு போவதற்கு முன் அந்த அழைப்பு அதிகாலை வந்த போது, அதற்கு காரணகர்த்தாக்களான ஆண்டன் டேவி மற்றும் ப்ரஸன்னா ஆகிய இருவருமே தூங்கிக்கொண்டிருந்தனர்;  

 

=====================================

 

லூஸி, ஹாரியிடம் இந்தியாவில் குறிப்பிட்ட அந்தக் கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகைத் திருட்டுக்கு ஆயத்தங்கள் மும்முரம் என்று தகவல் சொல்லி, ஹாரியை மகிழ்ச்சியுறச் செய்தாள். 

 

=================================

 

பழைய காலக் கோயில்களை ஒரு  தேர்ந்த ஆர்க்கிடெக்ட் பார்வையிலிருந்து பார்ப்பதற்கு ஆசைப்படும் ஒரு பெண்மணி, லூஸி, தன்னோடு வருவதாகவும், அந்தப் பெண்மணிக்கு          ஸ்ரீ சக்ரநாராயணன் கோயிலைச் சுற்றிக் காட்ட வேண்டும் என்று பேசித்தானே ஐம்பதாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி, அதில் இருபதாயிரம் அட்வான்ஸும்  பிரஸன்னாவுக்கு அனுப்பிவிட்டான் ஹாரி.

 

சொன்னது போலவே ஞாயிறு காலை ஹாரி அவனை அழைத்தபோது, சட்டென்று போட்டு உடைத்துவிட்டான், “கோயில் தண்ணீர் எடுத்துக்கொடுக்க எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. ஆனால்,  நிர்வாகி பெரியவர் சற்றுத் தீவிரமாக வேற்று மதத்தினர் கோயிலுக்குள் வரக்கூடாது என்கிறார். என்ன செய்வது? நீ சொன்னது போல அந்த லூஸி, கோயிலின் உள்ளே வந்து உலவ முடியாது. மன்னித்துக் கொள்”” என்று சொல்லி மூச்சு வாங்கினான்.

அதிசயமாக, ஹாரி அதைப் பெரிதுபடுத்தவில்லை. “பரவாயில்லை, ப்ரஸ், எனக்கு ஒரே ஒரு உதவி. நல்ல வெளிச்சத்தில் கோயிலின் உட்புறங்களை, ஸ்வாமி சந்நிதி  உட்பட எல்லாவற்றையும் உன் மொபைலில் தெளிவாகப் படம் எடுத்து அனுப்பு. உனக்கு, எக்ஸ்ட்ராவாக ஒரு இருபத்தையாயிரம் அனுப்புகிறேன்” என்று சொன்ன சில நிமிடங்களில் பணம் அனுப்பிவிட்டதாகவும் உறுதி செய்தான். 

மறுபடியும் ராவிடம் இதுபற்றி சொன்னபோது,அவர் சிரித்தார், “உன்னை எனக்கு நன்றாகத் தெரியும் பிரஸன்னா. உன்னுடைய அமெரிக்க நண்பன் ஏதாவது பண உதவி செய்தால் வாங்கிக்கொள், மறுக்காதே.  சனிக்கிழமை உச்சிகாலப் பூஜை முடிந்தபின் படம் எடுத்துக்கொள். அர்ச்சகர் சௌரியிடம் சொல்லி, பெரியவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்” என்றார் கனிவுடன்.   

 

=================================

 

மாயவரத்தில் கெஸ்ட்ஹௌஸின் அறைக்குள் நுழைந்த லூஸியைப் பார்த்து சிரித்த ஹாரி,  “எல்லாமே நம் திட்டப்படி போகிறது லூஸி. கோமல் இங்கிருந்து வெகு அருகில் இருக்கிறது. நாளை மதியம் பூஜைக்குப் பிறகு கோயிலைப் பூட்டிவிட்டால், பிறகு மாலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள்.  நாம் இரண்டிலிருந்து – இரண்டரைக்குள் கோயிலுக்குள் சென்று, பிரம்மதேவனின் பிரஸித்தி பெற்ற அந்த மூக்குத்தியை எடுத்து விடலாம். அந்த மூக்குத்தியின் தங்கமோ, அதிலிருக்கும் வைரமோ இன்றைய சந்தையில் அவ்வளவு விலைக்குத் தேறாது. ஆனால், அதன் புராதன மதிப்பு? 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புகழ்பெற்ற நகை லூஸி, நமக்கென்ன? சர்ச்சாக இருந்தாலும், இது போன்ற கோயிலாக இருந்தாலும் ஒரே வேலைதான். வாங்கிகொள்ளப்போகும் ஜேக்கப் ஒரு பில்லினர்…..அவருக்கு இதெல்லாம் சில்லரைச் செலவு”. என்றான் ஹாரி புன்னகையுடன்.

