தேடிசென்ற இரவில்!

5
(1)

தேடிச்சென்ற இரவு…..

“விஜி இப்போ கூட ஒன்னும் கெட்டுபோகல, பேசமா திரும்ப போய்டலாம்டி, இந்த ஆபத்தான வேலைலாம் வேண்டாம்….எனக்கு என்னவோ பயமா இருக்கு, நான் சொல்றத கொஞ்சம் கேளுடி”

“சும்மா இருடி, எப்போ பாரு பயமா இருக்குனு புலம்பிக்கிட்டு…இன்னைக்கு அவனா நாமளானு பாத்துருவோம்…எவ்ளோ தைரியம் இருந்தா உன்கிட்டயே வம்பு பண்ணுவான்..இன்னைக்கு அவனை சும்மா விட போறதில்லை…நீ எதுவும் பண்ணவேண்டாம், பேசாம என்கூட இரு, எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்”

“பாத்துக்கறேன், பாத்துக்கறேன்னு சொல்லி எந்த  பிரச்சனைல  என்னை  கோர்த்துவிட போறான்னு தெரியலையே, கடவுளே முதல்ல இவக்கிட்ட இருந்து என்னை காப்பாத்து”

“கடவுளே இவ சொல்றதெல்லாம் கேட்காதீங்க, இவ எப்பவும் இப்படி தான், பயந்தாகொளி…நீங்க உங்க வேலைய பாருங்க, இவளை நான் பார்த்துக்கறேன்”

“அந்த கடவுள்கிட்ட கூட என்ன பேச விடமாட்டியா, சிவனேனு தூங்கிட்டு இருந்தவளை இந்த அர்த்த ராத்திரியிலே கூட்டிட்டு வந்து ஏண்டி கொடுமை படுத்தற, ப்ளீஸ் டி திரும்பி போயிறலாம்டி, என் செல்லம்ல…வாடி போயிரலாம்…”

“இதுக்குமேல நீ எதாவது பேசின அவ்ளோதான், உன்னையும் சேர்த்து வச்சி செய்வேன் பரவாலயா”

“நீ செஞ்சாலும் செய்வடி, நான் வாயே தொறக்கல, நீ என்ன செய்யணுமோ செஞ்சுட்டு சீக்கிரம் கிளம்பற வழிய பாரு”

“ம்ம்ம்….அது……பாலோ மீ”

விஜியை பாலோ செய்துபார்த்ததில் அவள் ஒரு டம்மி பீஸ் என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது….விஜியும், பவியும் ஒரே கல்லூரியில் படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள்…ஒரே ரூமை வாடகைக்கு எடுத்து ஒன்றாக தங்கி இருந்து ஒட்டிப்பிறவாத அக்கா தங்கை போல  வாழ்பவர்கள் …

விஜிக்கு பவி என்றால் உயிர், அதே போல பவிக்கு பயம் என்றால் உயிர்…எல்லாத்துக்கும் பயப்படுவாள்…யாராவது அதிர்ந்து கூப்பிட்டால் கூட பயந்துவிடும் சுபாவம்…ஆனால் விஜியோ பவிக்கும் சேர்த்து தைரியத்தை வளர்த்துக்கொண்டவள்….ரொம்ப நாளாக பவியை ஒருவன் காதலிப்பதாய் சுற்றிக்கொண்டிருக்க விஜி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை….நேற்று விஜி முன்னதாகவே ஆஃபீஸ்க்கு செல்ல தனியாக சென்ற பவியிடம் தகராறு செய்து காதலை ஏற்றுக்கொள்ள மிரட்டிய அவனை ஒரு கை பார்ப்பதற்காக பவியையும் சேர்த்து  இழுத்து வந்திருக்கிறாள் விஜி….

