திருமாங்கல்யம் -2

0
(0)

“அம்மா நான் கிளம்பிட்டேன்…சாப்பாடும் ரசமும் வச்சிருக்கேன்…போட்டு சாப்ட்டுட்டு மறக்காம மாத்திரைய குடிச்சிரு…எல்லா வேலையும் முடிச்சிட்டேன்…பாத்திரம் மட்டும் கழுவாம கிடக்குது…சாய்ந்தரம் வந்து கழுவிக்கறேன்…நீபாட்டுக்கு வேலை செய்றேனு போய் ஈரத்துல நிக்காத…புரிஞ்சிதாம்மா…”

“சரிபிள்ள…நான் என்ன குழந்தையா…இப்படி புத்திமதி சொல்லிட்டு இருக்க…எல்லாம் எனக்கு தெரியும்…நீ பாத்து பத்ரமா போய்ட்டு வா”

“வயசானா தான் புத்தி மழுங்கிபோய்டுதே…குழந்தை மாதிரி தான் நடந்துக்கற”

“என்ன முனுமுனுக்கற”

“ஒன்னுமில்ல..நான் கிளம்பறேன்”

வேலைக்கு கிளம்பும்போதே மண்டைக்குள் ஆயிரம் யோசனை ஓடிகொண்டிருந்தது…எப்படி லீவ் கேட்பது…லீவ் கேட்டால் கிடைக்குமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் லீவிற்க்கு ஒரு நாள் சம்பளத்தை பிடித்துகொள்வார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது…

இந்த மாதம் அம்மாவிற்க்கு மருந்து செலவே எக்கச்சக்கம் ஆகிவிட்டது…ஏற்கனவே மொத்த சம்பளத்துக்கும் கணக்கு போட்டு செலவு செய்தாயிற்று…இன்னும் பத்து நாளை கூட எப்படியோ சமாளித்து விடலாம்… ஆனால் ஊருக்கு போய் வரும் செலவை எப்படி சமாளிப்பது…நிச்சயத்துக்கு போகும் இடத்தில் அக்கா ஏதாவது செலவு இழுத்துவிட்டால் என்ன செய்வது…கையில் காசில்லாமல் போனால் அசிங்கமாகிவிடும்….ஆபிஸில் அட்வான்ஸ் கேட்டால் கிடைக்குமா என்றும் தெரியவில்லையே…

இப்படி நிலைகொள்ளாமல் யோசித்துகொண்டே நடக்க ஒருவழியாக ஆபிஸ் வந்து சேர்ந்துவிட்டேன்…

ஆபிஸ்க்குள் நுழைந்ததில் இருந்து வேலைக்கு மேல் வேலை வந்துகொண்டே இருந்தது…

கம்ப்யூட்டரில் இருந்து பார்வையை நகர்த்தாமல் டைப் செய்து முடிக்கும் போதே மனமும் சோர்ந்து போயிருந்தது…வழக்கம்போல என் சோர்வை அறிந்தவன் போல் சுடசுட டீ கொண்டு வந்து கொடுத்தான் கோகுல்…

“அக்கா டீ எடுத்துக்கோ…இவ்ளோ சின்சியர் ஆகாதுக்கா…வந்ததுல இருந்து தண்ணி கூட குடிக்காம வேலை பார்த்துட்டு இருக்க”

“என்னடா தம்பி பண்ண…உன்ன மாதிரி தைரியம் யாருக்கு வரும்”என்று மெதுவாக கோகுலுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிக்கொண்டே கண்காணிப்பு கேமராவை பார்த்தேன்…அது எந்த சலனமும் இல்லாமல் எங்கள் செய்கைகளை ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தது…

என் பார்வை போகும் இடத்தை பின்தொடர்ந்து பார்த்த கோகுல் கேலி சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்…

பில்லிங் செக்சனில் வேலை செய்பவர்களில் பெரும்பான்மையானோர் ஆண்கள் தான் என்பதால் யாரிடமும் பெரிதாக எதுவும் பேசி கொள்வதில்லை…கோகுல் மட்டும் என் மௌனத்தை கலைத்து வம்பிழுத்து பேச வைப்பான்..வயதில் சின்னவன் என்பதால் அவன் கேலி பேச்சை சிரிப்போடு கடந்துவிடுவது வழக்கம்…

சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கி போனேன்…கோகுல் டீ கொண்டு வந்து கொடுக்கும்போது தான் மணி நாலாகிவிட்டதென்ற நினைவு வந்தது…

பொதுவாக லீவ் கேட்க மாலை வேளை தான் சிறந்தது…

“கோகுல், சார் இருக்காரா?”

