அன்பு வளையம் ஆச்சி- போட்டி கதை எண் – 25

0
(0)

‘அன்பு வளையம் ஆச்சி’ என்ற சிறுகதையை எழுதியவர் திரு எஸ்வி. ராகவன்

                                       அன்பு வளையம் ஆச்சி

“காரைக்குடி செட்டிநாடு சேர்ந்த ‘உமையாள் ஆச்சி மெஸ்’ பிள்ளையார்பட்டி கோயில் அருகே மிகவும் பிரபலம். அங்கே இட்லி மிருதுவாக இருக்கும். குழந்தை எளிதாக சாப்பிடலாம். அதற்கு சாம்பார் கூட மூன்று வகை சட்னி.. வாசம் மணக்கும்.‌ ருசி மயக்கும்”… என்றார் டிராவல்ஸ் டிரைவர் சரவணன்.

தொடர்ந்து “முப்பது வருடங்களுக்கு முன் சாதாரண பெட்டி கடையாய் ஆரம்பம்… இன்றும் பெரிய மெஸ்சாய் தொடர்கிறது.. அவருக்கு வயதாகி விட்டது. அவர் மகன்கள் விநாயகம் மற்றும் கணேசன் இப்போது பார்த்து கொள்கிறார்கள். கிச்சன் மகள் கற்பகம் மற்றும் மருமகன் குமார் வசம்‌ சிறப்பான நிர்வாகம்”…என்றார் டிரைவர்

“நிச்சயம் அவங்களை பாக்க வேண்டும்… வண்டியை அங்கே நிறுத்துங்கள்” என்றார் ரமேஷ்

கோயில் சுற்றுலா வந்த வண்டி முதலில் டிபன் சாப்பிட்டு போகலாம் என்று மெஸ் வாசலில் நின்றது.

முதலில் பிள்ளையார்பட்டி விநாயகர் படம் வரவேற்றது. ஒருபுறம்.பக்தி பாடல்.. மறுபுறம் ஊதுபத்தி மணம்..‌இன்னொரு புறம் சாம்பார் வாசம் அனைவரையும் இழுத்தது..‌

வாசற்படியில் காலை வைத்தவுடன்..”வாங்க சார்.. நான் கணேசன்.. இந்த ஓட்டல் ஊழியர். மொத்தமாக எத்தனை பேர்? உக்காருங்க” என சொன்னார்

“சென்னையில் இருந்து ராமேஸ்வரம் தஞ்சாவூர் சுற்றுலா போகிறோம். இங்கே பிள்ளையார் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோம் நாங்கள் எட்டு பேர். டிரைவர் சரவணன் உங்கள் மெஸ் பற்றி சொன்னார்.. நீங்கள் முதலாளி தானே ஊழியர் என சொல்கிறீர்கள்” என்றார் ரமேஷ்

அனைவரும் அமர்ந்த பிறகு.. “முதலாளி எப்போதும் எங்க அம்மா தான்.. நாங்கள் எல்லோரும் ஊழியர்.. இப்போது டிபன்.. இட்லி தோசை ஊத்தப்பம் பூரி சப்பாத்தி பொங்கல் வடை இருக்கு.. என்ன சாப்பிட போறீங்க ‌‌“ என கேட்டார் கணேசன்.

“இட்லி பொங்கல் வடை ஓன்பது செட் டிரைவருக்கும் சேர்த்து…” என்றார் ரமேஷ் “பிறகு அனைவருக்கும் காபி..”.. என்றார்.

ஆனால் உணவு ருசி இழுக்க வயிறு மேலும் கேட்க.. மூவர் இன்னும் இரண்டு இட்லி‌‌..‌ ஒருவர் தோசை..‌ஒரு குழந்தை பூரி.. என கேட்டு பில் ஏறிக்கொண்டு இருந்தது.

அப்போது ரமேஷ் மெல்ல கணேசனிடம் பேசினார். உங்கள் அம்மாவை பார்க்க முடியுமா?” என்று கேட்டார்.

உடனே கணேசன் அவரை கடையின் பின்புறம் அழைத்து சென்றார். அங்கே ஒரு கூன் விழுந்த பாட்டி சட்னி அரைப்பதை மேற்பார்வை பார்த்து கொண்டு இருந்தார். ருசித்து பார்க்காமல்.. “இன்னும் கொஞ்சம் தேங்காய் உப்பு மிளகாய் போடு.. நிறம் இல்லை”.. என்றார்.

ரமேஷ் அவரின் கால்களில் விழ அந்த அம்மா.. அதிர்ச்சியுடன் “யாருப்பா நீ.. எழுந்திரு”..என்றார்.