“விஜி, மறுபடியும் சொல்றேண்டி, அவன் பண்ணதெல்லாம் சீரியசா எடுத்துக்க வேண்டாம், திரும்பி போய்டலாம்டி, எனக்கென்னவோ பயமா இருக்கு”

“இத நீ நேத்தே சொல்லியிருக்கணும், நேத்து முழுக்க அழுதுட்டு இப்போ சொன்னா நான் கேட்ருவேனா…உன்ன அழவச்சதுக்கு அவனுக்கு பதிலடி கொடுக்காம விடமாட்டேன்”

“பதிலடி தானே, நல்லா குடு, ஆனா இந்த அர்த்தராத்திரியில என்ன பண்ண போற, வேற யாராவது நம்மள பார்த்தா தப்பாயிடும், ப்ளீஸ் டி நான் சொல்றத கேளு விஜி”

 

“எல்லாம் யோசிச்சி தாண்டி செய்றேன் …அவன் கொஞ்சம் ரௌடி மாதிரி தெரியறான், நாள் முழுக்க அவனோட அஞ்சாறு தடிமாடுங்க சுத்திட்டு இருக்குங்க, காலைல அவனை ஒன்னும் பண்ண முடியாது, இந்த நேரத்துல தான் அவனோட  யாரும் இருக்க மாட்டாங்க, பக்காவா பிளான் போட்டு வச்சிருக்கேன், இன்னைக்கு அவனை படுத்துற பாடுல அவன் இனி எந்த பொண்ணு பின்னாடியும் சுத்தாத அளவுக்கு அவனுக்கு டின் கட்டணும், அதுக்கு நீ என்ன மாதிரி கொஞ்சம் தைரியமா இருக்கணும்…இப்படி உள்ள போனதுக்கப்புறம் பயந்து உளறிடாத, வாய மூடிட்டு வரணும் சரியா….”

“அவன் நம்மளை பாத்துட்டா நாளைக்கு ரூம்க்கு வந்தே பிரச்சனை பண்ணுவானேடி”

“இதெல்லாம் யோசிக்காம இருப்பேனா, அதுக்கு தான் இந்த முகமூடி இதை போட்டுக்கோ..அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு”

வீராவேசமாக  அவன் வீடு வரை வந்தவர்கள் காம்பவுண்ட் சுவற்றின் மேல் கஷ்டப்பட்டு ஏறி குதித்து மெல்லமாக அவன் வீட்டின் பின் கதவின் வழி நுழைந்தனர்….

“சரியான தடிமாடுடி இவன், அறிவிருக்கா பாரு, யாராவது இப்படி பின் கதவை பப்பரப்பானு தொறந்து வைப்பாங்களா, இவனுக்குலாம் லவ் ஒண்ணுதான் குறைச்சல்….”

“ஒருவேளை அவன் முழிச்சிட்டு இருக்க போறாண்டி, எதுக்கும் நாம இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு வரலாமா”

“அடியே, அவன் என்ன நம்மளை விருந்துக்கா கூப்ட்ருக்கான், இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு வந்து சாப்டுக்கலாம்னு இருக்க, அவனுக்கு பதிலடி கொடுக்க வந்திருக்கோம், என்ன ஆனாலும் இன்னைக்கு அவனுக்கு மாவுக்கட்டு போடாம போறதில்லை…பேசாம  வா”

“மாவுக்கட்டுன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது, மாவை பிரிட்ஜ்ல எடுத்துவைக்க மறந்துட்டேன், நாளைக்கு தோசை ஊத்தினா நல்லா இருக்காது, நாம இப்போ போய்ட்டு அப்புறம் வரலாம்டி, சரியா, வா போகலாம்”

“போடீ பன்னி, உன்னை உருட்டு கட்டையாலயே அடிக்க போறேன், இதெல்லாம் ஒரு சாக்கா..கொலைவெறில இருக்கேன், ஒழுங்குமரியாதையா கூட வா, இல்லை யாரையாவது அடிச்சா போதும்னு உனக்கே டின் கட்டிடுவேன், இன்னொரு வார்த்தை பேசினா நான் மோகினி பிசாசா மாறிடுவேன், பீ கேர்புள்”

மெதுவாக அவன் வீட்டிற்குள் சென்றவள் அவன் பெட் ரூமை தேட ஆரம்பித்தாள், வீடு முழுக்க இருட்டாக இருக்க ஒரு ரூமில் மட்டும் லைட் எரிந்தது….