=================================

வீட்டில் சாப்பிட அமர்ந்த பிரஸன்னாவின் மனதில் ராவுடன்  உரையாடியது ஒலித்தது:

 

“ஒரு அரக்கனிடம் தான் இழந்த நான்கு வேதங்களை மீண்டும் பெற வேண்டி பிரம்மன் தன் மனைவிகளான சரஸ்வதி தேவி, காயத்ரி தேவி ஆகியோரோடு யாகம் செய்கிறார். ஹோமத்தில் அக்னி சரியாக வளர்ந்து எரியவில்லை.

 

ஏதோ தெய்வக் குற்றம் ஆகி இருக்கிறது என்று பிரம்மன் எண்ணும் போது.  சரஸ்வதி தேவி அதைக் கவனித்துவிட்டு,  ப்ரம்மனுக்கு மூன்று தலைகள்தான் இருக்கின்றன. ஆனால் காயத்ரி தேவிக்கு ஐந்து தலைகள் இருப்பதால்தான் குற்றம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.

 

இதைக் கவனிக்கும் காயத்ரிதேவி தன்னுடைய ஐந்தாவது தலையை ஆன்மீக சக்தியால்  பிரம்மனின் பின்புறத் தலையோடு ஐக்கியம் செய்கிறார். பெண் முகமும் ஆண் முகமும்  எண்ணிக்கையில் சமமாக ஒன்றானது.  ஆனால் காயத்ரிதேவி மூக்குத்தி மட்டும் அதே ஜொலிப்போடு பிரம்மதேவர் முகத்தில் இருந்தது. இன்றளவும் இருக்கிறது.

 

பிரம்மன்  விக்ரஹத்தின்  பின்பக்கச்  சுவரின் மேல் ஒரு நிலைக் கண்ணாடி வைத்து அதற்குத் திரை போட்டு . சில விசேஷ நாட்களில் மட்டும் திறப்பார்கள்.  அப்போது பிரம்மனின் நான்காவது முகத்திலுள்ள அந்த விசேஷ மூக்குத்தியைத் தரிசிக்கலாம்.  பொதுவாக, சக்ரத்தாழ்வார் சந்நிதியில் சக்ரத்தாழ்வாரின் பின்னால் உள்ள நரசிம்ஹரைக் கண்ணாடி வழியாக தரிசனம் செய்வோமே அதுபோல” . 

 

“அது சரி, இவ்ளோ வருஷமா கோயிலுக்கு வர்ற, தினமும் தரிசனம் பண்ற,  நம்ம கோயில் பிரம்மதேவரோட மூக்குத்திப் பத்தி தெரியாதா?” என்று கேட்டார் ராவ்.

 

“இல்ல ராவ்ஜி, நம்ம அர்ச்சகர் சுந்தர் சொல்லியிருக்கார். கூட்டத்தோடு கேக்கும்போது அவ்வளவா கவனிச்சதில்ல, அதுதான்…….” பிரஸன்னா முடிக்கும் முன் இடைமறித்தார் ராவ், “சரி, சரி, ஆனா, இதெல்லாம் நமக்கு ரொம்பப் பெருமை தர்ற விஷயங்கள், தெரிஞ்சிக்கணும்” என்று சொல்லி சிரித்தார்.

