கொலை நகரம்! – போட்டி கதை எண் – 50

4.9
(18)

‘கொலை நகரம்!’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு ரா.ரவிபிரசாந்த்

                                              கொலை நகரம்!

வழக்கம்போல் அதே பௌர்ணமி இரவு! கடந்த ஆறுமுறை போல் ஏழாவது முறையாக இம்முறையும் அதே சிவப்பு மையில் எழுதப்பட்ட கடிதம் வந்திருந்தது. அடுத்தது யாரோ தெரியவில்லை, அவராக இருக்குமோ என்று மக்களில் சிலர் தூக்கத்தைத் தொலைத்து அச்சத்துடன் பேசிக்கொண்டு இருந்தனர்

“அதான் கபிலன் சிறையில் இருக்கிறானே, பின்ன அந்தக் கடிதம் எப்படி வந்துச்சு..?” என்று இருவர் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர். பவுர்ணமி நிலவின் ஒளியில் காவிரியாறு விளக்கொளியில் அலங்கரித்தது போல் இருந்தது. அதன் பக்கத்தில் உள்ள இடுகாட்டில் நான்கு நாய்கள் இறந்து கிடந்த ஒரு பூனையை உண்பதற்குப் போட்டிபோட்டுக் கொண்டிருந்தன.

மறுநாள், “நீ வான வில்லாக… அவள் வண்ணம் ஏழாக… அந்த வானம் வீடாக… மாறாதோ? மாறாதோ?”என்னும் தாமரையின் வரிகளில் வரும் அன்பில் அவன் பாடல் காதுகளில் ஒலிக்க, யாரோ கதவைத் தட்டுவது போல் சத்தம் கேட்டது. பாடலை நிறுத்திவிட்டுக் கண்ணன் கதவைத் திறந்ததும், அழகிய நிலவு போன்ற பொலிவுடைய இளம்பெண் ஒருத்தி வாசலில் நின்றாள். எங்கோ பார்த்தது போல் இருந்தாலும் கண்ணனால் அவள் யார் என்பதை அறிய முடியவில்லை. சரி, யாரென்று கேட்போம் என்று அவன் யோசிப்பதற்குள்ளேயே அவள்அண்ணன் இருக்கிறானா? என்று கேட்டு விட்டாள்

இவள் கபிலனைத் தேடி வந்திருப்பாள் போல! கபிலன், அவன்  கல்லூரியில் நெருங்கிய தோழி ஒருத்தியைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவானே… இவள் அவளாகத்தான் இருக்கும்” என்று நினைத்துக்கொண்டே, “உள்ளே வாங்க!” என்றான். 

இப்பவாவது உள்ளே வரச் சொன்னீங்களே!” என்று பயணக்களைப்பில் மெல்லிய குரலில் கயல் கூறினாள். மேசையின் அருகில் இருந்த சிவப்பு நிறப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படித்தாள். பின்னர், கண்ணன் தந்த காஃபியைக் குடித்துவிட்டு, டம்ளரைக் கீழே வைத்தாள்

நீங்கள் யார் என்று சொல்லவில்லையே? என்று கேட்டான் கண்ணன். 

உடனே அவள், “நான் கயல். கபிலனுடன் ஒன்றாகக் கல்லூரியில் படித்தேன். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். கல்லூரியில் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. நான் என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டு நேற்றுத் தான் வந்தேன். எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனால் கபிலனைச் சந்தித்து அவனுக்குப் பத்திரிக்கை கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்தேன்என்றாள்

கயல், வாசலில் கேட்ட அதே கேள்வியை மீண்டும் கண்ணனை நோக்கிக் கேட்டாள். அவனும் பெரும் தயக்கத்துடன் குரல் தழுதழுக்க, “கபிலன் ஜெயிலில் இருக்கிறான்” என்றான்

என்னது! கபிலன் ஜெயிலில் இருக்கிறானா? ஏன் என்னாச்சு? என்ன பண்ணினான் அவன், ஜெயிலுக்குப் போகிற அளவுக்கு? என்று அவனை நோக்கி கயல் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளில் திக்குமுக்காடினான்.

