அன்பு ஒன்றே..

5
(1)

வழக்கமாக ஜன்னல் இருக்கை கிடைக்காது, பெரிதாக ஆசைப்படுவதுமில்லை….அவ்வப்போது அமையும் ரயில் பயணங்களில் புத்தகத்தை அலசி ஆராயவே நேரம் போதுமானதாக இருக்கும்…பெரும்பாலும் தனித்த பயணங்களாகவே அமைவதால் கையில் ஒரு புத்தகம், ஒரு பாட்டில் தண்ணீர்…இருக்கையில் அமர்ந்ததும் வாசிப்பு ஆரம்பமாகிவிடும், சிறிது நேரத்தில் கண்களை மூடி மனதை வாசிக்க தொடங்கிவிடுவேன்….

இந்த முறை ஜன்னல் இருக்கை காத்திருந்தது, நண்பர் முன்பதிவு செய்துகொடுத்ததால் அமைந்திருக்குமோ, மனதுக்குள் ஒளிந்துகொண்டிருந்த குட்டிப்பையனுக்கு சின்னதாக சந்தோசம் போல, மெல்ல துள்ளி குதித்தான்….வழக்கம்போல புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்….

பக்கத்து இருக்கையில் ஒரு இளம்பெண் வந்து அமர்ந்தாள்….எதிர்புறம் குழந்தைகளும் லக்கேஜுமாக ஒரு குடும்பம்…சிறிது நேரத்திலேயே இளம்பெண்ணும் குழந்தைகளும் சகஜமாக பழக ஆரம்பித்துவிட்டனர்…மேலோட்டமாக கவனித்து கொண்டிருந்த நான் மெல்ல ஷேக்ஸ்பியரின் கிங் லியரில் மூழ்கிவிட்டேன்…

மகளின் உண்மையான அன்பை புரிந்துகொள்ளாத தகப்பனால் ஒட்டுமொத்த சாம்ராட்சியமும் சரிந்து கொண்டிருந்ததை ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள் வலுவூட்டிக்கொண்டிருக்க ஒரு நிமிடம் மனம் கனத்து புத்தகத்தை மூடிவைத்து ஜன்னலின் வழி வெளிக்காற்றை உள்ளிழுக்க தொடங்கியிருந்தேன்….

அன்பை புரிந்துகொள்ளாத அபத்தம் பெரும்வலியை ஏற்படுத்தும் என்பதை கண்கூடாக கண்டு அனுபவித்து விளைவுகளை சந்தித்திருந்ததால் மனம் புத்தகத்தின் உள்புகாமல் நினைவுகளின் உள் புகுந்துவிட்டது….

கிங் லியரை போலவே ஒரு காலம் இருந்திருக்கிறேன், அதற்காக காலம் முழுவதும் வருந்தினாலும் நடந்து முடிந்த எதையும் மாற்றிவிட முடியாது…உன்னதமான அன்பை உதாசீனம் செய்தது இன்று எனக்கே வலிக்கும்போது என் ராமுவுக்கு எப்படி இருந்திருக்குமோ….

ராமு, அவன் என் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்குட்டி…என் தங்கையின் ஆசை நாய்குட்டி…. ஏனோ நாய் என்றாலே பிடிக்காத நான் தங்கைக்காக ராமுவை வீட்டில் சகித்துக்கொண்டேன்….ஆனால் ராமுவுக்கு தங்கை சீதாவை காட்டிலும் என்மீது பாசம் அதிகம், அதை உணராமலே ராமுவை வெறுத்துக்கொண்டிருந்தேன்…

வீட்டின் உள்ளே நுழைந்ததும் காலை நக்கிக்கொண்டு பின்னாலேயே வரும் ராமுவை தங்கையின் முன் கொஞ்ச வேண்டிய நிர்பந்தம், இலையையென்றால் அழுவாள், அவள் அழும்போது மூச்சடைத்துவிடும், சீதாவை அழவிடாமல் கவனித்துக்கொள்வதை என் பொறுப்பாக்கிவிட்டார் அம்மா…அதனால் ராமுவையும் கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பும் என் மேல் இருந்தது…

போலித்தனமாக நான் காட்டிய பரிவுகளை ராமுவால் பிரித்துப்பொருள் உணர்ந்துகொள்ள முடியவில்லை, காட்டிய பரிவை பாசம் என்று எடுத்துக்கொண்டு பின்னாலே சுத்த ஆரம்பித்தது, சீதா இருந்தால் ஒரு மாதிரியும் இல்லாவிட்டால் ஒருமாதிரியும் நடந்துகொண்ட என் சூட்சமம் கூட என் ராமுவுக்கு புரியவில்லை….

ஒரு நாள் திடீரென சீதாவுக்கு கடுமையான காய்ச்சல், முழுவதுமாக சோர்ந்து போயிருந்த அவளை டாக்டர் பெட்டில் சேர்க்க சொன்னார், அவர் சீதாவின் காய்ச்சலுக்கு ஏதேதோ விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்,அதில் எனக்கு புரிந்தது வீட்டில் வளர்க்கும் நாயின் மேல் உள்ள உன்னியாலும் காய்ச்சல் வந்திருக்கலாம் என்பது தான்….