“அது தான் அவன் ரூம் போல, இப்போ பாரு அவனை என்ன பன்றேன்னு”

வேகமாக மாடிப்படியை கடந்தவள் சத்தம் இல்லாமல் அவன் ரூமை எட்டி பார்த்தவள் போன வேகத்தில் திரும்ப ஓடி வந்து மூர்ச்சையானாள்…..

“என்னடி ஆச்சி, விஜி எழுந்திரிடி, விஜி எழுந்திரு”

விஜி மயக்கத்தில் இருக்க பக்கத்தில் இருந்த தண்ணீர்பாட்டிலை திறந்து விஜியின் முகத்தில் தண்ணீரை தெளித்தாள் பவி…

“ஏய் என்னடி ஆச்சி, அப்போவே நான் சொன்னேனே இதெல்லாம் வேண்டாம்னு,  பந்தாவா வந்துட்டு மயக்கம் போட்டு விழுந்துட்டியே…அப்படி என்னடி உள்ள இருக்கு, எத பாத்து மயக்கம் போட்டு விழுந்த…சொல்லுடி”

பேயறைந்ததை போல விஜி விழிக்கவும் பவிக்கு தலையே சுற்றியது, அப்படி என்ன நடந்திருக்கும்…ஒன்றும் புரியாமல் குழம்பி இருந்த பவி அந்த ரூமுக்குள் அப்படி என்ன இருக்கும் என்று பார்க்க முடிவு செய்தாள்…

 

“விஜி நீ இங்கயே இரு, நான் அந்த ரூம்க்கு போய் பார்க்கறேன், அப்படி என்ன தான் என் விஜி மயக்கம் போடற அளவுக்கு அந்த ரூம்ல இருக்குனு நான் பார்த்தே ஆகணும்…”

“பவி வேண்டாம்டி, நீ அந்த ரூம்க்கு போகாத, பவி போகாத பவி”

விஜி சொல்வதை கூட காதில் வாங்காமல் போன பவி அடுத்த ரெண்டு செகண்டில் கத்தி அலறியபடி ஓடி வந்தாள்….

“விஜி, உள்ள….விஜி….இங்கிருந்து முதல்ல போக்கலாம்டி”

ரெண்டுபேரும் பதறி அடித்துக்கொண்டு பின் கதவிற்கு ஓட பின்கதவோ மூடி இருந்தது…இருவரும் எப்படி எப்படியெல்லாமோ திறக்க முயற்சி செய்தும் திறக்க முடியாமல் சோர்ந்து விழுந்தனர்….

“விஜி, இந்த கதவு எப்படி லாக் ஆனது, திறந்து  தானே இருந்தது….நல்லா வந்து மாட்டிகிட்டோம்டி..பயமா இருக்குடி.”

“முதல்ல இங்கிருந்து எப்படியாவது தப்பிக்கிற வழிய பார்க்கணும், வேற எதாவது வழி இருக்கானு பார்க்கலாம்..வா”

அடுத்த அரைமணி நேரம் வேர்க்க விறுவிறுக்க வீடு முழுக்க அலசியும் வெளியில் செல்ல எந்த வழியும் இல்லாமல் போகவே அழுது அழுது இருவரும் களைத்து போய் கதவின் முன் சாய்ந்துகொண்டு கிடக்க மேலிருந்து அவன் மெதுமெதுவாக வரும் காலடி சத்தம் கேட்டது…

“விஜி எனக்கு பயமா இருக்குடி, அவன் கிட்ட வராண்டி, எப்படி தப்பிக்கிறது இப்போ, அவன் வராண்டி….” பயத்தில் விஜியின் மடியில் தலைவைத்து கண்மூடி கொண்டாள் பவி… விஜியும் பயத்தில் இறுக்கமாக கண்மூடி கொண்டாள்…சில வினாடிகள் எந்த சத்தமும் கேட்காமல் போகவே மெதுவாக கண்ணை திறந்து பார்த்த விஜி வீல் என்று அந்த வீடே அதிரும்படி கத்தினாள்….