“இருக்காருக்கா”

“டென்ஷனாவா இருக்கார்?”

“ஏன்க்கா…லீவ் கேட்க போறயா?”

“லீவ் மட்டும் இல்லை, அட்வான்சும் கேட்கனும்”

“அப்போ சூப்பர்”

“ஏன்டா, தர மாட்டாரா”

“அப்படி சொல்லலக்கா…உன் நல்ல நேரம் சார் நல்ல மைன்ட் செட்ல தான் இருக்காரு…உடனே போய் கேளு..கண்டிப்பா கிடைக்கும்”

கோகுல், சாருக்கு கொஞ்சம் மனதளவில் நெருக்கமானவன்..இங்கு வேலை செய்பவர்களிலேயே சாரை எதிர்த்து பேசும் துணிச்சல் கொண்ட ஒருவன் கோகுல் மட்டுமே…ஆனாலும் அவன் மீது எந்த நடவடிக்கையும் பாயாது…அந்த அளவுக்கு இந்த அலுவலகத்தின் செல்ல பிள்ளை அவன்…

சார் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பது கோகுல் மட்டுமே அறிந்திருந்த சூட்சமம்…

அப்படிப்பட்ட கோகுலே பச்சை கொடி காட்டியது நம்பிக்கையை தந்தது…

“மே கமின் சார்”

“எஸ்”

ஹாயாக பாட்டு கேட்டு கொண்டு கை விரலால் தாளம் போட்டபடியே அமர்ந்திருந்தார்…

மௌனமாக சில வினாடிகள் அவரையே பார்த்தபடி நான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தவராக என் முகத்தை பார்த்தார்…

அவரை சந்திக்க வந்திருப்பதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என்பது தான் அந்த பார்வையின் அர்த்தமாக இருந்தது…

“நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் வேணும் சார்”

தயங்கியபடியே நான் சொல்லி முடித்ததும் மீண்டும் பாட்டு கேட்கும் மோடுக்கு போய்விட்டார்…இப்பொது அவர் விரல்கள் தாளம் போடவில்லை…கண்கள் மூடியபடி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் பாடலை ரசித்து கொண்டிருந்தார்…

அந்த சில வினாடிகளுக்குள் என் உடல் நடுக்கத்தில் தாளம் போட்டு கொண்டிருந்தது…ஏனெனில் இந்த வேலை எனக்கு அவ்வளவு முக்கியமாக இருந்தது..இப்போதைய என் வாழ்வின் சிறு பிடிப்பு இந்த வேலை மட்டுமே…

போன மாதம் அம்மாவின் உடல்நிலை மோசமானதால் கொஞ்சம் அதிகமாகவே விடுப்பு எடுத்து கொண்டேன்…அப்பொழுதே இனி இதை போல் நடந்துகொள்ள கூடாதென்று கண்டிக்கப்பட்டேன்…நல்லவேளை தண்டிக்கப்படவில்லை..

இந்த மாதம் மறுபடியும் லீவ் கேட்டு நிற்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது..லீவுக்கே என்ன சொல்ல போகிறாரோ என்ற பதட்டத்தில் தவித்த எனக்கு அடுத்தது அட்வான்ஸ் வேறு கேட்டாக வேண்டுமே என்பது நினைவு வர ஏசி ரூமிலும் வியர்க்க தொடங்கியது…

“லீவ் போட்டு என்ன பண்ண போற?”

அவர் கேட்ட கேள்வியில் சற்று தடுமாறி பின் என்னை நானே நிதானமாக்கி கொண்டு பதில் சொன்னேன்…

“அக்கா பொண்ணுக்கு நிச்சயம் சார்…”வாக்கியத்தை பாதியோடு நிறுத்தி விட்டு அவரை பார்த்தேன்…

என் வீட்டின் முன்கதை அனைத்தும் ஏற்கனவே அவருக்கு பரிட்சயமானது தான் என்பதால் பெரிதாக ஒன்றும் விசாரணை நடத்தவில்லை..நான் சங்கடத்துக்குள்ளாகவும் இல்லை…

“நாளைக்கு மட்டும் தானே”

“ஆமா சார், வியாழன்லாம் வந்துடுவேன்”

“சரி”

அவர் லீவுக்கு சம்மதம் சொல்லியும் அந்த இடத்தை விட்டு நான் அசையாததால் மீண்டும் கேள்வியோடு என்னை பார்த்தார்…

“அட்வான்சா ரெண்டாயிரம் ரூபா கொடுத்தா உதவியா இருக்கும் சார்”