கண்ணனின் கண்களில் கண்ணீர்த்துளிகள் பெருக்கெடுக்க… உரத்த குரலில், “அவன் கொலை செய்துவிட்டான்! ஒரு கொலை, இரண்டு கொலை அல்ல மொத்தம் ஆறு கொலை செய்து உள்ளான்!” என்று மேலே பார்த்துக் கத்தினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத கயலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “நிச்சயமாக கபிலன் இந்தக் கொலைகளைச் செய்திருக்கவே மாட்டான். அவனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். யாரையும் மனதளவில்கூட புண்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் கிடையாது” என்றாள் கயல். இதை ஆமோதிப்பது போல் கண்ணன் தலையை அசைத்தபடியே,யாரோ செய்த தவறுக்குக் கபிலன் மாட்டிக்கொண்டு சிறைவாசம் அனுபவிக்கிறான். அவனை பலிகடா ஆக்கிவிட்டனர்” என்றான்

அப்போது வெளியே இருந்து தினமும் பேப்பர் போடும் தாமு அன்றைய செய்தித்தாளை வீட்டின்முன்பு வீசிவிட்டுச் சென்றான். அது வாசற்கதவில் பட்டுப் பனிப்பாறையில் சறுக்கி வருவது போல் வழுக்கிக் கொண்டு கதவின்முன் வந்து நின்றது

நேற்று மக்கள் எதிர்பார்த்தது போலவே அந்த ஏழாவது கொலையும் நடந்தது, கொலையுண்டவரின் படம், ரத்த வெள்ளத்தில் உடல் உறைந்து கிடந்த இடம் ஆகியவை பற்றிச் செய்தியாக வந்திருந்தது. அதைக் கயலிடம் காட்டி,இதுபோலத்தான் அந்த ஆறு கொலையும் நடந்தது. அதைக் கபிலன்தான் செய்தான் என்று அனைவரும் நம்பினர். அவனைக் கைது செய்தனர். அவன் இப்போது சிறையில் இருக்கிறான். இருந்தாலும் இந்தக் கொலை நடந்துள்ளது பாருங்கள்! என்றான். 

அப்படி என்றால் கபிலன் நிரபராதி! செய்யாத குற்றத்துக்கு உள்ளே இருக்கிறான். அப்படி என்றால் உண்மையான குற்றவாளி யார்? ஏன் கபிலன்மீது பழியைச் சுமத்த வேண்டும்? யார் அதனைச் செய்தது? என்ற உண்மையை எப்படிக் கண்டுபிடிப்பது? என கயல் பல கேள்விகளைத் தன்னை நோக்கியே கேட்டுக்கொண்டாள்

கண்ணனிடம் இதுவரை நடந்த 7 கொலைகள் எப்படி நடந்தன? அவை பற்றிய அனைத்துத் தகவலும், செய்தித்தாளில் வந்த செய்திகள்,கொலையானவர்கள் பற்றிய அவர்கள் நெருங்கியவர்கள் கூறுவது என எல்லாத் தகவலும் எனக்கு வேண்டும். காவல் நிலையத்தில் இருந்தும் சில தகவல் பெற வேண்டுமென்றாள்

கயல், என்னுடைய நண்பன் ராஜாவின் தந்தை காவல்துறையில்தான் பணிபுரிகிறார். என்மீது அளவுகடந்த அன்பு கொண்டவர் அவர். இந்தக் கொலைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையில் அவரும் ஒருவர். எனவே, அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்” என்றான்.