 

அன்று காலை காரில் வரும்போது ஹாரி தாராளமாக முப்பதாயிரம் ரூபாயை இரண்டாயிரம் நோட்டுகளாகக் கொடுத்து, “மாட்டேன் என்று மட்டும் சொல்லாதே ப்ரஸ். இந்த லூஸி என் தலையைத் தின்கிறாள். ஏதோ மூக்குத்தியாம். ப்ரம்மாவாம். பார்த்தே ஆக வேண்டும் என்கிறாள். நாளைக் காலையில் சுத்தமாகக் குளித்துவிட்டு என்.வி எதுவும் சாப்பிடாமல்,  காலில் சாக்ஸ் கூட இல்லாமல் செருப்புடன் கோயிலுக்கு வருகிறோம். நாமிருவரும் அந்தக் கிணற்றுத் தண்ணீரைப் பார்க்கும்போது, அவள் அந்த மூக்குத்தியைப் பார்க்கட்டும். ஏதோ திரையிட்டு மூடியிருக்குமாமே, அதை எடுத்து விட்டு அவள் இரண்டே நிமிடம் பார்க்கட்டும். அப்புறம் போய்விடலாம்” என்றான் மிக மிருதுவான குரலில்.. 

=================================

மறுநாள் காலையில் ராவ் அவனிடம், “தோ பாரு பிரஸன்னா, உன்னை நம்பி சாவியைக் கொடுத்துட்டுப் போறேன். அந்தத் தண்ணியை மட்டும் எடுத்து உன் அமெரிக்க நண்பனிடம் கொடுத்து விடு. பெரியவர் கிட்ட மட்டுமில்ல, யார்கிட்டயும் நான் சொல்லப்போறதில்ல, ஜாக்கிரதை. பெரியவருக்குத் தெரிந்தால் என் தோலை உரித்துவிடுவார்” என்றார் சீரியஸான குரலில்.

 

“ராவ்ஜி, உங்களுக்கு எந்தவித பயமும் வேண்டாம். நான் நல்லபடியா  பாத்துக்கறேன்” என்றவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்துவிட்டுச் சென்றார் பத்மநாப ராவ். 

=================================

மதியம் இரண்டு மணிக்கு கோயிலின் வலதுபுறம் இருக்கும்  கதவைத் திறந்து உள்ளே ஹாரி மற்றும் லூஸியை அனுமதித்தான் பிரஸன்னா.

 

பிரம்மதேவரின் சந்நிதி அருகே லூஸியை விட்டுவிட்டு, “லூஸி, மொத்தம் பத்து நிமிடத்திற்கு மேல் கிடையாது. நானும், நண்பன் பிரஸ்ஸும் தண்ணீர் கேனை எடுத்துவருவதற்குள் உன் தரிசனத்தை முடித்துவிடு” ஹாரி இதைச் சொல்லிவிட்டு லூஸியைப் பார்த்து கண் சிமிட்டியதை பிரஸன்னா கவனிக்கவில்லை.

 

=================================

 

மாலை திருச்சி விமான நிலையம் வந்து சென்னை செல்லும் விமானம் ஏறும்போதுகூட ஹாரிக்கு படபடப்பு அடங்கவில்லை. சென்னையிலிருந்து அன்றிரவே நியூ யார்க் பயணம்.

காரில் வரும்போது லூஸி ஒரு கணம் அவள் பர்ஸைத் திறந்து மூக்குத்தியைக் காட்டி,  மூடும்போது அதன் அபார ஜ்வலிப்பு ஹாரியின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்தது.

 

=================================

நியூ யார்க் ஜே.ஃஎப்.கே விமான நிலையத்தில் இறங்கும்போது ஹாரி  மெதுவான குரலில் சொன்னான், “லூஸி, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஜேக்கப் பணத்தை மொத்தமாகக் கொடுத்தவுடன் உனக்குச் சொல்லுகிறேன். நீ, என்ன, இங்கே க்வீன்ஸில் தானே இருக்கிறாய். நாம் சந்திப்போம், பிறகு நான் நியூஜெர்ஸி செல்கிறேன்”என்றான்.   

 

=================================

ஹாரி மற்றும் லூஸி இருவரும் திருச்சிக்கு காரிலேறியவுடன், பிரம்மதேவர் சந்நிதியைப் பூட்டப்போன பிரஸன்னா திடுக்கிட்டான். திரை விலகி இருக்க, பிரம்மரின் மூக்குத்திப் பளபளப்பைக் காணவில்லை. ஐயோ, பாவி ஒரு லட்சம் ரூபாய் ஆசைக்காட்டி இப்படிச் செய்துவிட்டானே? இப்போது என்ன செய்வது?

 

ஹாரியின் அலைபேசி எண்னை பலமுறை முயன்றும் “நாட்  ரீச்சபிள்” என்ற செய்தி வந்த போது பிரஸன்னாவுக்கு. ஆச்சரியமாக இல்லை.