விஜியின் அலறலில் அவள் மடியிலிருந்து பவி கண்திறந்து பார்த்தால் அவன் விஜியின் முகத்திற்கு அருகில் நெருக்கமாக குனிந்து கொண்டிருந்தான்…

விஜியின் முடியை கொத்தாக பிடித்து இழுத்து தூக்கி அடித்தான்….அவன் தூக்கி எறிந்ததில்  விஜி தூரத்தில் போய் விழுந்தாள்….அடுத்த சில செகண்டிற்கு அங்கு என்ன நடந்தது என அவளுக்கு புரியாத அளவு அவள் உடல் முழுதும் ரணமாக இருந்தது….

மெதுவாக கண்ணை திறந்து பார்த்தால் அங்கு அவனும் பவியும் இல்லாமல் போகவே மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக எழுந்து பவியை தேட ஆரம்பித்தாள்….

“பவி, பவி எங்க இருக்க நீ”

விஜியின் கத்தல் அந்த வீட்டில் எதிரொலித்து மீண்டும் விஜயின் காதிலே வந்து விழுந்தது…லைட் எறிந்த ரூமில் இருக்கலாம் என வேகமாக படியை கடந்து ஓடி வந்தால் அந்த ரூம் லாக் ஆகி இருந்தது…

“பவி உள்ள இருக்கியா …..பவி நான் பேசறது கேட்குதா, பதில் சொல்லுடி”

கதவை தட்டி தட்டி கத்தியதில் விஜியின் குரல் காய்ந்துபோனது….அவள் சோர்ந்து போகும் நேரத்தில் அந்த ரூமின் அருகில் ஒரு ஜன்னல் இருந்ததை பார்த்தவள் வேகமாக அதன் வழியே பார்த்தால் அங்கு பவி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தாள்….

அவ்வளவு தான் விஜியின் உயிரே அவளை விட்டு போனதை போல இருக்க எதோ வெறிபிடித்தவள் போல அந்த ரூமை உடைக்க ஆரம்பித்தாள்…கைக்கு கிடைத்ததையெல்லாம் எடுத்து ரூமை உடைத்துக்கொண்டிருந்தவள் கண்ணிலே கதவின் மேல் இருந்த கண்ணாடி ஜன்னல் தெரிய நாற்காலியின் மேல் ஏறிக்கொண்டு அந்த கண்ணாடியை உடைத்து அதன் வழியாய் உள்ளே குதித்தாள்…எப்படி ஏறி எப்படி குதித்தாள் என்பது விஜிக்கே புரியாத விஷயம்…

அத்தனை கஷ்டப்பட்டு உள்ளே குதித்தவள் பவியை நோக்கி ஓடினாள், ஆனால் பவியோ கீழே சாரின்மேலே நின்றுகொண்டு கயிற்றில் மாட்டப்பட்டிருப்பதை அப்பொழுதுதான் பார்த்தாள்….விஜிக்கு போன உயிர் திரும்ப வந்ததை போல இருந்தது…அவள் கையிலும், கழுத்திலும்  கட்டிய கயிற்றை அவிழ்த்து அவளை கீழே இறக்கிய பின் தான் அவனை தேடினாள்…அவனோ சாவுகாசமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்….