சரி! எவ்வளவு சீக்கிரம் நமக்கு தகவல் கிடைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் நமக்கு நல்லது” என்றாள் கயல்

சாதாரன அழைப்பு வேண்டாம். வாட்ஸ்அப்பில் கால் பண்ணு” என்றாள். அவனும்,சரி…” என்றபடி போனை எடுத்துஅங்கிள்நல்லா இருக்கிங்களா?” என்றான்.ம்ம்… சொல்லுப்பா கண்ணா! நல்லா இருக்கேன்ப்பா!” சொல்லு கண்ணா… என்ன விஷயம்? என்றார் அவர்.

உங்களுக்குத் தெரியாதது ஒன்னும் இல்லை அங்கிள். தப்பே செய்யாத கபிலன் உள்ளே இருக்கிறான். அவனை எப்படியாவது காப்பாத்தணும், அதுக்கு நீங்கதான் உதவணும்.”

அது எப்படிப்பா  அவன் நல்லவன்தான். எனக்குத் தெரியும். ஆனால் சாட்சி எல்லாம் அவனுக்கு எதிராகவே இருக்கே! அதுவும் ஆறாவது கொலை நடந்தப்ப அவன் அந்த இடத்திலதான் இருந்தான். அங்கே வெச்சுத்தான் அவனை கைது பண்ணாங்க. நான் எப்படி அவனைக் காப்பாத்துறது

ஆமா அங்கிள்! ஆனா ஏழாவது கொலை நேற்று நடந்திருக்கே!” 

ஆமா கண்ணா! அதப்பத்திதான் விசாரிச்சுகிட்டிருக்கோம்.

அங்கிள், கபிலனை உங்களாலதான் காப்பாத்த முடியும், இதுக்கு முன்னாடி நடந்த கொலைகள் பற்றிய தகவல் கொடுத்தீங்கன்னா  கொஞ்சம்  நல்லா இருக்கும்.” 

அதப்பத்தி நான் வெளியே எதும் பேசக்கூடாதுன்னும், விசாரிச்ச எந்த தகவலும் வெளியே தரக்கூடாதுனும் மேலிடத்தில் சொல்லியிருக்காங்கப்பா! எதுவா இருந்தாலும் வீட்டுக்கு இன்னிக்கு எட்டு மணிக்கு மேல வா,பேசிக்கலாம்!” என்று கூறிவிட்டு போனைத் துண்டித்து உரையாடலை முடித்துக் கொண்டார் ராஜாவின் தந்தை

எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வா பேசிக்கொள்ளலாம் என்று ராஜாவின் தந்தை கூறியுள்ளார். நான் சென்று வருகிறேன் கயல்” என்று கூறினான் கண்ணன். 

“சரி! சீக்கிரம்நம்மிடம் எவ்வளவு விரைவில் தகவல் கிடைக்கிறதோ நமக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்க வசதியாக இருக்கும்” என்றாள் கயல்

கபிலன் கைது ஆவதற்கு முந்தையநாள் வாங்கிக் கொடுத்த பைக்கை எடுத்துக்கொண்டு கண்ணன் பிள்ளையார் கோயில் அருகே உள்ள ராஜாவின் தந்தை வீட்டை நோக்கிச் சென்றான். வழியில் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த மாறனின் கண்ணீர் அஞ்சலி படத்தைப் பார்த்துக் கொண்டே போனான். அதன் அருகில் பெண்கள் கூட்டமாகபாவம் மாறன்! அவனே தங்கச்சி இறந்தசோகத்தில் இருந்தான்என்று பேசிக்கொண்டிருந்தைக் காதில் கேட்டுக்கொண்டே சென்றான். வீட்டை அடைந்ததும் செருப்பைக் காலிலிருந்து உதறிவிட்டு உள்ளே சென்றான்

அங்கு ராஜாவின் தந்தை மட்டும் இருந்தார். அவரை நோக்கி,ராஜா இல்லையா அங்கிள்? என்று கேட்டான். அவன் ஊருக்குப் போய் இருப்பதாகக் கூறினார். வழக்குக் குறித்து இருவரும் மவுனத்திலேயே உரையாடினர். ராஜாவின் தந்தை அருகில் இருந்த கருப்புப் பையைக் கண்ணனிடம் கொடுத்தார்

அவன்இது என்ன அங்கிள்?” என்று கேட்டான்.