சீதாவின் மேல் இருந்த பாசம், அவளின் நிலை… ராமுவை இன்னுமின்னும் வெறுக்க தூண்டியது…சீதா வீட்டிற்கு வரும்போது ராமு வீட்டில் இருக்கவே கூடாதென்று மனதுக்கு தோன்றியது, அம்மாவும் அப்பாவும் சீதாவை கவனித்துக்கொள்வதில் ஹாஸ்ப்பிட்டலுக்கும் வீட்டிற்குமாக அலைந்துகொண்டிருக்க வீட்டில் தனியாக சில நேரம் இருக்கவேண்டியதானது….அந்த நேரத்தில் தான் ராமுவை தண்டிக்க ஆரம்பித்தேன்….

காலை நக்கியபடி பின்னே வந்தவனை எட்டிஉதைத்தேன், பட்டினி போட்டேன், வீட்டை விட்டு துரத்தினேன், மீண்டும் வந்தான், மீண்டும் துரத்தினேன், மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தான்…அதுவே ஆத்திரத்தை தூண்டியது…

அப்போதெல்லாம் தெரு நாய்களை ஏற்றிக்கொண்டு போக வண்டி கொண்டு வருவார்கள், அடித்து வளையத்தில் மாட்டி இழுத்து கொண்டு போவார்கள்…

ராமுவையும் தெரு நாயென இழுத்துக்கொண்டு போகச்சொன்னேன், அதை சொன்னதற்காகவே பல நாள் அழுதிருக்கிறேன்….அவர்கள் பிடித்ததில் சின்ன காயங்களோடு வளையத்தில் மாட்டாமல் தப்பித்து வீட்டுக்குள் வந்து ஒளிந்து கொண்ட ராமுவை மீண்டும் வெளியே இழுத்துக்கொண்டு வந்தேன்…

அதை நினைக்க நினைக்க இந்த நொடி கூட நெஞ்சம் கனமாகிறது, தன்னை காத்துக்கொள்ள அடைக்கலம் நாடி வரும் உயிரை அடித்து துரத்துவது எத்தகைய கொடுமை..அதை அன்று என் ராமுவுக்கு செய்திருக்கிறேன்…

வளையத்தில் மாட்டி வண்டியில் அடைக்கும்போது என்னை பார்த்த ராமுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது….அந்த நிமிடம் அதன் மனக்குமுறல் என்னவாக இருந்திருக்குமோ, ராமுவை துரத்திவிட்ட நிம்மதி அன்று கிடைத்தது..

சீதாவும் குணமாகி வீட்டுக்கு வந்தாள், ராமுவை நாய்வண்டி ஏற்றிக்கொண்டு போனதை அறிந்த அம்மா அப்பாவுக்கு சின்ன வருத்தம் இருந்தாலும் திட்டலோடு விட்டுவிட்டார்கள், சீதாவின் உடலும் மனமும் சோர்ந்திருந்ததால் ஆரம்பத்தில் ராமுவின் நினைவு வரவில்லை, உடல் தேறியதும் சிறிது ரகளை செய்யதாள், போக போக ராமுவை முழுதாக மறந்துவிட்டாள்…

ஆனால் ராமுவின் நினைவு என்னை மட்டுமே முழுதாக ஆட்டிப்படைத்தது, ராமுவை அடித்து வெளியே துரத்தியது இரவிலும், கனவிலும் பயமுறுத்தி தூக்கத்தை களவாடியது…

வீட்டிற்குள் வந்ததும் என் காலை சுற்றி கொண்டு உறவாடும் ராமுவின் பிரிவு வேதனை கொடுக்க ஆரம்பித்தது, அவனை நான் ஆழ்மனதில் நேசித்திருக்கிறேன், அவன் அன்பு என்னை ஆட்கொண்டிருக்கிறது என்பது போகப்போக தான் புரிந்தது…

அதற்கு பின் தெருவில் எந்த நாயை பார்த்தாலும் என் ராமுவாகவே தெரிந்தான், கடைத்தெருவில் நாயை பார்த்தால் பொறை வாங்கி போட்டு அது பசியாற்றிக்கொள்வதை கண்டு ரசித்துவிட்டு வருவேன், அந்நொடியில் ராமுவின் நினைவு மனதை கலங்கடிக்கும்…

எத்தனை முறை அழுதாலும் என் மீது அன்பு வைத்த ராமு திரும்ப வருவது சாத்தியம் இல்லை, ராமுவின் கடைசி துளி கண்ணீர் கண்முன்னே வந்து போவதும் மாறப்போவது இல்லை…

யாரோ மேலே பலமாக இடிக்க ராமுவின் நினைவிலிருந்து வெளிய வந்த நான் கண் திறந்து பார்த்தால் எதிர்புறம் அமர்ந்திருந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டே என்மீது விழுந்தது தெரிந்தது, நிலையைப்புரிந்துகொண்டு அவசரமாக தூக்கிவிட்டு “அடி எதும் படலையே என்று கேட்டேன்”

“இல்ல அங்கிள், சாரி” என்று கூறிவிட்டு சடனாக என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு சிரித்துக்கொண்டே அவன் அம்மாவிடம் ஓடினான்…

குழம்பியிருந்த மனம் அமைதியானது, தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் கிங் லியரை படிக்க ஆரம்பித்திருந்தேன்…

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

Average! 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 comments

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

error: Content is protected !!