“என்னை உங்களுக்கு மறந்து போய் இருக்கும். ஆனால் எனக்கு நினைவிருக்கு.. பள்ளியில் படிக்கும் போது காலை மாலை டிபன் தருவீர்கள்.. எனக்கு அப்பா இல்லை.‌ கஷ்டம் உணர்ந்து என் அம்மாவிற்கு உங்கள் பெட்டி கடையில் வேலை தந்தீர்கள்.. நீங்கள் போட்ட பிச்சையில் படித்து.. இன்று சென்னையில் அரசு நிறுவனத்தில் வேலை.‌செய்கிறேன். நான் எப்போது சாப்பிட வேண்டும் என்றாலும் உங்களை நினைத்து நன்றி தெரிவித்து விட்டு சாப்பிடுவேன்… ஆனால் முதலில் இந்த மெஸ் பக்கத்து தெருவில் பள்ளி அருகில் இருந்தது‌.” என்றார்

அதற்கு கணேசன் “அங்கே இடம் பத்தவில்லை. அத்தோடு பள்ளி அருகில் கடை வைக்க பிரச்சினை.‌ இங்கே கோயில் அருகே வைத்தால் வியாபாரம் அதிகமாகும் என மாற்றி விட்டோம்”,, என்றார்

“உங்கள் அண்ணன் விநாயகம் என்னோடு பத்தாவது வரை படித்தார்.. பிறகு நான் சென்னைக்கு மாமா வீட்டில் படிக்க அம்மாவுடன் சென்று விட்டேன்.” என்றார் ரமேஷ் அவரே தொடர்ந்து.

“இருமுறை நீங்கள் விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளிக்கு உடை வாங்கி தந்ததை என்  அம்மா சாகும் வரை சொல்லி கொண்டே இருப்பார்கள்..” என்றார்.

அப்போது கடைக்கு சென்று இருந்த விநாயகம் வர.. ரமேஷ் அவரை கட்டி கொள்ள பழைய நிலைமைக்கு வர வெகு நேரம் பிடித்தது. அனைவருக்கும் கண்ணில் ஆனந்த கண்ணீர்.

பிறகு ரமேஷ் கையில் இருந்த “பில் தொகை மிகவும் குறைவு..” என கேட்க..

“விலை எல்லாம் ஆச்சி உத்தரவு” என்றார் கணேசன்

“இன்னும் மாறவில்லை..” என ரமேஷ் சொல்ல

“என்றுமே மாற மாட்டேன்..” என்றார் ஆச்சி சிரித்து கொண்டே

பிறகு ரமேஷ் அனைவரிடம் விடைபெற்று சென்றார். வண்டி கிளம்பியது.

சிறிது நேரத்தில் ஆட்டோவில் மூன்று பேர குழந்தைகள் பள்ளியில் இருந்து வர ஓடி வந்து ஆச்சியை கட்டி கொண்டார்கள்…

குழந்தைகள் மூவரை பார்த்து ஆச்சிக்கு ஒரே மகிழ்ச்சி.. அருகே அழைத்து “இந்தா சாக்லேட் பிஸ்கட் “ என எடுத்து தந்தாள்…‌

“காபி இல்லை டீ வேணுமா? ஓட்டலில் வாங்கி குடிங்க.. பிஸ்கட் தொட்டு சாப்பிடுங்கள். இரண்டு மணிக்கு சாப்பாடு.” என்றாள்.

அதற்கு விநாயகம் அம்மாவை திட்டினார். “எங்களுக்கு எப்பவும் பராம்பரிய கலாச்சாரம் உணவு. குழந்தைகளுக்கு சாக்லேட் பிஸ்கட்..” என கேட்டார்

அதற்கு ஆச்சி..”காலம் மாறி போச்சு.. நாமும் மாற வேண்டும். உங்களுக்கு வயசாச்சி..” என சொல்ல

“எங்களுக்கு வயசாச்சி.. உனக்கு கூன் விழுந்து வயசாகலையா?. அந்த காலத்தில் நல்ல சாப்பாடு நீ இதுவரை கண்ணாடி போடலை.. நல்லா காது கேக்குது. எனக்கு மூக்கு கண்ணாடி.நீ வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் மணி பனிரெண்டு” என்றார் விநாயகம்.

“இது எப்பவும் வேலை செய்து கொண்டே இருக்கும் உடம்பு.. ஒரே அடியா மூச்சு நின்னா தான் ஓயும்.. என்றார் ஆச்சி

தொடர்ந்து.. “ஏதோ ரஷ்யா போராம்.‌ விலைவாசி ஏறி போச்சுன்னு கணேசன் சொன்னான்.. சரியா? என்று விநாயகத்தை கேட்க

“ஆமாம்..போன் வருடம் கொரோனா இப்ப போர்.. ஏதாவது பிரச்சினை.. விலைவாசி உயர்வு..” என அலுத்து கொண்டார் விநாயகம்.