“நான் அந்த கொலைகள் பற்றிய தகவல்கள் எதையும் அலுவலகத்திலிருந்து எடுக்க முடியவில்லை. ஆனால் அதைப் புகைப்படம் எடுத்து உள்ளேன். அந்த புகைப்படங்களின் பிரதி இருக்கிறது!” என்றார்

அவனும் அந்தக் கருப்புப் பையை எடுத்துக்கொண்டு விரைவாக வீட்டிற்குச் சென்று கயலிடம் காட்டினான். 

மொத்தமா ஆறு படங்கள் இருந்த கோப்புகள் இருந்தன. இறுதியாக இறந்த மாறனின் கோப்பு மட்டும் காவல்துறை இன்னும் இறுதி வடிவம் கொடுக்காமல் இருந்தது. ஆறு கோப்பில் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப்  படித்தாள் கயல். அதைப் படித்த அவளுக்கு ஒரே ஆச்சரியம்! நடந்த ஒவ்வொரு கொலைக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருந்ததை அறிந்து கொண்டாள்

அவனை நோக்கி,கண்ணா! நடந்த ஆறு கொலையில் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட அனைவரும் ஒரே நகரத்தைச் சேர்ந்த வெவ்வேறு பகுதியில் வசிப்பவர்கள். கொலையாளி இதில் ஒவ்வொருவரையும் கொலை செய்த விதம் ஒரே மாதிரி உள்ளது. ஆமா, ஒவ்வொருவரும் உயிர் போறதுக்கு முன்னாடியே அவங்களோட உறுப்புகள் செயலிழக்குற மாதிரி விஷம் கலந்த மதுவைக் குடிக்க வைத்து அதுக்கப்பறம் அவங்கள அரிவாளால் கழுத்துல இடமிருந்து வலமாகவும் மார்பில் ஒரு வெட்டும், வலது காலில் ஒரு வெட்டும், இடது கையில் ஒரு வெட்டும் வெட்டப்பட்டு இருக்கிறது. இதில் என்ன ஒரு முரண்பாடுனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான விஷ அளவு கொடுத்து இருக்கிறான்.  அதுவும் மதுவில் கலந்து!” என்றாள் கயல்

அது எப்படி சொல்றீங்க கயல்

“ஆமா... கண்ணா! முதலில் கொலை செய்யப்பட்ட செந்திலுக்கு அதிக அளவு சயனைடு உள்ள ஆப்பிள் விதைகள் நிறைய எடுத்து அதை எடுத்து அரைத்து அதை மதுவில் கலந்து கொடுத்து செயற்கையான மாரடைப்பு வரவழைக்கப்பட்டு பின் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளது. அதேபோலத்தான் மற்றவர்களுக்கும் அன்புக்கு நச்சுத்தன்மை அதிகமுள்ள பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ் என்னும் விஷத்தன்மை உள்ளதை மதுவில் கலந்து கொடுத்து உறுப்புகளைச் செயலிழக்க வைத்தும், மணிக்கு சயனைடை விட 74 மடங்கு நச்சுத்தன்மை அதிகமுள்ள சாரின்கேஸ்லினை மதுவில் கலந்து இதயத் துடிப்பின் வேகத்தைக் குறைத்தும், நந்தாவிற்கு  பாதரசத்தை மதுவில் கலந்து அதைப் பருக வைத்து அவரது கண்பார்வை நரம்பு மண்டலத்தைச் செயலிழக்க வைத்துக் கொலை செய்துள்ளனர். ரத்த ஓட்டத்திற்குத் தடை ஏற்படுத்தி கல்லீரல், சிறுநீரகம், அமோடாக்ஸின் விஷம் அதிகம் உள்ள பூஞ்சையை மதுவில்  ஊற வைத்து அந்த மதுவை மணிக்கு அளித்துள்ளனர். இதில் மாறனுக்கு முன் இறந்த கதிருக்குத்தான் அதிக விஷத்தன்மை தரப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் சயனைடை விட 260000 மடங்கு அதிக விஷத்தன்மை உள்ள பொலோனியத்தை மதுவில் கலந்து கொடுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான் மேலே சொன்ன மாதிரி ஒவ்வொருத்தருக்கும் விஷம் கொடுக்கப்பட்டு அவர்கள் உடல் உறுப்புகள் எல்லாம் செயலிழந்த பிறகுதான் அவர்களை வெட்டிக் கொன்றுக்காங்க!” என்றாள் கயல்.