 

“டேய், அறிவிருக்காடா உனக்கு, நீ என்ன சைக்கோவா, எதுக்குடா எங்களை இப்படி டார்ச்சர் பண்ற, யாருடா நீ, தெரியாம உன் வீட்டுக்குள்ள வந்துட்டோம், எங்களை விட்ருடா,ப்ளீஸ் எங்களை போக விடு, நாங்க இனி இந்த தெருப்பக்கம் கூட எட்டி பார்க்க மாட்டோம், என்னையும் என் பிரெண்டையும் விட்று….ப்ளீஸ்” என்று விஜி கைகூப்பி கதறி அழ அவன் பயங்கரமாக குரூரமாக சிரிக்க ஆரம்பித்தான்….

 

“டேய் இப்போ எதுக்கு சிரிக்கற, நாங்க தான் தெரியாம வந்துட்டோம்னு சொல்றேன்ல…எங்களை போக விடுடா….”கொஞ்சம் கோவமாக சொன்ன விஜியின் கையை பிடித்து அவன் வைத்திருந்த கத்தியால் கீறினான்….

 

ஏற்கனவே அடிப்பட்ட உடம்பு, கையில் வேறு அறுபட்ட வழி தாங்கமுடியாமல் கத்தியவள் கையை பிடித்துக்கொண்டு தரையில் சுருண்டு விழுந்தாள்…

இப்படி வலியை குடுத்தவனை சும்மா விடக்கூடாதென்ற வெறியில் எழுந்தவள் தலையில் ஓங்கி ஒரு அடி விழ மீண்டும் மூர்ச்சை ஆனாள்….அவளுக்கு விழுந்த அதே அடி பவிக்கும் விழ அவளும் மயக்கம் அடைந்தாள்….இருவரும் கண்விழித்து பார்க்கும் பொழுது இருவரும் கைகால் கட்டப்பட்டு அதே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்….

“பவி, அழாத பவி, எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சி போய்டலாம், அழாதடி, எனக்கு என்ன ஆனாலும் உன்ன நான் எப்படியாவது தப்பிக்க விட்ருவேன், என்ன நம்புடி”

 

“விஜி நாம ஒண்ணா தான் வந்தோம், போனா ஒண்ணா போவோம், இல்ல ஒண்ணா சாவோம், கண்டிப்பா உன்ன விட்டுட்டு நான் தனியா போக மாட்டேன்”

 

பவியின் வார்த்தையில் நெகிழ்ந்து போன விஜி எப்படியாவது இந்த வார்த்தைக்காகவாது இருவரும் உயிரோடு இங்கிருந்து தப்பித்து வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தாள்…போராடி கைக்கட்டை அவிழ்த்தவள் தன்னை விடுவித்துக்கொண்டு பவியையும் அந்த கட்டிலிருந்து விடுவித்தாள்….

 

“பவி இப்போ தான் நாம தைரியமா இருக்கணும், அவன் வெளிய தான் இருப்பானு நினைக்கிறன் ..இந்த டோர் வேற க்ளோஸ் ஆகி இருக்கு, இங்க இருந்து வெளில போறது எப்படினு பார்க்கணும்…நீ அந்த பக்கம் தேடு, நான் இந்த பக்கம் தேடறேன், இந்த ரூம்ல நமக்கு ஹெல்ப்புல்லா  எதாவது கிடைக்கலாம்…சத்தம் போடாம கவனமா தேடு….”

 

இருவரும் தேடியதில் அங்கு ஒரு செல்போன் கிடைக்க சந்தோஷத்தில் அதை வைத்து கொண்டு தப்பிவிட கனவு கோட்டை கட்டினர்….