“நானே சொல்லலாம்னு இருந்தேன்..இட்லி விலை ஐந்து ரூபாய்.. தோசை பொங்கல் விலை பத்து ரூபாய் ஏற்றலாம். மத்த ஓட்டலில் ஏற்றி விட்டார்கள் அத்தோடு பால் சர்க்கரை விலை அதிகமாக உள்ளது. காபி விலையை கூட ஏற்ற வேண்டும். இனிமே சாம்பார் சட்னி அளவோடு தர வேண்டும்..” என கணேசன் சொல்ல..

ஆச்சி ”இரண்டு ரூபாய் இட்லி பத்து வருடங்களாக இருந்தது ‌போன வருடம் முதல் ஐந்து ரூபாய்.. குறைந்த விலை நஷ்டம் என்றால் இரண்டு ரூபாய் ஏற்றலாம்.. ஆனால் பத்து ரூபாய் ரொம்ப அதிகம்.. பொது மக்களுக்கு பாதிப்பு. முக்கியமா இங்க சாப்பிடும் பள்ளி குழந்தைகள். அத்தோட பணம் பொருள் போதும்னு யாரும் சொல்ல மாட்டான்.. ஆனால் உணவு.. வயிறு நிரம்பி விட்டால் போதும் என்று தான் சொல்லுவான். வாய் நிறைய வாழ்த்துவார்கள். கொஞ்ச நேரம் முன்னாடி ரமேஷ் என்ன சொன்னான்.” என்றார்

விநாயகம். “எல்லா ஓட்டலிலும் விலையேற்றம்..” என மீண்டும் ஆரம்பம் செய்ய

“சொன்னதை செய்.. எல்லா ஓட்டலிலும் பொருள் இருக்கும். அதில் குறைந்த விற்பனை.‌ ஆனா இங்கே அதிக வியாபாரம். காரணம் விலை குறைவு. தரம் நிறைவு…” என்றாள் ஆச்சி

“குழந்தைகளுக்கு பீஸ் கட்ட வேண்டும்” என இருவரும் கேட்க..

“கல்லா பெட்டி உங்க கிட்டே.. நல்ல காரியத்தை பற்றி சொல்ல வேண்டாம்.. உடனே செல் போன் மூலம் கட்டுங்கள்..” என்றார்.

விநாயகம் மற்றும் கணேசன் ஆச்சரியம். ஆச்சி அனைத்து புள்ளி விவரங்கள் அத்துப்படி. புதிய விஷயத்தை கற்று கொள்ள வேண்டும்…உடனே உபயோகம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்..‌ மற்றவர்களுக்கும்.சொல்லுவார். கணினி முதலில் வாங்கி கல்லூரியில் படித்த கணேசனை கற்று கொள்ள சொன்னாள். பிறகு விநாயகம் கற்று கொண்டார்.

அப்போது மகள் கற்பகமும் மாப்பிள்ளை குமாரும் குழந்தை மற்றும் காய்கறிகளுடன் வண்டியில் வந்து இறங்கினார்கள்.

“வாம்மா. பள்ளி முடிந்ததா?”.என் பேத்தியை வரவேற்றாள் ஆச்சி

அவள் காலில் விளையாட்டு நேரத்தில் அடிபட்டதாக சொல்ல துடித்து போய் பேத்தியை அருகே அழைத்து.. தேங்காய் எண்ணெய் தடவினாள்.. ரொம்ப வலிக்குதா? என் தடவி கொடுத்து விட்டு..

மகள் கற்பகத்திடம் “வரும் போது ஆஸ்பத்திரியில் காட்டி வர வேண்டியது தானே.. “ என கேட்டார் ஆச்சி

அவள் சிரித்தாள். பிறகு “சின்ன சிராய்ப்பு காயம்.. இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை? பாட்டியும் பேத்திக்கு வேற வேலை இல்லை” என்றாள்

அந்த பேத்திக்கும் பிஸ்கட் சாக்லேட் தந்தார் ஆச்சி

“எல்லாரும் எப்போதும் நல்லா இருக்க நினைச்சா.. நாமளும் நல்லா இருப்போம்”.. என்றார் ஆச்சி கணேசனிடம்

கணேசன் அம்மாவை வணங்கி விட்டு உள்ளே போக

அதற்குள் மதிய உணவு விற்பனை வர எல்லோரும் கடையை நோக்கி நகர்ந்தனர்

நிறைவு பெற்றது.

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!