ஆனால், கயல் பேப்பரில் இவர்கள் அனைவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள் என்று தானே செய்தி வந்துள்ளது! நேற்று இறந்த மாறனின் கொலைச் செய்தியில்கூட வெட்டிக்கொலை என்றுதான் இருக்கிறது!” என்றான் கண்ணன்

கயலும்,ஆமா! ஆனாசெய்தித்தாளில் வந்த செய்திகள் எல்லாம் கொலை நடந்த அடுத்த நாள் வந்தவை. அவையனைத்தும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள். கொலை நடந்த இடத்தில் உள்ள மக்கள் கூறியவை. இந்தக் கோப்பில் உள்ள தகவல்கள் காவல்துறையால் கைப்பற்றப்படும் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உடல் பரிசோதனையில் அவர் எப்படி, எப்பொழுது, எதனால், எந்த நேரத்தில் இறந்தார்கள் என்பதெல்லாம் கொண்டதாக இருக்கும். அந்தத் தகவல்தான் நம்மகிட்ட இருக்குது. இதில இருக்கிற தகவலை காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம்கூட தெரிவிக்காமல் மறைத்து இருக்காங்க” என்றாள்

“அப்போ மாறனையும் அப்படித்தானே கொலை பண்ணி இருப்பாங்க!” என்றான் கண்ணன்.

  இருக்கலாம்ஆனால் அவனோட உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அது தெரியும்அத சீக்கிரம் நாம வாங்கணும்! அதுக்கு முன்னாடி நமக்கு இருக்கிற சில கேள்விகளுக்கு பதில் கபிலனின் கிட்டதான் கிடைக்கும், அவனை நான் பார்க்கணும். உடனே அந்த காவல்துறை அதிகாரியை அழைத்து அனுமதி கேள்!” என்றாள் கயல். 

சரி நான் ராஜாவின் தந்தையிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன் கயல்என்றான் கண்ணன்.

“ஹலோ! சொல்லுப்பா கண்ணா! இன்னும் என்னப்பா அதான் நீ கேட்டதெல்லாம் கொடுத்தேனே!” 

அங்கிள், நீங்க கொடுத்த எல்லா கோப்புகளையும் அலசிப் பார்த்து விட்டோம். நிறைய கேள்விகள் இதிலிருந்து நாங்கள் தெரிந்து கொண்டோம். இப்ப நாங்க கபிலனைப் பார்த்தே ஆகணும்! அவன்கிட்ட சில கேள்விகளையும் கேட்கணும். கூடவே கடைசியா இறந்த மாறனின் கோப்பும் வேணும்!” 

“என்னப்பா நீ ஒரே வேலையா வச்சுக்கிட்டு இருக்க! உங்க அண்ணனை எல்லாம் பார்க்க முடியாதுப்பா…”

“ப்ளீஸ்அங்கிள்! நீங்க மனசு வச்சா முடியும்.”

சரிப்பா! பார்க்கிறேன்… காலையில பார்க்கிறதுக்கு அனுமதி வாங்கித் தாரேன். மாறனின் விஷயம் கொஞ்சம் சந்தேகம்தான் நான் சாயந்திரம் வேனா அவனோட கோப்புல ஏதாவது எடுக்க முடியுமானு பார்க்கிறேன்.” 

ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்!” என்று கூறி செல்போனைத் துண்டித்தான்

கயல்! நாளைக்குக் காலையில கபிலனைப் பார்க்க அனுமதி கிடைத்திடும்னு நினைக்கிறேன்” என்றான் கண்ணன்

சரி! காலையில் சீக்கிரம் கிளம்பலாம்.” 

மறுநாள் காலை… “கயல்! கிளம்பிட்டிங்களா?”

கிளம்பிட்டேன் கண்ணா! இதோ வந்துவிடுகிறேன்.” 

இருவரும் 20 நிமிடத்தில் சிறைச்சாலையை அடைந்தனர். 

அங்கே அறை எண் 205ல் 1121 என்ற சீருடை அணிந்த கபிலன் இருட்டிலிருந்து மின்மினி பூச்சியில் கிடைக்கும் ஒளி வெளிச்சத்தில் தெரிவதுபோல மங்கலான தோற்றத்தில் தெரிந்தான். எப்போதும் வேட்டி சட்டையிலேயே அண்ணனைப் பார்த்து வந்த கண்ணனுக்கு இந்தக் கோலம் அழுகையை வர வைத்துவிட்டது

கல்லூரியில் எப்பொழுதும் கலர் சட்டையிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவள் கயல். அவளால் இந்த நிலையில் அவனைப் பார்க்க இயலவில்லை

நா தழுதழுத்த குரலில்கயல்…! நீ இங்கே…” என்று பேசி முடிப்பதற்குள்ளேயே… 

நீ எதுவும் பேசாதே! எல்லாம் எனக்குத் தெரியும். நான் கேட்பதற்கு மட்டும் பதில் கூறு!” என்றாள் கயல்

ஆனால் கயல்சரி கேள்!” என்றான் கபிலன்

“எப்படி நீ கதிர் கொலை செய்யப்பட்டபோது அங்கு இருந்த? அதற்கு மட்டும் பதில் சொல்!” என்றாள்.

அதுவா…? என்று குரலை இழுத்தபடியே, அன்னிக்கு கதிருக்கு பிறந்தநாள். அவன் என்னை பிறந்தநாளை கொண்டாட வரச்சொல்லிக் கூப்பிட்டான். சரின்னு நானும் போனேன். ஆனா நான் போனப்ப அவன் கீழே விழுந்து கிடந்தான். நான் அவனைத் தூக்கி,கதிரு… என்னாச்சுடா? எந்திரிடா என்னாச்சு? என்னாச்சு? சொல்லுடா…” என்றேன். அவன் கிழக்கே கை நீட்டியபடியே இறந்து விட்டான். அப்போது ரோந்துப்பணிக்கு வந்த காவல் அதிகாரிகள் என்னைப் பிடித்துக்கொண்டு நீ தான் கொலை பண்ணி இருப்ப… வானு கூட்டிகிட்டு போயிட்டாங்கஇங்க வந்ததுக்கு அப்புறம் இதுக்கு முன்னாடி நடந்த 5 கொலையும் என் தலையில் கட்டிட்டாங்க…” என்று கூறியபடியே கதறினான்

அவனைத் தலையில் தடவிக்கொடுத்துத் தேற்றிய கயல், “எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாதே கபிலா!” என்று ஆறுதல் கூறியபடியே யோசித்துக் கொண்டே கிளம்பினாள்

இரவும் வந்தது. மாறனின் கோப்பும் கிடைத்தது, அதைக் கயலிடம் காட்டினான் கண்ணன். அதைப் படித்துப் பார்த்த கயலுக்கு ஒரே குழப்பம்

கண்ணா! முன்னர் நடந்த ஆறு கொலை நடந்ததுபோல ஏழாவது கொலை நடைபெறவில்லை. 6 பேருக்கும் விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் ஏழாவதாக இறந்த மாறனுக்கு விஷம் கொடுக்கப்படவில்லை. அரிவாளால் வெட்டி மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளான் மாறன்” என்றாள்

கண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்ன நடந்திருக்கும் என்று யோசிப்பதற்குள் ஏதோ ஒரு விஷயத்தை தவறவிட்டு விட்டோம் என்று மட்டும் தெரிந்தது. கண்ணனை அழைத்து இதைக் கூறினாள். அவனும் சிந்தித்தான். ஆனால் இருவருக்கும் எதுவும் பிடிபடவில்லை. இறுதியில் கண்ணன் கயலை நோக்கிக் கூறினான்.