 

பரபரப்பாகக் கதவுகளை மூடிக்கொண்டு வெளியே வந்தவன் மாயவரம் கடைதெருவில் சிவசாமி காட்டிய மூக்குத்தி சிறிதாக, நல்ல பளபளப்பில், கிட்டத்தட்ட பிரம்மதேவர் மூக்குத்தி போலவே இருந்ததாகப் பட்டது பிரஸன்னாவுக்கு.

 

அவர் சொன்ன 400 ரூபாயை மறுபேச்சு பேசாமல் கொடுத்து வாங்கிக்கொண்டு, வலதுபுற வழியாக வந்து, பிரம்மதேவரின் சந்நிதிக்குள் சென்று அவர் மூக்கில் மாட்டிவிட்டு, கண்ணாடி வழியே பார்த்தபோது பெரிய வித்தியாசம் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.

 

ராவுக்கு ஃபோன் செய்தபோது, “பிரஸன்னா,  நாளைக்குக் காலைல கோயிலுக்குக் கொஞ்சம் சீக்கிரம் வா, உன்கிட்ட பேசணும், ரொம்ப முக்யம்” என்றார். 

 

=================================

“இப்படி சிவப்பாக வீங்கியிருக்கிறது? எங்கே சென்றாய் லூஸி?” டாக்டர்  ரோஜர் கேட்டபோது சட்ரென்று நினைவுக்கு வந்தது. கோயிலுக்குள் இருக்குபோது காலில் சுருக்கென்று எதுவோ கடித்ததை உணர்ந்து காலை உதறினாள். இருளில் ஒரு பெரிய சைஸ் எலி ஓடியதைக் கவனிக்க முடிந்தது.

 

இப்போது நான்கு நாட்கள் கழித்து தாங்க முடியாத ஒரு வலி. கடித்த இடம் சிவப்பாக கன்னிப்போய் வலித்தது. 

 

விவரம் சொன்னாள். 

 

ரோஜர் சிரித்தார். “ஒரு டெட்டனஸ் ஷாட் கொடுக்கிறேன். உள்ளே சாப்பிட ஆன்டி-பயாட்டிக்ஸ் எழுதித் தருகிறேன். எலி வந்து கடிக்கும் வரை என்ன செய்தாய்? ஏன் காலில் ஷூ இல்லை?”

 

பதில் சொல்ல முடியாமல் சிரித்து மழுப்பிய லூஸி, வெளியே வந்து காரில் ஏறும்போது டாக்டர் ரோஜர் சொன்னது மனதில் கனமாக ஓடியது. 

 

“உனக்குத் தெரியுமா? லெப்டோஸ்பைரோஸிஸ் (Leptospirosis)  வரலாம். இதன் அறிகுறிகள் உன்னிடம் இருக்கின்றன. காய்ச்சல், சிவப்பாக வீக்கம், வாந்தி, வயிற்றில் வலி….. இந்த லெப்டோஸ்பைரோஸிஸ் கிட்டத்தட்ட 10%  அளவுக்குத்தான் ஃபேட்டல், ஆனால், கேன்ஸர், ஹெச்ஐவி போன்றவை இருப்போருக்கு ஆபத்தின் அளவு மிக அதிகம், நீ சமீபத்தில் கேன்ஸர் வந்து ஓரளவு மீண்டு வருகிறாய், ஜாக்கிரதை, மருந்தை உட்கொள். ஒரு வாரம் கழித்துப் பார்க்கலாம்.

=================================

காரில் சென்று கொண்டிருந்த ஹாரிக்கு ஒரு நிமிடம் அலைபேசியில் கோபமாக ஜேக்கப் கத்தியதற்கு காரணம் புரிந்து  கொள்ள முடியவில்லை. ,

 

“என்னையே ஏமாற்றுகிறாயா?முழுவதும் உன்னை நம்பினேன், நீ கேட்ட அட்வான்ஸ் கொடுத்துள்ளேன், உன்னைச் சும்மா விடப்போவதில்லை. டூப்ளிகேட் மூக்குத்தியைக் கொடுத்து ஏமாற்றுகிறாயா?” தொடர்ந்து ஜேக்கப் அலறியதைக் கேட்க முடியாமல் அலைபேசியைத் துண்டித்து…………”டூப்ளிகேட்டா?”,