 

“இந்த போன் வச்சே அவன்கிட்ட இருந்து தப்பிச்சிரலாம், யாருக்காவது முதல்ல போன் பண்ணு, எப்படியாவது இங்க இருந்து வெளிய போயிரணும்…”

 

ஆர்வத்தில் போனை ரெண்டு பேரும் ஆன் செய்ய முயற்சி செய்ய போனோ சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது….மீண்டும் இருவரும் சார்ச்சை தேட ஆரம்பிக்க அதற்குள் அவன் வரும் சத்தம் கேட்டதும் பயந்து போய் முழித்தனர்…

 

“பவி அவன் வரதுக்குள்ள தேடி  ஆகணும், நம்பிக்கையை விட்றாத…பதறாம கவனமா தேடு”

அவன் வருவதற்குள் பவியின் கைகளுக்கு சார்ஜர் கிடைக்க இப்பொழுது ஸ்விட்ச்போர்டை தேட ஆரம்பித்தனர்…

 

எப்படியோ கதவின் இடுக்கில் இருந்த சுவிட்ச் போர்டை கண்டுபிடித்து போனை சார்ஜில் போட்டுவிட்டு மீண்டும் அதேபோல கைகால்களை கட்டியது போல் சேரில் அமர்ந்து கொண்டனர்…

 

“எதுவும் பேசாத, அமைதியா இரு, அவன் வாரான்” என்று விஜி பவியை எச்சரிக்கை செய்தாள்….

காலடி சத்தம் கேட்டு இருவரும் மூச்சு கூட விட மறந்துபோனவர்களாக பயத்தோடு பார்த்திருக்க கதவின் அருகில் யாரோ வந்ததற்கு அடையாளமாய் நிழல் தெரிந்து பின் மறைந்தது….

 

அவன் போய்விட்டான் என்பதை சில நிமிடங்கள் உறுதிசெய்துகொண்டு மீண்டும் கட்டை அவிழ்த்துக்கொண்டு போனை தேடி ஓட போனோ சார்ஜ் ஏறாமல் இருந்தது…. எவ்வளவு நேரம் முயற்சி செய்தும், போன் ஆன் ஆகவே இல்லை…

“பவி போன் ஆன் ஆகலடி,இப்போ என்ன பண்றது”

“போனுக்கு உயிர் இருந்தா தானே ஆன் ஆகும், அதோட உயிர் தான் இப்போ என்கிட்டே இருக்கே” என்று உரத்த குரல் கேட்க பயந்துபோனவர்கள் பேசியது யார் என தேட கதவை திறந்துகொண்டு அவன் உள்ளே வந்தான்…

“என்ன என்கிட்ட இருந்து தப்பிச்சி போகலாம்னு பார்த்திங்களா, அது நடக்காது” என்று கர்ஜித்தவன் பவியையும் விஜியையும் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றான்..

 

 

அவன் பிடியிலிருந்து இருவராலும் எளிதாக தப்பிக்க முடியாமல் போனதால் வலியில் இருவரும் அலறிக்கொண்டே இருக்க எதையும் பொருட்படுத்தாமல் படிக்கட்டிலிருந்து இருவரையும் தள்ளி விட்டான்…

 

படியில் உருண்டு விழுந்த இருவரும் தலையில் அடிபட்டு மயங்கிவிட அதற்குமேல் இருவராலும் எதையும் உணரமுடியாமல் போயிற்று…

ரொம்ப நேரம் கழித்து இருவரும் கண்விழிக்க பக்கத்து பக்கத்து பெட்டில் இருவரும் படுத்துக்கொண்டிருந்தனர்….

 

மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருப்பதை பார்த்து எப்படியோ அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்று புரிய ஆரம்பித்தது….

 

ஆனாலும் எப்படி தப்பித்து இங்கு வந்தோம் என்பது விளங்காமல் போகவே ஒருவருக்கொருவர் எப்படி இங்கு  வந்தோம் என கேள்வி கேட்டுக்கொன்டே போக “இருங்க, இதுக்கான பதிலை நான் சொல்றேன்” என்று உள்ளே வந்தான் அவன்….

 

ஆண் குரல் கேட்கவே ஒரு நிமிடம் அவன்தான் மீண்டும் வந்துவிட்டான் என பயந்துபோன இருவரும் அங்கு வந்து நின்றவனை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தனர்….