கயல்! நாம ஒரு விஷயத்தை தவறவிட்டு விட்டோம். கொலை நடப்பதற்கு முன்னாடி காலை தோறும் ஒரு சிவப்பு மையில் எழுதப்பட்ட கடிதம் வந்தது. இது எல்லாக் கொலைகளிலும் நடந்த ஒற்றுமையான விஷயம்!” என்றான்

அட ஆமா கண்ணா… இத நாம எப்படி மறந்தோம்?” என்றாள்.

அந்தக் கடிதத்தின் பிரதியைத் தேடினான் அவன். அதைத் தேடிப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! முதல் ஆறு கொலைக்கு வந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து ஒன்றாகவும் இறுதியில் வந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து வேறாகவும் இருந்தது. இது அவர்களை இன்னும் குழப்பம் அடையச் செய்தது. கயலுக்கு அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்தை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது. ஆனால் எங்கே என்று யூகிக்க இயலவில்லை. சட்டென்று எழுந்து, கபிலனின் அறையிலுள்ள டிவி மேசையில் ஏதோ தேடினாள். 

கண்ணன், “என்னாச்சு கயல்?” என்றான். 

ஆனால், எதையும் காதில் வாங்காதது போல் தேடியவள், சிவப்புநிறப் புத்தகம் ஒன்றை எடுத்தாள். அது கயல் முதல் நாள் எடுத்துப் படித்த கபிலனின் பள்ளிக்காலத்தில் நண்பர்கள் ஒவ்வொருவரும் எழுதிக்கொடுத்த ஸ்லாம் புத்தகம். அதில் எட்டாவது பக்கத்திலிருந்த கையெழுத்து சிகப்பு நிற கடிதத்தில் இருந்த முதல் ஆறு கடிதக் கையெழுத்துடன் பொருந்தியது.

கயலுக்கும் கண்ணனுக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஆம்.அது இறுதியாக இறந்த மாறனின் கையெழுத்து. அப்படி என்றால் மாறன்தான் இவர்களைக் கொலை செய்துள்ளான்” என்றாள் கயல்.

“எப்படி இப்படி நடந்துச்சு?” என்று ஆச்சரியப்பட்டான் கண்ணன்.

“மாறன்  எப்படிப்பட்டவன்? என்று கேட்டாள் கயல்.

மாறன் நன்றாகப் படித்தவன், வேதியியல் துறையில் பட்டம் பெற்று ஆய்வக உதவியாளனாக உள்ளான், தாய் தந்தை இல்லை, ஒரே ஒரு சகோதரி தான். அவளும் 7 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாள்” என்றான். 

ஏன், எதற்காகத் தற்கொலை செய்துகொண்டாள்? என்றாள் கயல்.

எனக்கு சரியா தெரியல ஆனா ஊர்ல எல்லாரும் வேலைக்கு போன இடத்தில அவளுக்கு தொந்தரவு கொடுத்தாங்கன்னும் அதைப் பொறுத்துக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்றாங்க…”

…! அப்படியா! அவ எங்கே வேலைக்குப் போனாள்?” என்று கேட்டாள் கயல்.

அதுஅவள் மணியின் தம்பி ருத்ரன் நடத்தி வந்த துணிக்கடைக்கு வேலைக்குச் சென்றாள்.”