 

மகாவேகத்தில் லைன் மாறிய அந்த ராட்சத லாரியைச் சற்று தாமதமாக ஹாரி கவனித்து, மூளைக்குச் செய்தி பதிவாகி, கால்கள் பிரேக்கை மிதிக்க, ஹைட்ராலிக்  கோபம் டயர்களுக்குப் பாய்ந்து பிடிக்க, டயர்கள் தேய……… லேட்…… 

 

 

ஹாரியின்  கார், கிட்டத்தட்ட 90 மைல் (அமெரிக்காவில் இன்னும் மைல்தான்)  வேகத்தில் வந்த அந்த ராட்சத லாரியின் மோதலில் அப்பளமாகி, கார் ஹார்ன் தொடர்ந்து அடிக்க, எங்கும் ரத்த வெள்ளம்.

 

=================================

 

ஒரு கணம் ராவ் சொன்னதைப் பிரஸன்னாவால் நம்ப முடியவில்லை, “ராவ்ஜி, நான் வந்து…” என்று தடுமாறினான்.

 

“தெரியும்டா,  பத்து நாளைக்கு முன்னால காயத்ரியை மார்க்கட்ல பாத்தபோது சொன்னா, உன்கிட்ட பணம் நிறைய புழங்கறதுன்னு….அப்புறம், அந்த அமெரிக்க சகவாசம், அப்புறம் திடீர்னு சாவி வேணும்னுட்டு நீ கேட்டது….சாதாரணமா இருந்தா கோயில்ல எல்லாரும் இருக்கறச்சயே அந்த தண்ணீர் கேனை எடுத்து அவனுக்குக் கொடுக்கலாமே? அது ஏன் கோயில் நடை சாத்தியிருக்கிற நேரத்துல.? உன்கிட்ட சாவிய கொடுக்கிறது முத நா ராத்திரியே, ஒண்ணு, ரெண்டு டெம்பிள் ஜுவல்லரிய மட்டும் ஸ்வாமி மேல விட்டுட்டு…..ஸ்வாமி / தாயாரோட எல்லா நகைகளையும், முக்கியமா அந்த ஃபேமஸ் மூக்குத்தி உட்பட,  ஒரிஜினல் எல்லாம் எடுத்துப் பத்திரமா கஜானால வச்சுட்டுப் போய்ட்டேன்.

 

அர்ச்சகர் சௌரி கேட்டபோதுகூட ஆடிட்டர் வரப்போறார்னு  கதை விட்டேன்.

 

நீ கேக்கலாம்,  சந்தேகம் வந்தா சாவியை எதுக்கு உன்கிட்ட குடுத்து ரிஸ்க் எடுக்கணும்னுட்டு நீ என் பையன் மாதிரி. இதுனால, அந்த அமெரிக்க ஆசாமி மூலம் கொஞ்சம் காசு வந்தா உன் தங்கை கல்யாணத்துக்கு உபயோகமா இருக்குமே, அதுதான் காரணம்….

மாயவரம் பஜார்ல நம்ம சிவசாமி கடைல கிட்டத்தட்ட அதே மாதிரி மூக்குத்தி விக்கிறான்,  அதுல ஒண்ணு வாங்கி ஸ்வாமி மூக்குல மாட்டிட்டு…….நல்ல வேளை. வில்லங்கமா ஒண்ணும் நடக்கலை”

 

பிரஸன்னா எதுவும் பேசாமல் எதிரே சந்நிதியில் கம்பீரமாக நின்றிருந்த ஸ்ரீ சக்ர நாராயணனைப் பார்க்க,  அவர் மௌனமாகப் புன்னகைத்துக்கொண்டிருந்தார். 

 

===================================================

 

முக்கிய பி.கு:

 

 

கும்பகோணத்தில் ஸ்ரீ வேதநாராயணன் கோயிலுள்ள பிரம்மதேவர் மூக்குத்தி மிகப் பிரசித்தி பெற்றது.

 

 

அதன் அடிப்படையில் எழுதிய ஸ்ரீ சக்ர நாராயணன் கோயில் என் கற்பனை என்றாலும்,  கோயில் பற்றிய விவரங்கள்            ஸ்ரீ வேதநாராயணன் கோயிலைச் சேர்ந்தவை. 

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!