அவன் அருண்… பவியிடம் காதல் சொல்லி இம்சை செய்தவன், இவன் எப்படி இங்கே, இவனை ஒருவழி செய்ய போய் தானே நாம் ஒருவழியாகி  ஹாஸ்ப்பிட்டலில் இருக்கிறோம், இவன் எப்படி இங்கே வந்தான் என்று இவர்கள் யோசிக்க அவனே அதற்கான பதிலையும் சொன்னான்….

 

“முதல்ல சாரி பவி, என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமை…நிஜமாவே நான் உன்னை சின்சியரா தான் லவ் பண்றேன்,ஆனா நீ புரிஞ்சிக்கல அதான் நேத்து அப்படி நடந்துக்கிட்டேன், அதனால தான் உன் பிரெண்டும் நீயும் அங்க போய் மாட்டிகிட்டீங்கனு தெரிஞ்சது….பவி நீ இல்லாம என்னால வாழ முடியாது பவி ப்ளீஸ் புருஞ்சிக்கோ”

 

“நாங்க எப்படி இங்க வந்தோம், அத முதல்ல சொல்லு”

 

“காலைல நான் உன்கிட்ட அப்டி நடந்துக்கிட்டதால நீ ரொம்ப சோகமா இருக்கேனு உன் பிரெண்ட் ரேஷ்மி சொன்னா..அதனாலா தான் நான் உன்னை பார்க்க நைட் உன் ரூமுக்கு வந்தேன், ஆனா நீ அங்க இல்ல”

 

“நைட் நீ எங்க போயிருப்பேனு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் அங்க ஒரு நோட் எழுதியிருந்தது…. ‘என்னை லவ் டார்ச்சர் பண்ணினவனை தேடி இந்த அட்ரெஸ்க்கு போறோம், நாங்க வர லேட் ஆச்சுன்னா எங்களை தேடி வானு’ அந்த லெட்டர்ல எழுதி இருந்தது…அத பாத்துட்டு தான் நான் உங்களை தேடி அந்த அட்ரெஸ்க்கு வந்தேன், ஆனா அப்போ அந்த வீட்டுக்கு நான் வந்தப்போ அங்க யாருமே இல்லை.. வீடு திறந்தே தான் இருந்தது…உள்ள வந்து பார்த்தா வீடு இருட்டா  இருந்தது,அங்க ஒரு ரூம்ல மட்டும் லைட் எரிஞ்சது, ஆனா அந்த ரூம் பூட்டி இருந்தது,ரூம்குள்ள யாரோ இருக்க அசைவு மட்டும் தெரிஞ்சது,  அந்த வீட்ல எதோ விபரீதம் நடக்குதுன்னு மனசுக்கு தோணினதால நான் அந்த ரூமை திறக்க போனேன், அப்போ தான் யாரோ மயக்க மருந்து தடவின கர்ச்சீப்பை என் முகத்துல வச்சிட்டாங்க, அப்புறம் நான் மயங்கிட்டேன், மயக்கம் தெளிஞ்சி முழிச்சி பார்த்தப்போ காம்பௌண்ட்க்குள்ள இருக்க மோட்டர் ரூம்ல அடச்சி வச்சிருக்கறது புரிஞ்சது, அங்க இருந்து வெளிய வந்து போலீசுக்கு கால் பன்னினேன்…போலீஸ் வந்ததும் மறுபடியும் வீட்டுக்குள்ள போய் பார்த்தப்போ தான் நீங்க நடுஹால்ல மயங்கி கிடந்திங்க, அந்த வீட்டை சர்ச் பண்ணி பார்த்ததுல அந்த வீட்ல இருந்த அப்பாவை அவரோட மகனே கொன்னுருக்கான்,அந்த பையனும் தற்கொலை பண்ணிகிட்டான்னு தெரிய வந்தது…. கொஞ்ச நாளா அந்த பையன் சைக்கோ  மாதிரி என்னென்னவோ பண்ணீனானு அந்த வீட்டுக்கு பக்கத்துல  இருந்தவங்க சொன்னாங்க…