அங்கேயா?… அப்போ இரண்டு பேர் குற்றவாளியா இருப்பாங்கன்னு தோணுது… இல்லைன்னா இந்த இரண்டு பேரில் ஒருவர் கொலை பண்ணி இருப்பாங்கமுதல்ல மாறன். அவன் ஒரு வேதியியல் உதவியாளர். அதை வைத்துப் பார்க்கிறப்ப அந்த கொலையெல்லாம் வேதியியல் துறையில் மிகவும் கொடூரமான விஷப் பொருட்கள் கொண்டு கொலை நடந்திருக்கத  பொருத்திப் பார்க்க முடியுது” என்றாள் கயல்

என்ன சொல்றீங்க கயல்? புரியலையே!” 

ஆமா அவன் தங்கை வேலைக்குப் போன இடத்தில் இந்த ஆறு பேரும் சேர்ந்து அவளுக்கு தொந்தரவு கொடுத்து இருக்காங்க. அந்தத் தொந்தரவு தாங்காமல் தற்கொலை பண்ணி இருக்காஅதுக்குப் பழி வாங்கணும்னு மாறன் கொலை செய்து இருக்கான்” என்றாள் கயல்.

அப்போ  மாறனைக் கொலை செய்தது யார்?” 

மாறனைக் கொலை செய்தது மணியின் தம்பி ருத்ரன் தான்! அவன் தன் அண்ணனின் கொலைக்குப் பழிதீர்க்க மாறனைக் கொலை செய்து இருக்கிறான்” என்றாள்.

அது சரி! எப்படி ருத்ரனு சொல்றிங்க?” 

அந்த ஆறு கொலைகள் விஷப்பொருட்களை வைத்துத்தான் நடந்தது. ஆனால் கடைசி கொலை அப்படி நடக்கலை. ஒவ்வொரு முறையும் அந்தக் கடிதம். அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்தில் இருந்து கடைசிக் கடிதம் வேறுபட்டுள்ளது. மாறனின் கொலை பாணியைத் தெரியாத ருத்ரன் அவன் பாணியில் கொலையைச் செய்தால் கொலையைக் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக் கொலை செய்துள்ளான். இந்த இடத்தில்தான் அவன் தவறு செய்துவிட்டான். ருத்ரன் வலது கைப்பழக்கம் உடையவன். ஆனால் மாறன் இடதுகைப் பழக்கமுடையவன். ஒவ்வொரு கொலையிலும் வலமிருந்து இடமாக வெட்டப்பட்டுள்ளது. ஆனால் மாறனை இடமிருந்து வலமாக வெட்டி உள்ளான். இடப்பக்கம் காயம் ஆழமாகப் பதிந்துள்ளது” என்றாள் கயல்

உடனே, இதனை ராஜாவின் தந்தையிடம் தெரிவிக்க வேண்டும்.” அவரை அழைக்கும்படி கூறினாள்.

கண்ணன் அவரை போனில் அழைத்து,அங்கிள்! வணக்கம். மாறன்தான் அந்த ஆறு கொலையையும் செய்துள்ளான், அவன் அண்ணனைக் கொலை செய்ததற்குப் பழிவாங்க மாறனை  ருத்ரன் கொலை செய்துள்ளான்” என்றான். 

அவர்,என்னது…? ருத்ரனா…? அவனை இப்பதான்ப்பா யாரோ கொலை பண்ணி இருக்காங்க…” என்றார்.

ஐயோஇன்னொரு கொலையா…? என்றாள் கயல் ஆச்சரியத்துடன்…!

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

39 comments

 1. S.KARTHI KEYAN - Reply

  கடைசி வரி வரை படிக்க தூன்டிய அற்புதமான நாவல் ….

 2. D. Serin - Reply

  அருமையான கதை …. சிறப்பு ??

  • ரமேஸ் எழுமாத்தூர் A. - Reply

   அருமையான கதை வாழ்த்துக்கள்

 3. Reni - Reply

  அருமையான திருப்பங்களுடன் கூடிய நல்ல கதை?

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!