மீண்டும் சில வினாடிகள் யோசித்தவர் பணத்தை அக்கௌன்டன்டிடம் வாங்கி கொள்ள சொன்னதும் சந்தோஷத்தில் தலை முதல் கால் வரை ஜில் என்ற உணர்வு பரவியது…

இந்த மாதிரி நிகழ்வெல்லாம் எப்போதாவது தான் நடக்கும்..கோகுல் சொன்னபடியே நடந்துவிட்டது என்ற செய்தியை கோகுலிடம் சொன்னதும் வழக்கம்போல் அவன் அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டான்…

“அக்கா நான் ஒண்ணு கேட்பேன்..உண்மையை சொல்லணும்”

கண்காணிப்பு காமராவை காட்டி அவனை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினேன்…

“அச்சோ, போதும்க்கா…சும்மா பேச கூட இவ்ளோ பில்டப் பண்ணாத..அப்புறம் நான் கடுப்பாயிடுவேன் சொல்லிட்டேன்”

முகத்தை சீரியசாக வைத்து கொண்டு அவன் பேசியதை பார்த்ததும் சிரிப்பு வந்தது…

“சரி…இப்போ நீ என்ன உண்மைய தெரிஞ்சிக்கனும்”

“உனக்கு லீவும், பணமும் யாரால கிடச்சது”

“யாரால”

“நான் கேள்வி கேட்டா என்கிட்டயே திருப்பி கேட்கறயே”

“எனக்கு தெரியல அதான் கேட்டேன்..நீயே சொல்லேன்…யாரால கிடச்சது”

” என்னால தான்”

“அப்படிலாம் இல்லயே”

“இப்போ போனா லீவ் கிடைக்கும்னு நான் தானே சொன்னேன்”

“ஆமா, ஆனா நான் தானே போய் லீவ் கேட்டேன் ”

“கேட்டது வேணா நீயா இருக்கலாம்…கேட்க சொன்னது நான் தானே…அப்போ உனக்கு லீவும் பணமும் கிடைக்க நானும் ஒரு காரணம் தானே”

“ம்…அப்படியும் சொல்லலாம்”

“அப்படி வழிக்கு வா”

“இப்போ அதுக்கு என்ன?”

“இப்போ அதுக்கு என்னவா..உனக்கு லீவ் கிடைக்க காரணமான இந்த தம்பிக்கு ட்ரீட் குடுக்கணும் சிஸ்டர்”

“அவ்வளவு தானே…இதுக்கா இவ்ளோ பில்டப் பண்ண…”

“வேற எதுக்காம்…எப்போ, என்ன ட்ரீட் தர போறனு சொல்லு…நான் ரெடி ஆகிக்கறேன்”

“வேறென்ன…வழக்கம்போல உனக்காக பால் பாயாசம் செஞ்சி எடுத்துட்டு வரேன்…அதான் ட்ரீட்..ஓகே வா”

“என்னது…பால் பாயாசமா…அந்த விஷத்த குடிக்கறதுக்கு பேரு ட்ரீட்டா… இதையே இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் சொல்லி இந்த சின்ன குழந்தைய பயமுறுத்த போறீங்களோ…உங்க ட்ரீட்டும் வேணாம்…ஒண்ணும் வேணாம்.. ஆளை விடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டபடி ஓடிவிட்டான்..

என்னவோ தெரியவில்லை…இவனுக்கு மட்டும் பால் பாயாசம் விஷமாக தெரிகிறது…எல்லாவற்றிலும் விசித்திரமானவன் தான்..

இவனோடு பேசினாலே மனம் லேசாகி விடுவதை உணர முடியும்..அந்த அளவுக்கு தம்பியில்லாத குறையை தீர்க்க வந்தவன் போல் நடந்து கொள்கிறான் …

எப்படியோ லீவும் அட்வான்சும் ஒரு சேர கிடைத்ததில் மனம் நிம்மதியானது…வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்ல மாற்றம் வரபோகிறது என்ற நம்பிக்கை பிறந்தது…

ஆனாலும் மனதின் ஒரு மூலையில் கொஞ்சம் பயம் இருக்க தான் செய்தது…எப்போதெல்லாம் மனதுக்குள் இத்தனை நம்பிக்கையை உணர்கிறேனோ அப்போதெல்லாம் வாழ்வே அஸ்தமிக்கும் அளவுக்கு ஏதோ ஒன்று விபரீதமாக நிகழும் என்பது என் வாழ்வில் நிச்சயிக்கபட்ட ஒன்றாகவே அமைந்து விட்டது…

அன்றும் கூட அப்படி தானே நடந்தது…

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!