 

அங்க இருந்து உங்களை ரெக்கவர் பண்ணி ஹாஸ்ப்பிடல் கொண்டு வந்தோம், இது தான் நடந்தது, இப்போ நீங்க ரெண்டு பெரும் நல்லா இருக்கீங்க…இனி எந்த பிரச்னையும் இல்ல…

“ஆனா, அந்த நோட் நான் எழுதலையே”

“விஜி நான் தாண்டி அந்த நோட்டை ஷர்மிக்காக எழுதினேன், எப்படியும் அவ நம்ம ரூம்க்கு வருவா, எதாவது பிரச்சனை ஆச்சுன்னா அவளுக்காவது நாம எங்க இருக்கோம்னு தெரியணும்னு எழுதி வச்சேன்”

“பவி நீ செஞ்சது சரி தான், அதனால தான் இப்போ நாம அந்த சைகோகிட்ட இருந்து தப்பிச்சோம், சாரி பவி, என் முட்டாள்தனத்தால உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்”

“விஜி நீ மட்டும் என்கூட இல்லனா, நான் உயிரோடவே இருந்திருக்க முடியாதடி, எனக்காக நீ அவன்கிட்ட எவ்ளோ சண்டை போட்ட, என்னை காப்பாத்த போராடின, அதுக்கு நான் தாண்டி தேங்க்ஸ் சொல்லணும் “

“இல்லடி பவி, நீ கூட நான் தப்பிச்சி போக சொன்னப்ப போன ஒண்ணா போவோம், இல்ல ஒண்ணா சாவோம்னு சொன்னியே, அதை என்னைக்குமே மறக்க மாட்டேண்டி”

“இல்ல பவி நீ கூட”

“ஹையோ போதும் நிறுத்தறீங்களா, இங்க ஒருத்தன் இருக்கறதை கொஞ்சமாவது கவனிங்க, உங்க நட்பு கடல்ல நானும் மூழ்கி போகிட போறேன், பவி இப்போவது நீ என் காதலை ஏத்துக்குவியா”

“விஜி ஓகே சொன்னா நான் ஏத்துக்கறேன்”

“விஜி நீ ஓகே சொன்னா பவி ஓகே சொல்லிடுவா, ஓகே சொல்லு விஜி”

“நோ, நோ, பவிக்கு ஓகேனா எனக்கும் ஓகே, சோ பவி தான் ஓகே சொல்லனும்”

“பவி நீயே சொல்லிடேன்”

“விஜி சொன்னா தான் நான் சொல்வேன்”

“மறுபடியுமா, ரெண்டு பேரும் ஓகே சொல்ல வேணாம், நான் கிளம்பறேன் ஓகே”

“ஏய், அருண், எனக்கு ஓகே தான், போயிடாத”

“அப்படி வா வழிக்கு”

அடிபட்ட காயம் மறந்து விஜியும் பவியும் சிரிக்க அருணும் தன் காதல் நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்தான்…

அப்பொழுது தான் விஜிக்கு கால் வந்தது…

“ஏய் விஜி, அது அருணோட அட்ரஸ் இல்லடி, வருணோடாதாம், அவன் ஒரு சைக்கோவாம், அங்க போயிடாதிங்கடீ”

அடி, அட்ரஸ் மாறிப்போனது எப்போ வந்து சொல்ற, உன்ன வந்து பேசிக்கிறோம்’ என்று போனை வைத்தவள் இனி எதற்கும் இவ்வளவு அவசரப்பட்டு இறங்கிவிட கூடாது என முடிவெடுத்துக்கொண்டாள்…

 சுபம்…

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

22 comments

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!